Published : 17 Aug 2019 11:24 AM
Last Updated : 17 Aug 2019 11:24 AM

ஞெகிழி பூதம் 29: ஞெகிழித் தடை - நாம் கற்க வேண்டியவை

கிருஷ்ணன் சுப்ரமணியன்

ஞெகிழி குறித்து உலக நாடுகள் சிலவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது:

ஆப்பிரிக்கா: பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளாகக் கருதப்படும் ஆப்பிரிக்க நாடுகளும்கூட ஞெகிழித் தடையைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதாக ஐ.நா. கருதுகிறது.

கென்யா ஞெகிழிப் பயன்பாட்டை 2017-ல் முழுவதுமாகத் தடைசெய்தது. உலகில் மிகக் கடுமையான அபராதத் தொகை கென்யாவில்தான் விதிக்கப்படுகிறது. தடையை மீறி ஞெகிழியைத் தயாரித்தாலோ, இறக்குமதி செய்தாலோ, வியாபாரம் செய்தாலோ, ஏன் பயன்படுத்தினால்கூட நான்கு ஆண்டுகள் சிறை அல்லது 38,000 டாலர் அபராதம். தடையை கொண்டுவந்த இரண்டே ஆண்டுகளில் நாடே சுத்தமாக உள்ளது. இதே நாட்டில்தான் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மலத்தைகூட ஞெகிழிப் பைகளில் கழித்துத் தூக்கி எறியப்படும் அளவுக்கு மோசமான பிரச்சினை இருந்தது.

டான்சானியா நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கூட ஞெகிழி பொருட்களைக் கொண்டுவர வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. மீறிக் கொண்டுவரப்படும் பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படுகின்றன. ருவாண்டா நாடு 2008 முதல் எடுத்துவரும் ஞெகிழித் தடை நடவடிக்கைகளின் பயனாக, ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக தூய்மையான நகரம் என்று அதன் தலைநகரம் கிகாலி பெயர்பெற்றுள்ளது.

ஐரோப்பா: சூழலியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் ஐரோப்பிய மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் 2021-க்குள் ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் ஞெகிழிப் பொருட்களை முழுவதுமாக நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன்படி 28 நாடுகள் ஞெகிழித் தடை, மறுசுழற்சி உள்ளிட்ட சட்டங்களை இயற்றியுள்ளன.

பெரும்பாலும் ஞெகிழிப் பைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மறுசுழற்சிக்கு வரி விதிப்பது போன்ற பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஜெர்மனியில் கிரீன் டாட் (Green dot) என்ற புதிய நடைமுறை வந்துள்ளது. பொருட்களைப் பொதியும் உறைகளில் இந்தச் சின்னம் பொறிக்கப்படும். இந்தச் சின்னம் இடம்பெற்ற உறைகளை மறுசுழற்சி செய்யும் செலவை, அந்த பொருளைத் தயாரிக்கும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

இந்த முறை காரணமாக தேவைக்கு அதிகமாக பொருட்களை உறைகளால் பொதிவதை நிறுவனங்கள் குறைத்துக்கொண்டன. அத்துடன் ஒரு பொருளின் பயன்பாட்டுக்குப் பிறகு உருவாக்கும் குப்பையைக் கையாளும் செலவை, உற்பத்தியாளர்களே ஏற்றுக்கொள்வதும் நடைமுறைக்கு வந்தது.

அமெரிக்கா: அமெரிக்கா போன்ற பெரிய நாட்டில் கலிபோர்னியா, ஹவாய் ஆகிய இரண்டு மாகாணங்களில் மட்டுமே ஞெகிழித் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக அளவில் ஞெகிழித் தடையைச் சொற்பமாக நடைமுறைப்படுத்திய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இருந்தபோதும் கலிபோர்னியாவில் நீரோடைகள், ஆறுகள், மக்கள் வசிக்கும் இடங்களில் ஞெகிழிக் குப்பை கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாகாணத்தில் தனிநபருக்குச் சராசரியாக மூன்று பைகள் முன்பு பயன்பாட்டில் இருந்தன, தடைக்குபின் வெறும் 0.3 ஆக அது குறைந்துள்ளது. அமெரிக்கா போன்ற பொருளாதார வலிமை படைத்த நாடு சுற்றுச்சூழல் சார்ந்து ஆக்கபூர்வமான கொள்கையைக் கொண்டிராதது உலகுக்குப் பேரிழப்பே.

ஆஸ்திரேலியா: நாடு முழுவதுமே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் உறிஞ்சான் (ஸ்டிரா), தட்டு போன்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் அனைத்து ஞெகிழிப் பொருட்களுக்கும் தடை உள்ளது. இந்தத் தடையால் கடைக்கு வரும் பத்து பேரில் ஒன்பது பேர் தாங்களே பைகளை எடுத்துவருகிறார்கள்.

நியூசிலாந்து: ஒரு மாதத்துக்கு முன்புதான் நாடு தழுவிய ஞெகிழித் தடை கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அதற்கு முன்னரே பல பல்பொருள் அங்காடிகள் தாமாகவே முன்வந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பைகளை மறுத்து வந்தன.

கட்டுரையாளர்,
துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x