Published : 15 Aug 2019 11:39 AM
Last Updated : 15 Aug 2019 11:39 AM

இறைத்தூதர் சரிதம் 08: ஆகாயத்திலிருந்து ஏணியைக் கொண்டுவாருங்கள்

சனியாஸ்னைன் கான்

குரைஷ் தலைவர்கள் மீண்டும் இறைத்தூதரைச் சந்தித்தார்கள். “நமது இயற்கை வளங்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பது உனக்குத் தெரியும். நம்மிடம் தண்ணீர் இல்லை. அதனால், உன்னை இறைத்தூதராக அனுப்பிய இறைவனிடம் பிரார்த்தனை செய்து இங்கிருக்கும் மலைகளை அகற்று; ஏனென்றால், அவற்றால்தான் நாம் மழையில்லாமல் தவித்துகொண்டிருக்கிறோம். உன் இறைவனிடம் வேண்டி, நமது நிலப்பரப்பை இன்னும் விசாலமாக்கு; அத்துடன், சிரியாவிலும் ஈராக்கிலும் ஓடும் ஆறுகளைப் போல இங்கேயும் ஆறுகளை ஓடச் செய்!” என்று சொன்னார்கள் குரைஷ் தலைவர்கள்.

“இறந்துபோன நம் மூதாதையர்களை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும்படி உன் இறைவனை வேண்டிக்கொள். நம் இனத்தின் மூத்தோர்களில் உண்மையானவரான குஸாய் இபின் கிலாப்பை உயிர்தெழவை.
அவர் உயிர்த்தெழுந்து வந்தவுடன் நீ உண்மையானவனா இல்லையா என்பதை அவரிடமே கேட்போம். இந்த வகையில், நீ இறைவனின் உண்மையான தூதரா, இல்லையா என்பதை நாங்கள் தெரிந்துகொள்வோம்” என்றனர் அவர்கள்.

“நான் உங்களிடம் இதற்காகவெல்லாம் அனுப்பி வைக்கப்படவில்லை. அல்லா எனக்கு அளித்த விஷயத்துடன் மட்டுமே உங்களிடம் வந்திருக்கிறேன்,” என்றார் இறைத்தூதர். அவர் குர் ஆனைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
“என்னிடம் அல்லா வழங்கியவற்றை, உங்களிடம் அளித்துவிட்டேன். அவற்றை ஏற்றுக்கொண்டால், அல்லாவின் ஆசிர்வாதங்களை இனிமேல் நீங்களும் பகிர்ந்துகொள்ளலாம். அவற்றை மறுத்துவிட்டால், அல்லாவின் ஆணை வருவதற்காகக் காத்திருப்போம். உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் அவரது முடிவு என்ன என்பதற்காகக் காத்திருப்போம்,” என்றார் இறைத்தூதர்.

“நாங்கள் கோரியதையெல்லாம் எங்களுக்காகச் செய்வதற்கு நீ தயாராக இல்லையென்றால், அவற்றை உனக்காகச் செய். உன் இறைவனிடம் வேண்டி, நீ சொல்வதெல்லாம் உண்மைதான் என்று சாட்சி சொல்வதற்கு ஒரு மலக்கை (தேவதை) உன்னிடம் அனுப்பச் சொல்” என்றனர் குரைஷ் தலைவர்கள். “தோட்டங்கள், மாளிகைகள், தங்கம், வெள்ளி புதையல்களை உனக்கு வழங்குமாறு உன் இறைவனிடம் கேள்! நீ இப்போது செய்யும் பணிகளிலிருந்து உன்னை அப்படித்தான் விடுவித்துகொள்ள முடியும். நாங்கள் எப்படிச் சந்தைகளுக்குச் செல்கிறோமோ அப்படித்தான் நீயும் சந்தைகளுக்குச் செல்கிறாய். வாழ்வாதாரத்தைத் தேடி எங்களைப் போலவே நீ வேலை செய்கிறாய்; இந்த வசதிகளையெல்லாம் செய்துகொடுக்கும்படி நீ இறைவனிடம் கேள். ஒருவேளை, அவர் உனக்கு இந்த வசதிகளையெல்லாம் செய்துகொடுத்தால் நீ இறைத்தூதர் என்று சொல்வதை ஒப்புக்கொள்கிறோம்” என்றனர் அவர்கள்.

“இவை எவற்றையும் நான் செய்யப் போவதில்லை. என் இறைவனிடம் இவற்றையெல்லாம் கேட்கும் மனிதன் நானில்லை,” என்றார் இறைத்தூதர். “அல்லா என்னை அனுப்பியுள்ளார். எளிமையான எச்சரிக்கையாளனாகவும் நற்செய்தியைத் தாங்கிச் செல்பவராகவும் என்னை அனுப்பியுள்ளார். என்னை நான் அனுப்பப்பட்டுள்ள நோக்கத்திற்காக ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு இந்த உலகிலும் இனிவரும் உலகிலும் வெகுமதி கிடைக்கும்,” என்றார் இறைத்தூதர்.

“அப்படியென்றால் நீ ஒன்று செய். நீ ஏன் எங்கள் மீது இந்த ஆகாயத்தின் ஒரு பகுதியை விழ வைக்கக்கூடாது? அப்படிச் செய்யாதவரை நாங்கள் உன்னை நம்பப்போவதில்லை” என்றனர் குரைஷ் தலைவர்கள்.
“இது முழுக்க முழுக்க அல்லாவின் கையில்தான் இருக்கிறது. அவர் உங்களுக்கு அப்படிச் செய்ய வேண்டுமென்று நினைத்தால், நிச்சயம் அதைச் செய்வார்” என்றார் இறைத்தூதர். “நாங்கள் இறைவனின் மீது ஆணையிட்டுச் சொல்கிறோம். நாங்கள் உங்கள் அருளை நம்பப்போவதில்லை. ஒன்று எங்களை நீங்கள் அழித்துவிடுங்கள். அல்லது நாங்கள் உங்களை அழித்துவிடுவோம். அதுவரை, உங்களைப் பொறுத்துகொள்ளப் போவதில்லை” என்றனர் குரைஷ் தலைவர்கள்.

அவர்கள் அப்படிக் கூறியவுடன் இறைத்தூதர் செல்வதற்காக எழுந்து நின்றார். அவருடன் அப்துல்லா இபின் அபி உமய்யாவும் எழுந்து நின்றார். அவர் இறைத்தூதரின் அத்தை அதிகாவின் மகன். அப்துல்லா இறைத்தூதரிடம், “இறைவனின் மீது ஆணையாகச் சொல்கிறேன். ஆகாயத்துக்குச் செல்லும் ஏணியை நீங்கள் கொண்டுவரும்வரை நான் உங்களை நம்பப்போவதில்லை. அந்த ஏணியில் ஏறி நீங்கள் ஏழு சொர்க்கங்களுக்குச் செல்லுங்கள். அங்கிருந்து ஒரு புத்தகத்தைக் கொண்டுவாருங்கள். அத்துடன் உங்கள் உண்மைத்தன்மையை நிரூபிக்க நான்கு மலக்குகளையும் உடன் அழைத்துவாருங்கள்” என்றார்.

அதற்குப் பிறகு, இறைத்தூதர் சோகத்துடன் வீடு திரும்பினார். அவர் தன் இனத்தாரைச் சந்திக்கும்போது நம்பிக்கையுடன் சென்றார். ஆனால், அவர்கள் அனைவரும் அவரைவிட்டு இன்னும் வெகுதூரம் விலகிப்போயிருந்தனர்.

- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)
ஓவியம்: குர்மீத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x