Published : 15 Aug 2019 12:55 PM
Last Updated : 15 Aug 2019 12:55 PM

கிருஷ்ணனான ஷஃபிகுதீனும் ராதையான ஷபானாவும்!

வா.ரவிக்குமார்

மார்கழி இசை, நாட்டிய விழாவுக்கு முன்பாக மியூசிக் அகாடமியில் நடத்தப்படும் `ஹெச்.சி.எல். மிட்-ஃபெஸ்ட்’ பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மிகப் பிரசித்தம். அண்மையில் நடந்த அந்தத் திருவிழாவில் இடம்பெற்ற ஒரு தம்பதியின் நடனம் எல்லோரையும் வசப்படுத்தியது. கேரளத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த அவர்களின் பெயர் ஷஃபிகுதீன், ஷபானா.

கலையும் கடவுளும்

மொழி, இனம், காலம், நிறம் போன்ற வேற்றுமைகளைக் கடந்தது கலை என்பதை ஷஃபிகுதீனும் ஷபானாவும் தங்களின் நடனத்தின் மூலம் அன்றைக்கு நிரூபித்தனர். மோகன கல்யாணி ராகத்தில் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் `சித்தி விநாயகம் சேவகம்’ துதியோடு தொடங்கிய அவர்களின் நடனத்தில் வார்த்தைகளுக்கேற்ற அபிநயமும் தாளத்துக்கேற்ற நாட்டிய முத்திரைகளும் இறை அனுபூதியை சட்டென்று அரங்கத்துக்குள் பரப்பியது.

நாராயணனுக்கே சமர்ப்பணம்

கல்யாணி ராஜாராம் படைத்த `நாராயணா என்று நான் அழைக்கும் போது…’ படைப்பை நிருத்யோபகாரமாக, நாராயணனின் பெருமைகளை, பராக்கிரமத்தை, பக்தர்களுக்கு அருளும் அனுபவங்களை தெளிந்த நீரோடையாய் நடனத்தில் கொண்டுவந்து பக்திச் சாகரத்தில் மூழ்கடித்தனர் நாட்டிய மணிகள். அடுத்து ஜெயதேவரின் அஷ்டபதி `சா விராஹே’ பாடலுக்கு அவர்களின் நடனம் உச்சம் தொட்டது. கிருஷ்ணனைப் பிரிந்து ராதை படும் துன்பம், மன்மதனின் அம்புகளிலிருந்து கிருஷ்ணனை காப்பதற்கு ராதை செய்யும் உபாயம்…

என அடுக்கடுக்காக இறைக் காதலின் உன்னதத்தை கிருஷ்ணன், ராதையாகவே மாறி நமக்குக் காட்சிப்படுத்தினர் ஷஃபிகுதீனும் ஷபானாவும். சங்கராபரணம் ராகத்தில் ஒரு பதம், சுவாதி திருநாள் தனஸ்ரீ ராகத்தில் அமைத்த ஒரு தில்லானாவுடன் நிகழ்ச்சியை முடித்தனர். ஜெய ராமநாதனின் நட்டுவாங்கம், ஹரிபிரசாத்தின் வாய்ப்பாட்டு, டாக்டர் விஜயராகவன், சசிதரனின் வயலின், புல்லாங்குழல், பையனூர் ராஜனின் மிருதங்கம் ஆகியவை நாட்டிய நிகழ்ச்சியின் தரத்தை மெருகூட்டுவதாக அமைந்தன.

மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலை

முஸ்லிம் சமூகத்திலிருந்து புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞராக உருவெடுத்தவர் கேரளாவைச் சேர்ந்த ஹஸ்னா பானு. அவருடைய மகள்தான் ஷபானா.
“நான்கு வயதிலேயே என்னுடைய தாயிடமிருந்து நடனத்தை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். சிறுவயதில் எனக்கு நடனத்தை முழு நேரச் செயல் பாடாகக் கொள்வதில் பெரிதும் தயக்கம் இருந்தது. ஆனால் ஷஃபிகுதீனை திருமணம் செய்தபின் நிலைமை மாறியது.

அவர்தான் என்னுடைய நடனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு காரணமாக இருந்தார். அவருடைய அறிவுறுத்தலின்படியே சாந்தா தனஞ்ஜெயன், தனஞ்ஜெயன் ஆகியோரிடம் நடனம் கற்றுக்கொள்ள தொடங்கினேன். மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலை. பாரம்பரியமான எங்களுடைய நடனத்தின் மூலம் நாங்கள் அதை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். நடனத்திலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எனக்கு முன்னுதாரண தம்பதியாக இருப்பவர்கள் தனஞ்ஜெயன், சாந்தா தனஞ்ஜெயன்தான்” என்றார்.

கலையைப் பார்க்க
`லென்ஸ்’ தேவையில்லை

ஷஃபிகுதீனுக்கு நடனத்தில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்தது. பள்ளி, கல்லூரி விழாக்களில் மாணவர்களுக்கு அப்போதே நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நடன முறைகளை அமைத்துக் கொடுப்பதில் புகழ்பெற்றிருந்தார்.
“என்னுடைய 19 வயதில் பாரம்பரியமான பரதநாட்டியத்தை பயில வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக கேரளத்தில் பல இடங்களில் ஆண்கள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். நடனம் ஆடிய பல ஆண்களும் நாயகி பாவத்திலேயே ஆடினர். ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் ஆடியவர் ஆண் நடனக் கலைஞருக்கு உரிய உடல்மொழியோடு ஆடினார்.

அவர் நடனம் கற்றுக்கொண்டது கலாஷேத்ரா என்பதை அறிந்தேன். அதன்பின்தான் கலாஷேத்ராவில் பயின்ற கமலா தேவியிடம் நடனம் பயின்றேன். பின்னாளில் தனஞ்ஜெயன், சாந்தா தனஞ்ஜெயன் தம்பதியரிடம் நடனம் பயின்றேன். என்னைப் பொறுத்தவரை மதம், மொழி என்று எந்த லென்சையும் அணிந்துகொண்டு கலையைப் பார்க்க வேண்டியதில்லை. தற்போது திருப்புனித்துரா ஆர்எல்வி இசை நுண்கலைக் கல்லூரியில் பரதநாட்டியப் பயிற்சியாளராக இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x