Published : 17 Aug 2019 10:41 AM
Last Updated : 17 Aug 2019 10:41 AM

காயமே இது மெய்யடா 46: தாகத்துக்கே தண்ணீர்

போப்பு

நாம் உண்ணும் உணவு சாரமாகப் பிழியப்படுகிறது (1). சாரத்திலிருந்து ரத்தம் உருவாகிறது (2). உடலுக்கு ஆற்றலை எடுத்துச் செல்லப் போதுமான ரத்தம் உருவான பின்னர் அது சதையாக மாற்றம் பெறுகிறது (3). நமது இயக்கத்திற்குத் தேவையான சதையளவு இதுபோதும் என்று முடிவான பின்னர் அது கொழுப்பாக மாற்றப்படுகிறது (4). கொழுப்பு எலும்பாகவும், எலும்பின் உட்கூறாக அமைந்துள்ள மஜ்ஜையாகவும் (6) அதன் அளவு மற்றும் திறனின் அடிப்படையில் விந்தணு/சினை முட்டையும் உருவாக்கப்படுகிறது (7).

இந்த ஏழு அடுத்தடுத்த செயல்பாடுகளில் கிட்டத்தட்டப் பாதிச் செயல்பாடுகள் சிறுநீரகத்துடன் தொடர்புடையவையாக இருக்கிறது. அதனால்தான் நோய்கள் பெருகி விட்ட தற்காலத்தில் கிட்னி பெய்லியர், கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்டேசன், கிட்னி ஸ்டோன், டயாலிசிஸ் போன்ற சொற்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

பராமரிப்பு அவசியம்

இன்றைக்குப் பரவலாக இருக்கும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையதும் சிறுநீரகமே. நாற்பது வயதைக் கடந்து விட்டபின் வரும் முதுகு வலியானது நேரடியாகவோ மறைமுகமாகவோ சிறுநீரகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, சிறுநீரகத்தைப் பராமரிக்கும் அம்சத்தில் எப்போதும் நாம் சிரத்தை உடன் இருக்க வேண்டும்.
சிறுநீரகத்தைப் பராமரித்தல் என்பது வேளாவேளைக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதோ வாட்ஸப் வல்லுநர்கள் சொல்வதுபோல அன்றாடம் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பதோ அல்ல. சிறுநீரகம் ஒன்றும் பீங்கான் கோப்பை அல்ல நீர் ஊற்றிக் கழுவிவிட.

அது உயிர்ப் பொருள். நம்முடைய புற அறிவின் உத்தரவில்லாமலே இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்ப் பொறி. தாகம் என்ற உணர்வு வந்து நமது நாக்கினில் தீண்டாத வரைக்கும் நாம் அருந்துகிற ஒரு மடக்கு (sip) நீரும்கூட சிறுநீரகத்துக்குக் கூடுதல் வேலைப் பளுவாகத்தான் ஆகிவிடும். தாகவுணர்வு தோன்றாமல் நீர் அருந்தக் கூடாது என்பது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரை அது சிறுநீரகத்துக்கு ஆற்றல் வழங்கும் நீர் தானா என்ற கவனமும் இன்று நமக்கு அவசியமாகி விட்டது.

எது நல்ல நீர்?

இன்று உள்ளோடிய கிராமங்கள்வரை பெரு நிறுவனங்களின் லேபிள் ஒட்டிய பிளாஸ்டிக் புட்டி நீர்கள் புகுந்துவிட்டன. பாதுகாப்பானது என்று நினைத்து நாம் பருகும் நீர் யாவும் உயிரற்ற, உயிர் நீக்கிய சப்பையான நீரே. புட்டி நீர் அனைத்தும் உயிரற்றவை என்று நிறுவ நாம் எந்த சோதனையும் செய்ய வேண்டியதில்லை. பிளாஸ்டிக் கேன்களில் உள்ள நீரில் ஒருபோதும் பாசி பிடிப்பதில்லை. புழுத் துடிப்பதில்லை.

வாயில் ஊற்றியதும் நேராக உள்நோக்கி இறங்காமல் வாயின் உட்பகுதியையும், பற்களையும் பசைநாரால் வருடியதைப் போல நழுவி நிதானமாக இறங்குமானால் அது நல்லநீர். குடித்த ஓரிரு நிமிடங்களில் தொண்டையில் வறண்ட உணர்வோ, வெப்பம் தாக்கிய உணர்வோ ஏற்பட்டால் அப்பொழுது குடித்த நீரினால் சிறுநீரகத்துக்கு ஒரு பலனும் இல்லையென்று பொருள். சிறுநீர் கழிக்கும்போது சுதந்திரமான உணர்வும் சிறுநீர் வேகமாகப் பிரியும் உணர்வும் ஏற்பட்டால் அது சிறுநீரகத்துக்கு ஆற்றலைக் கொடுத்த நீர் என்று புரிந்துகொள்ளலாம்.

மழை நீர் எனும் அமிர்தம்

இது மழைக் காலம். மழை பெய்யுமானால் (?) பெய்யத் தொடங்கிப் பத்து நிமிடம் கழித்து காற்றின் மாசு நீங்கி சுத்தமான கூரைப் பரப்பிலிருந்து பொழியும் நீரைக் குடித்துப் பாருங்கள். எனது நண்பரொருவர் வீட்டில் அனைவரும் ஆண்டு முழுதும் சேமிக்கப்பட்ட மழைநீரையே குடிக்கிறார்கள். மழைநீரில் சமையல், மழைநீரில் குளியல், துணித் துவைத்தல் என அனைத்துக்குமே மழைநீர் தான். மழைநீரில் சளி பிடிக்கும் என்பது உண்மையாக இருந்தால், அவர்களுக்கு அன்றாடம் ஜன்னி பிடித்து ஆட்டி வைக்க வேண்டும். ஆனால், சளித் தொல்லையிலிருந்தும் மூச்சிரைப்பு நோயிலிருந்தும் தானும் தன் மகனும் விடுபட்டதற்கு மழைநீரே காரணம் என்று அவர் சொல்கிறார். மழைநீர் அமிழ்தம் என்ற சொல் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய உண்மையே.

ஓய்வின்றி உழைக்கும் சிறுநீரகம்

நமது உடலின் கழிவேற்றம் நிகழ்ந்த ரத்தத்தை 24 மணிநேரமும் சுத்திகரித்து நல்ல ரத்தத்தை இதயத்துக்கு ஏற்றும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது சிறுநீரகம். அது ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு தன்னையும் முறையாகச் சுத்திகரித்துக் கொள்ள முடிந்தால் மட்டுமே ரத்தத்தை முழுமையாகச் சுத்தம் செய்ய முடியும். உள்ளுறுப்புகள் சிதைந்து மயக்க அல்லது கோமா நிலையில் உள்ள ஒருவரது சிறுநீரக (urethra) குழாயைச் சிறுநீர்ப் பைக்கு வெளியே தனியாக மற்றொரு பையில் விட்டிருப்பார்கள்.

அந்தக் குழாயில் சிறுநீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது உணவு, செரிமான இயக்கம், மூளைச் செயல்பாட்டிற்குரிய கல்லீரல் அனைத்தும் உடலின் புற இயக்கத்துக்கு ஏற்ப முழு ஆற்றலுடன் செயல்பட முடியாத நிலையிலும் சிறுநீரகம் தன் பணியைக் கருமமே கண்ணாகச் செய்து கொண்டிருக்கிறது என்பதைத்தான்.
அத்தனைப் பொறுப்புணர்வுடன் இயங்கும் சிறுநீரகத்துக்கு உரியக் கைமாறு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். அதனை நாம் எந்தளவுக்குத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x