Published : 15 Aug 2019 11:22 AM
Last Updated : 15 Aug 2019 11:22 AM

பந்தம் வேண்டாம்

பவித்ரா

துறவி கிடானோ கெம்போ, 92 வயது வரை வாழ்ந்து 1933-ம் ஆண்டில் இறந்தார். அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் எதனுடனும் பந்தம் வைத்துக்கொள்ளாத வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.
இருபது வயதில் ஒரு யாத்ரீகனாக மலைகளில் அலைந்து திரிந்தபோது பயணி ஒருவரைப் பார்த்தார். அவர்கள் இருவரும் ஓய்வெடுப்பதற்காக ஒரு மரத்தினடியில் நின்றனர்.

கிடானோவுக்கு தன் சுங்கானை புகைப்பதற்காக அவர் அளித்தார். கிடானோவுக்கு முதல் புகையிலையின் ருசி மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பயணி, தனது பையிலிருந்து ஒரு சுங்கானையும் புகையிலையையும் பரிசாக அளித்து விடைபெற்றுச் சென்றார்

“இப்படியான லாகிரி வஸ்துக்கள் எனது தியானைத்தைத் தொந்தரவு செய்யலாம். அந்த நிலை வருவதற்குள் நான் புகைப்பதை விட்டுவிட வேண்டும்.” என்று முடிவெடுத்தார் கிடானோ. உடனடியாகச் சுங்கானைத் தூக்கியெறிந்தார்.
23 வயதில், பிரபஞ்சத்தைப் பற்றி எழுதப்பட்ட அற்புத நூலான ஐ-கிங்-ஐக் கற்கத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் குளிர்காலம் வந்தது. நூறு மைல் தூரத்தில் வசித்த தனது குருவுக்கு கனத்த உடைகள் கேட்டு ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு பயணியிடம் கொடுத்தனுப்பினார். பதிலும் வரவில்லை. ஆடைகளும் வரவில்லை. கிடானோ, ஒரு நிலையில் ஐ-கிங்கில் உள்ள ஊகித்தறியும் கலை பற்றிய குறிப்புகளைப் படித்தார். தனது கடிதம் போய் சேரவேயில்லை என்பதைக் கண்டுகொண்டார்.

ஊகத்தின் அடிப்படையில் விஷயங்களைத் தான் நிர்ணயம் செய்யத் தொடங்கினால் தியானம் குலையும் என்றுணர்ந்த கிடானோ உடனடியாக ஐ-கிங்-ஐத் துறந்தார்.
28 வயதில் சீன எழுத்துக்கலையையும் கவிதையையும் கற்றுத் தேர்ந்தார் கிடானோ. அவரது குருவே வியக்கும்படி சிறந்து விளங்கினார். ‘நான் இப்போதே இதை நிறுத்தாவிட்டால், நான் கவிஞனாக முடியுமே தவிர துறவியாக இருக்க முடியாது” என்று முடிவெடுத்தார். அவர் அதற்குப் பின்னர் ஒரு கவிதையைக்கூட எழுதவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x