செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 13:11 pm

Updated : : 14 Aug 2019 13:39 pm

 

இடம் பொருள் மனிதர் விலங்கு: எது உங்கள் இந்தியா?

which-is-your-india

மருதன்

இது என்ன கேள்வி? இருப்பது ஓர் இந்தியாதானே? அதில்தானே நாம் அனைவரும் வசிக்கிறோம் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார் ரவீந்திரநாத் தாகூர். நாம் அருகருகில் வசிப்பவர்களாக இருக்கலாம். அதற்காக நாம் ஒரே இந்தியாவைதான் பகிர்ந்துகொள்கிறோம் என்று சொல்ல முடியாது என்பார் அவர்.

எனது இந்தியா என்பது புவியியலில் இல்லை. ஒரு காகிதத்தில் கோடுகளை வரைந்து இதுதான் இந்தியா என்று நீங்கள் பொட்டலம் கட்டிவிட முடியாது. அந்தப் பொட்டலத்துக்குள் தேடினால் அகப்பட மாட்டேன் நான். இந்தியா என்பது மூவண்ணக் கொடியோ தேசியப் பாடலோ அசோகச் சக்கரமோ அல்ல. ஆண்டுக்கு ஒருமுறை சுதந்திர தினத்தன்றோ குடியரசு தினத்தன்றோ தோன்றி அதன்பின், சட்டென்று மறைந்துவிடுவதில்லை எனது இந்தியா.
இந்தியா என்பது தேசமல்ல. தேசம் என்னும் கருத்து உருவாவதற்கு முன்பே எனது இந்தியா தோன்றிவிட்டது. அந்த இந்தியா தோன்றும்போதே நானும் பிறந்துவிட்டேன். எனக்கும் எனது இந்தியாவுக்கும் வயது ஆயிரக்கணக்கான ஆண்டுகள்.

தொடக்கத்தில் கதிரவனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் சமவெளிகளும் பள்ளத்தாக்குகளும் பாலைவனங்களும் கடல்களும் ஆறுகளும் காடுகளும் எனக்கு நெருக்கமானவையாக இருந்தன. விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் மீன்களும் என்னோடு இயல்பாக உரையாடிக்கொண்டிருந்தன.
அடுத்து மனிதர்கள் வந்தனர். ஈரானியர்கள் வந்தனர்.

சீனர்களும் கிரேக்கர்களும் வந்தனர். பண்டைய ஆசியாவின் மையப் பகுதியிலிருந்து சகர்கள் எனும் நாடோடி இனக் குழுக்கள் வந்தனர். பதான்களும் அராபியர்களும் முகமதியர்களும் துருக்கியர்களும் வந்தனர். போர்த்துகீசியர்கள் வந்தனர். டச்சுக்காரர்கள் வந்தனர். முகலாயர்கள் வந்தனர். கிழக்கிந்திய கம்பெனி வந்தது. ஆங்கிலேயர்கள் வந்தனர். அவர்கள் எனது இந்தியாவை மாற்றினார்கள். இந்தியாவும் தன் பங்குக்கு அவர்களை மாற்றியது.

சிந்து நதியில் நீராடினேன். கங்கை சமவெளியின் வண்டல் மண்பரப்பில் பாதங்களைப் பதித்தேன். கங்கையும் யமுனையும் நர்மதாவும் கோதாவரியும் காவிரியும் கிருஷ்ணாவும் எனக்குள் சங்கமம் ஆவதைக் கண்டேன். ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் திரிந்தேன். இதோ இந்தக் கரங்களால் களிமண்ணைப் பிசைந்து பானைகள் செய்தேன். வேதம் இயற்றப்பட்டபோது உடனிருந்தேன். மகாவீரரைத் தரிசித்தேன். புத்தர் அமர்ந்த மரத்தடியில் அமர்ந்தேன். பெரும் ஆரவாரத்தோடும் வெற்றி முழக்கங்களோடும் அலெக்சாண்டரின் படைகள் உள்ளே நுழைந்தபோது வீதியோரம் ஒதுங்கி நின்று கவனித்தேன். அதே அலெக்சாண்டர் மிகுந்த களைப்போடு திரும்பிச் சென்றதைக் கண்டேன்.

சந்திரகுப்த மௌரியரும் அசோகரும் சுங்கர்களும் சோழர்களும் சேரர்களும் பாண்டியர்களும் குப்தர்களும் ஹர்ஷவர்த்தனனும் சாளுக்கியர்களும் ராஜபுத்திரர்களும் என்னில் ஒரு பகுதியாக மாறினர். சுல்தான்கள் வந்தார்கள். பல பெயர்களைக் கொண்ட பல வம்சங்கள் ஆட்சி செய்தன. இதிகாசங்களையும் புராணங்களையும் சங்க இலக்கியத்தையும் புத்தர் ஜாதகக் கதைகளையும் பாபர் நாமாவையும் உமர் கய்யாமையும் ஷேக்ஸ்பியரையும் கீட்ஸையும் அள்ளி அள்ளிப் பருகினேன். இஸ்லாம் என்னைத் தழுவிக்கொண்டது. சூஃபிகளின் பாடல்களை எனக்குள் நிறைத்துக்கொண்டேன். தான் நெய்த ஆடையையும் தான் இயற்றிய பாடலையும் என்னிடம் கொண்டுவந்து காட்டினார் கபீர்.

பாலியும் பிராகிரதமும் சமஸ்கிருதமும் தமிழும் பஞ்சாபியும் கன்னடமும் துளுவும் போஜ்பூரியும் மராத்தியும் மலையாளமும் இன்னும் நூறு, நூறு மொழிகளும் என் நாவில் தவழ்ந்து புரளத் தொடங்கின.
எண்ணற்ற போர்களால் எனது இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது. குருதி வெள்ளத்தில் கிடந்து பலமுறை துடித்திருக்கிறது அதன் உடல். ஒவ்வொரு முறையும் இந்தியாவை என் மடியில் கிடத்திக்கொண்டு என் கவிதைகளால் அதன் காயங்களைக் குணமாக்கியிருக்கிறேன்.

என் இசையால் அதன் துயரங்களைப் போக்கியிருக்கிறேன்.
என் பெயர் ராம். என் பெயர் ரஹீம். என் பெயர் ராகுல். என் பெயர் ரஞ்சித் சிங். ஒற்றை முகமல்ல, பல முகங்களைக் கொண்டிருக்கிறது எனது இந்தியா. மதமல்ல, மதங்கள். மொழியல்ல, மொழிகள். பண்பாடு அல்ல, பண்பாடுகள். பாடல் அல்ல, பாடல்கள். நான் ஒரு துருக்கியன். நான் ஒரு பழங்குடி. நான் ஒரு முகலாயன். நான் ஒரு வங்காளி. நான் ஒரு தமிழன். நான் ஓர் இந்து. நான் ஒரு கவிஞன்.

என் இந்தியா காஷ்மிரில் தொடங்கி கன்னியாக்குமரியோடு முடிவடைந்து விடுவதில்லை. முழு உலகையும் அது தன் சிறகுகளுக்குள் பாதுகாத்து வைத்திருக்கிறது. அந்த வகையில் நான் இந்தியன் மட்டுமல்ல. பரந்து விரிந்திருக்கும் இந்த உலகின் குடிமகன் நான். இந்தியாவைப் பாடும்போது நான் உலகையே பாடுகிறேன். இந்தியாவைக் கொண்டாடும்போது நான் உலகையே கொண்டாடுகிறேன். அத்தகைய தருணங்களில் என் மொழி உலகின் மொழியாக மாறிவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

உலகின் துயரம் என்னுடைய துயரமாக மாறும்போது என்னைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொள்கிறது இந்தியா. உலகிலுள்ள அத்தனை வேறுபாடுகளையும் அங்கீகரித்து, மதித்து, என்னில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளும்போது ஒரு குழந்தையைப் போல் என்னைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்கிறது இந்தியா. நான் உலகின் ஒரு பகுதி என்னும்போது நீயும் அப்படித்தான் இருந்தாக வேண்டும் என்கிறது இந்தியா.

இந்த இந்தியாவில்தான் நீங்களும் வசிக்கிறீர்களா? இந்த இந்தியாவைத்தான் நீங்களும் கொண்டாடுகிறீர்களா? இந்த இந்தியாவைத்தான் நீங்கள் உங்கள் இதயத்துக்குப் பக்கத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா? ஆம், எனில் நீங்களும் நானும் ஒரே இந்தியாவில்தான் வசித்துக்கொண்டிருக்கிறோம். ஒரே கனவைத்தான் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். ஒரே நம்பிக்கைகளைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நீங்களும் நானும் ஒரே இந்தியாவின் குழந்தைகள். ஒரே உலகின் குழந்தைகள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

இந்தியாIndiaஉலகின் துயரம்சந்திரன்நட்சத்திரங்கள்தாகூர்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author