Published : 17 Aug 2019 10:30 AM
Last Updated : 17 Aug 2019 10:30 AM

இதயங்களை இதமாக்கும் மருத்துவர்

ச.ச.சிவசங்கர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத் தில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் மருத்துவர் கோபி நல்லையன் (39). தற்போது மதுரையில் வசித்து வரும் இவர், அவரது குடும்பத்தின் முதல் மருத்துவர்.
பொறியாளர் ஆக வேண்டும் என்பதே இவரது ஆசை, லட்சியம். மருத்துவரானால் சேவை செய்யலாம் என்று பெற்றோர் சொன்னதால், மருத்துவம் படித்தார். இன்று கிராமப் புறங்களில் இருக்கும் பல குழந்தை களுக்கு நல்வழி அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தைகளுக்கான மருத்துவர்

அடிப்படையில் குழந்தைகளுக் கான இதய அறுவை சிகிச்சை நிபுண ரான இவர் ஆரம்பத்தில் பெங்களூரு, ராய்பூர் போன்ற ஊர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணி புரிந்தார். அப்போது சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை நுட்பமாகக் கவனித்துள்ளார், CHD (Congenital Heart Disease) எனப்படும் இதய கோளாறு உள்ள பல குழந்தைகளை மிகத் தாமதமாகச் சிகிச்சைக்கு அழைத்து வரப்படுவதை உணர்ந்தவர் அதற்கான காரணத்தை அறிய முனைந்தார். விழிப்புணர்வு போதாமை, தவறான வழிகாட்டுதல், பொருளாதார சிக்கல் போன்றவையே அதன் காரணங்கள் என்று அறிந்துகொண்டார்.

நாலு பேருக்கு உதவ வேண்டும்

பணியிலிருந்து விலகி, மதுரைக்கு வந்தபின் திண்டுக்கல், தேனி, சிவகாசி போன்ற தென் மாவட்டங்களில் உள்ள கிராமங் களில் முகாமிட்டு அங்குள்ள மக்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி குழந்தைகளின் இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். பொதுவாகக் குழந்தைகளின் இதயக் கோளாற்றுக்குக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். இந்த பெருந்தொகை யைக் கிராமப் புறத்தில் வாழும் ஏழைகள் திரட்டுவது சாத்தியமல்ல.

இதனால், LITTLE MOPPET HEART FOUNDATION எனும் தன்னார்வ சேவை மையம் ஒன்றை அமைத்து அதன் மூலம் கிராமப் புற குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து வருகிறார் மருத்துவர் கோபி. இதுவரை 23 முகாம்களும் 216 அறுவை சிகிச்சைகளும் நடந்துள் ளன. இதனால் பலனடைந்த குழந்தைகளின் பெற்றோர் இந்த அமைப்புக்கு தன்னார்வலர்களாகவே மாறிவிட்டனர்.

“நாலு பேருக்கு உதவ வேண்டுமென மருத்துவம் படித்தேன். இதயம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதே என் வேலை. நான் வேலை செய்த அனைத்து ஊரிலும் குழந்தைகள் மிகவும் பரிதாபமாகத்தான் வருவார்கள். நோயின் கடைசிக் கட்டத்தில் வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது. இதய கோளாறு இருப்பது தெரிந்தவுடன் சிகிச்சை எடுக்க வேண்டும். மாறாக, பிறகு பார்க்கலாம் என்ற கவனக்குறைவின் விளைவே உயிரைக் காப்பாற்ற முடியாமல் போவதற்குக் காரணம்” என்று சொல்கிறார் மருத்துவர் கோபி நல்லையன்.

தோள் கொடுத்த தோழர்கள்

இந்த பயணத்தைத் தொடங்குவதில் அவருக்குப் பெரும் தயக்கம் இருந்தது. அவருடைய மனைவி பக்கபலமாக இருந்து பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளார். இலவச அறுவை செய்வது எளிதல்ல என்றபோதும், அவருடைய நண்பர்கள் ஆதரவாக இருந்துள்ளனர். ”நண்பர்கள் மூலம் கிடைத்த பணத்தில்தான் முதலில் சிகிச்சையைச் செய்தேன். இன்று மருத்துவ காப்பீடுகள், தன்னார்வலர்கள் மூலம் கிடைக்கும் பணம் ஆகியவற்றைக்கொண்டு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. முக்கியமாக அறுவைசிகிச்சை செய்யப்படும் குழந்தைகளின் குடும்பத்திடமிருந்து பணம் வாங்குவதில்லை” என்று அவர் சொல்கிறார்.

இது போன்ற முகாம்களை அனைத்து இடங்களிலும் நடத்த வேண்டும், பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை வழங்க வேண்டும் என்பது போன்றவையே அவருடைய எதிர்காலத் திட்டங்கள். இன்று அவரிடம் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் சொந்தமாக இல்லாதபோதும், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி திடமாக அடியெடுத்து வைக்கிறார், கோபி நல்லையன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x