Published : 14 Aug 2019 12:06 PM
Last Updated : 14 Aug 2019 12:06 PM

திறந்திடு சீஸேம் 46: ஹோப் வைரம்

முகில்

கொள்ளிடத்தின் கரையில் சீதையின் கோயில் ஒன்று அமைந்திருந்தது. சீதை சிலையின் கண்களில் இரண்டு நீல வைரங்கள் பதிக்கப்பட்டிந்தன. ஓர் இரவு நீல வைரங்களில் ஒன்று திருடு போனது. மறுநாள் கோயிலுக்கு வந்த பூசாரி, ஒற்றைக் கண் சீதையைக் கண்டு நடுங்கினார். ‘சீதாதேவியின் கண்ணை எடுத்துச் சென்றவனைத் தீமைகள் சூழட்டும். அந்த வைரத்தை யார் வாங்கினாலும் அவர்களுக்கும் தீமைகள் நடக்கட்டும்’ என்று சாபம் விட்டார்.
‘நீல வைரம்’ குறித்து இந்தியாவில் காலம் காலமாக உலவும் வாய்வழிக் கதை இது.

ஆனால், இதற்கான ஆதாரம் கிடையாது. ஆனால், சாபத்தை உண்மையாக்குவது போல, இந்த வைரத்தைச் சுற்றிப் பல மர்மங்கள் நிகழ்ந்துள்ளன. கார்பன் வயது கணக்கின்படி நீல வைரத்தின் வயது சுமார் 1.1 பில்லியன் வருடங்கள். பதினேழாம் நூற்றாண்டில், கோல்கொண்டா ராஜ்யத்திலிருந்த கொல்லூர் சுரங்கத்தில் இது கண்டெடுக்கப்பட்டது. அப்போது பிரான்ஸைச் சேர்ந்த புகழ்பெற்ற பயணியும் வைர வியாபாரியு மான தாவர்னீர், முதன் முதலில் நீல வைரத்தை விலை கொடுத்து வாங்கினார். திருடிச் சென்றார் என்றும் சொல்கிறார்கள்.

நீல நிறத்தில் 118 காரட் (24 கிராம்) எடையுடன் இருந்த வைரம், தாவர்னீர் மூலமாக, பாரிஸூக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிர் பிழைத்து அவர் ஊர்ப் போய்ச் சேர்ந்ததே பெரிய விஷயம் என்னும் அளவுக்குப் போகும் வழி எங்கும் பல்வேறு ஆபத்துகளில் சிக்கி மீண்டார். புறா முட்டை அளவிலிருந்த நீல வைரம், தாவர்னீரால் செதுக்கி மெருகூட்டப்பட்டது. 115 காரட் எடைக்கு மாறிய வைரத்தை, கி.பி. 1669-ல் பிரான்ஸின் மன்னரான பதினான்காம் லூயியிடம் விற்றார் தாவர்னீர். அது மேலும் செதுக்கப்பட்டு, ‘பிரெஞ்சு நீல வைரம்’ என்ற பெயருடன் கஜானாவில் சேர்ந்துகொண்டது. பதினான்காம், பதினைந்தாம் லூயிகளின் காலத்துக்குப் பிறகு, பதினாறாம் லூயி அரியணை ஏறினார். அவர் கழுத்தில் நகையாக வைரமும் அடிக்கடி ஏறியது.

பதினாறாம் லூயி காலத்தில்தான் ஏகப்பட்ட அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்தன. மன்னராட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழ, பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது (1792). மன்னர் லூயிக்கும் ராணி மேரிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எல்லாத்துக்கும் நீல வைரம்தான் காரணம் என்று சிலர் நினைத்தனர். புரட்சி நிகழ்ந்தபோது, மன்னருக்குச் சொந்தமான செல்வங்கள், நகைகள் எல்லாம் ‘டி லா மரைன்’ என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டன. பின்னர் கொள்ளை போயின. விரைவிலேயே பெரும்பாலான நகைகள் மீட்கப்பட்டன. ஆனால், அவற்றில் ‘பிரெஞ்சு நீல வைரம்’ இல்லை.

1823-ல் லண்டனின் நகை வியாபாரியான டேனியல் எலையஸன் என்பவரிடம் அது வந்து சேர்ந்திருந்தது. எப்படி வந்தது என்று தெரியாது. மேலும் எடை குறைக்கப்பட்ட நீல வைரம், டேனியலிடமிருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் கைமாறியது. நான்காம் ஜார்ஜ் மன்னர், அந்த நீல வைரத்தைச் சில காலம் அணிந்திருந்ததாகச் சொல்கிறார் கள். 1830-ல் நான்காம் ஜார்ஜ் இறப்புக்குப் பிறகு, நீல வைரத்தை ஹென்றி பிலிப் வாங்கிக் கொண்டார். அவர் விலை உயர்ந்த கற்களைச் சேகரிப்பதில் ஆர்வம்கொண்டவர். ஹோப் அண்ட் கோ என்ற நிதி நிறுவனத்தை நடத்தியவர். நீல வைரத்தின் துரதிர்ஷ்டக் கதைகளை எல்லாம் கேட்டு, அதன் விதியை மாற்றும் விதமாக ‘ஹோப் வைரம்’ என்ற பெயரைச் சூட்டினார். விரைவிலேயே இறந்தும் போனார்.

சுமார் 50 ஆண்டுகள் பிலிப் குடும்பத்தினரிடம் வைரம் வாழ்ந்தது. ஆனால், குடும்பத்தினரது வாழ்க்கையில் ஏகப்பட்டபிரச்சினைகள். எனவே அந்தக் குடும்பத்தைச் சார்ந்த பிரான்ஸிஸ் ஹோப், சைமன் பிரான்கெல் என்ற நகை வியாபாரியிடம் விற்றார். பிரான்கெல் மூலமாக ஹோப் வைரம், லண்டனிலிருந்து நியூயார்க்குக்குப் பயணமானது. அவர் அதை அமெரிக்க செல்வந்தர்களிடம் விற்றார். வாங்கிய நபர்கள் அனைவருமே, வைரத்தால் ஏதாவது ஒரு விதத்தில் வதைபட்டனர். அதை பிரான்கெலிடமே திருப்பியும் கொடுத்து விட்டனர். அவருக்கும் வியாபாரத்தில் ஏகப்பட்ட நஷ்டம். 1908-ல் ஹோப் வைரத்தை, துருக்கிய நகை வியாபாரி யான சலிம் ஹபிப் என்பவ ரிடம் தள்ளிவிட்டார் பிரான்கெல். சலிம், துருக்கிய சுல்தான் அப்துல் ஹமிதின் ஏஜெண்ட்.

சுல்தானின் கையில் வைரம் சென்று சேருவதற்கு முன்பாகவே துருக்கியில் புரட்சி வெடித்தது. ஹமிது அரியணையிலிருந்து அகற்றப்பட்டார் (1909). பின்பு ஹோப் வைரம், மேலும் சிலரது கைகளுக்கு மாறி அவர்களது வாழ்க்கை யிலும் விளையாடியது என்றாலும் அதன் மதிப்பு மட்டும் ஒவ்வொரு முறையும் அதிகமாகிக்கொண்டே போனதுதான் ஆச்சரியம். ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை அதிபர் எட்வர்ட் மெக்லீன். அவரது மனைவி சுரங்க அதிபரான இவாலின். ‘மற்றவர்களுக்குத் துரதிர்ஷ்டமான பொருட்கள் எப்போதுமே எனக்கு அதிர்ஷ்டமாக அமையும்.

நான் வாங்கிக்கொள்கிறேன்’ என இவாலின் 1910-ல் மூன்று லட்சம் அமெரிக்க டாலர் கொடுத்துச் சொந்தமாக்கிக்கொண்டார். விருந்துகளில் இவாலினின் கழுத்தில் நீல வைரம் ஜொலிப்பதைப் பலரும் கண்டு வியந்தனர். அந்த வைரத்தைப் பாதுகாப்பதற்கு என்றே தனி பாதுகாவலர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர்.
பின்பு இவாலின் வாழ்விலும் சோகங்கள் சூழ்ந்தன. குடும்பத் தில் சில இறப்புகள். ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை சரிவைக் கண்டது. என்ன நடந்தாலும் வைரத்தைத் தன்னுடனேயே வைத்திருந்த இவாலின், தன் அறுபதாவது வயதில் நிமோனியா வால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இப்படி ஹோப் வைரம் குறித்த அவநம்பிக்கைக் கதைகள் நிறையவே உண்டு.

1958, நவம்பர் 10 அன்று வாஷிங்டனின் ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியத்துக்கு பழுப்பு நிறப் பெட்டி ஒன்று வந்தது. பிரித்துப் பார்த்த அருங்காட்சியகப் பொறுப்பாளர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. உள்ளிருந்தது நீல வைரம்தான். வின்ஸ்டன் என்ற வியாபாரி அதை அருங்காட்சியத்துக்குப் பரிசாக அனுப்பியிருந்தார்.
மோனாலிசா ஓவியத்துக்கு அடுத்தபடியாக, அதிகம் பார்வையிடப்பட்ட நீல வைரம், இன்றுவரை அதே அருங்காட்சியகத்தில்தான், ஒரு நெக்லெஸுடன் இணைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 45.5 காரட் எடையுடன் இருக்கும் ஹோப் வைரத்தின் இன்றைய மதிப்பு 200 முதல் 350 மில்லியன் அமெரிக்க டாலர். அருங்காட்சியத்துக்கு வந்து சேர்ந்த பிறகு, ஹோப் வைரம் குறித்த திகில் கதைகள் எதுவும் இல்லை.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு:
mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x