Published : 14 Aug 2019 13:03 pm

Updated : 14 Aug 2019 13:03 pm

 

Published : 14 Aug 2019 01:03 PM
Last Updated : 14 Aug 2019 01:03 PM

டிங்குவிடம் கேளுங்கள்: ஞெகிழியை அழிக்க முடியுமா?

can-destroy-the-plastic

ஞெகிழியை (பிளாஸ்டிக் பை) மண்ணில் இட்டால் மட்காது. தீயிலிட்டால் காற்று மாசு அடையும். பிறகு எப்படி இதை அழிக்கிறார்கள், டிங்கு?

– இ. ரக்‌ஷனா, 3-ம் வகுப்பு,
செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக்.
மேல்நிலைப் பள்ளி, திருச்சி.


சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் ஞெகிழிப் பைகளை அழிப்பதற்கு இதுவரை முழுமையான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை, ரக்‌ஷனா. அதனால்தான் மட்காத ஞெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள். ஞெகிழிப் பைகளுக்கு மாற்றாகச் சணல், காகிதம், துணிப்பைகளைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். ‘ஜீரோ வேஸ்ட்’ வாழ்க்கை முறையை, அதாவது எளிதில் மட்கக்கூடிய பொருட்களை மட்டும் வைத்து வாழ்க்கை நடத்தப் பழகிக்கொள்வதுதான் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பூமிக்கும் நல்லது.

மலைகள் எப்படித் தோன்றின, டிங்கு?

– ஜெ.பி. ரோஷினி, 7-ம் வகுப்பு,
செவன்த் டே பள்ளி, புளியங்குடி.

பூமியின் மேற்பரப்பு டெக்டானிக் தகடுகளால் ஆனது என்று படித்திருப்பீர்கள். இவை எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் பூமியில் உள்ள நிலப்பகுதிகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தன. இதைப் ‘பாஞ்சியா கண்டம்’ என்று அழைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக டெக்டானிக் தகடுகள் நகர்ந்ததன் விளைவாக, ஒன்றாக இருந்த கண்டம் பல கண்டங்களாகப் பிரிந்தது. டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மற்றொன்று மோதும்போது ஏற்படும் அழுத்தத்தால் பாறைக்குழம்பு நிலத்துக்குள்ளிருந்து வெளியேறி, மலைகளாக உருமாறுகின்றன.

இந்திய - ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது. 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதலின் வேகம் அதிகரித்தது. 2.25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கரமான மோதலால் இமயமலை உருவானது. இன்றும் மோதல் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், இமயமலை ஆண்டுக்குச் சில செ.மீ. உயரம் வளர்ந்துகொண்டே இருக்கிறது, ரோஷினி.

கர்ப்பப்பை புற்றுநோயைக் குணப்படுத்த முடியாதா, டிங்கு?

– மு. ஸ்ரீ விநாயகவர்ஷினி,
10-ம் வகுப்பு, ஸ்ரீ குமர குருபரர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திருப்பனந்தாள்.

இன்றைய உணவு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகின்றன. பெண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் ஒன்று. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதாகக் குணப்படுத்திவிடலாம். அல்லது அறுவை சிகிச்சை மூலம் அந்த உறுப்புகளை நீக்கிவிடலாம்.

சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோய் அணுக்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்கக் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துகளையும் ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது சில புற்றுநோய்களைக் குணப்படுத்தும் அளவுக்குதான் மருத்துவம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. சில புற்றுநோய்களின் தீவிரத் தன்மையைக் குறைத்து, ஆயுளை நீட்டிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 40 வயதுக்கு மேல் பெண்கள் மமோகிராம், பாப்ஸ்மியர் போன்ற பரிசோதனைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் செய்துகொண்டால், புற்றுநோய் வந்தாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்திவிடலாம்.

உங்களின் நீண்ட கடிதத்தின் மூலம் நெருங்கியவருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாக அறிகிறேன். உங்கள் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவைச் சாப்பிடச் சொல்லுங்கள். பயப்படாமல், இதிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். அவரை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். மருந்துகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும், விநாயகவர்ஷினி.

கடலில் மட்டும் அலைகள் உருவாகின்றன. ஏன் நதியில் அலைகள் உருவாவதில்லை, டிங்கு?

– உ. காயத்ரி, 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

அலைகள் காற்றின் மூலமே ஏற்படுகின்றன. மிகப் பெரிய பரப்பளவும் ஆழமும் கொண்டது கடல். காற்றின் வேகத்தால் கடலின் மேற்பரப்பில் அலைகள் உருவாகின்றன. இந்த அலைகள் தாமாக முன்னோக்கிச் செல்வதில்லை. அலைகளின் உராய்வு, காற்றின் அழுத்தத்தால் நகர்த்தப்படுகின்றன. சந்திரனின் ஈர்ப்பினால் ஏற்படும் அலைகள் ஓதம் (Tide) என்று அழைக்கப்படுகிறது. நதியின் பரப்பளவு சிறியது. அதில் இருக்கும் தண்ணீர் தேங்காமல் ஓடிக்கொண்டிருக்கக்கூடியது. நதியிலும் காற்றின் காரணமாகச் சிறிய அளவில் அலைகள் உருவாகின்றன. அதேபோல் மிகப் பெரிய ஏரிகளிலும் காற்றினால் சிறிய அலைகள் தோன்றுகின்றன, காயத்ரி.

டிங்குவிடம் கேளுங்கள்ஞெகிழிமலைகள்கர்ப்பப்பைபுற்றுநோய்அலைகள்

You May Like

More From This Category

More From this Author