Published : 13 Aug 2019 01:15 PM
Last Updated : 13 Aug 2019 01:15 PM

குடிமைப் பணித் தேர்வு மாற்றம் சாதகமா, பாதகமா?

டி. கார்த்திக்

இந்திய சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கு அதிகாரி களைத் தேர்வு செய்யும் தேர்வு முறையில் மாற்றம் செய்ய இருக்கிறது மத்திய அரசு. சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் மத்தியில் இதுதான் தற்போது பேசு பொருள். காலங்காலமாகப் பின்பற்றப் பட்டுவரும் தேர்வு முறையில் மத்திய அரசு மாற்றம் செய்ய இருப்பது ஏன்? இந்த மாற்றம் சரியானதா?
ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ் தேர்வுகள் என்றழைக்கப்படும் குடிமைப் பணித் தேர்வுகளை நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற 23 வகையான பணிகளுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இதுதான் நடைமுறை.

ஏழை மாணவர்களைப் பாதிக்குமா?

சிவில் சர்வீஸ் தேர்வானது இதுவரை 2,025 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டுவருகிறது. முதன்மைத் தேர்வுகளுக்கு 1,750 மதிப்பெண்கள், நேர்காண லுக்கு 275 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் முசோரிக்கும், ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ஹைதராபாத்துக்கும், ஐ.ஆர்.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் நாக்பூருக்கும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுவருகிறார்கள். பிறகு அவர்களுக்குப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது இந்த முறையைத்தான் மத்திய அரசு மாற்ற இருக்கிறது.

அதன்படி , முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரிக்குப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். அந்தப் பயிற்சியில் அவர்கள் பெறும் மதிப்பெண்களும் தேர்வில் சேர்த்துக்கொள்ளப்படும். பயிற்சி மதிப்பெண்களாக 400 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இனி முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழில் பயிற்சி மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பிறகு ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறையால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

பாரபட்சத்துக்கு வாய்ப்புள்ளது!

இதனால் பாதிப்பு ஏற்படுமா? “சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பூர்வாங்கத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமே தரவரிசைப் பட்டியல் தயார் செய்து பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இதுவரை முதன்மைத் தேர்வுத் தாளைத் திருத்துபவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். இவர்கள் யாருமே நேர்முகத் தேர்வில் பணியாற்ற மாட்டார்கள். அதேபோல நேர்முகத் தேர்வை நடத்துபவர்கள் வேறொரு குழு. இவர்களுக்குச் சம்பந்தப்பட்ட தேர்வர் முதன்மைத் தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்று தெரியாது.

இது மிகவும் ரகசியமாகவே இருக்கும். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது இடஒதுக்கீடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உதாரணமாக, 200 ஐ.ஏ.எஸ். பணிகள் இருக்கின்றன என்றால், தரவரிசையில் பின்தங்கி இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்குக்கூட இட ஒதுக்கீடு அடிப்படையில் ஐ.ஏ.எஸ். பணி கிடைத்து விடும்.
தற்போது முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பிறகு எல்லோரும் முசோரிக்கு அனுப்பப்பட்டு, அங்கே பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பால், பயிற்சியில் பங்கேற்போர் அனுகூலடைய முடியும் என்ற பார்வையும் இருக்கிறது.

பயிற்சியை நடத்தும் உயரதிகாரிகள் கொண்ட குழு நினைத்தால், குறைவாக மதிப்பெண் எடுத்து தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியவரை கூடுதல் மதிப்பெண்கள் அளித்து மேலே கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன. ஐ.ஆர்.எஸ்., ஐ.எஃப்.எஸ். ஆகும் நிலையில் உள்ளவர்களை ஐ.ஏ.எஸ். ஆகவோ. ஐ.ஏ.எஸ். ஆகும் நிலையில் உள்ளவர்களை கீழ் பணிகளுக்கு அனுப்பவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. இந்தப் புதிய முறையை ஏன் கொண்டு வருகிறோம் என்பதற்குக்கூட அரசு விளக்கம் அளிக்கவில்லை” என்று வருத்தப்படுகிறார் சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சத்யா.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவோர் ஆண்டுக்கணக்கில் உழைத்து, தேர்வெழுதி வெற்றி பெறுவது வாடிக்கை. சிலர் ஐ.ஏ.எஸ். பதவியை அடைய வேண்டும் என்பதற்காக கஜினி முகமதுவைபோல தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முயற்சிப்பது உண்டு. ஆனால், இந்தப் புதிய முறை கடுமையாக உழைத்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்குப் பாதகமாக முடியலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

கனவு கலையலாம்!

“இந்தப் புதிய முறை இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த ஆண்டு வருமா என்றும் உறுதியாகத் தெரியவில்லை. ஒரு வேளை புதிய தேர்வு முறை அமலானால், பூர்வாங்கத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்பயிற்சி என 4 நிலைகளாகத் தேர்வு மாறும். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது 0.5, 1 மதிப்பெண்கூட முக்கியத்துவம் பெறும். உதாரணமாக 1 முதல் 100 ஐ.ஏ.எஸ். பட்டியலுக்கான மதிப்பெண் வித்தியாசம் 20-க்கும் குறைவாக இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஐ.ஏ.எஸ். ஆகக்கூடியவர் ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகவும் ஐ.ஆர்.எஸ். ஆகக் கூடியவர் ஐ.ஏ.எஸ். ஆகவும் முடியும். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவில் ஆண்டுக்கணக்கில் உழைத்தவரின் உழைப்பு வீணாகப்போகலாம்” என்கிறார் கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவியேற்றிருக்கும் ஒருவர்.

தொழிற்பயிற்சி என்பது ஒருவருக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுப்பதற்கான திறவுகோல். அதைப் பணியின்போது சம்பந்தப்பட்டவர் திறமையாகப் பயன்படுத்துகிறாரா, இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும். அதையே குடிமைப் பணிகளை ஒதுக்குவதற்கான தகுதியாக மாற்றக் கூடாது என்ற விவாதமும் பொதுவெளியில் வைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இனி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.

கட்டுரையாளர், தொடர்புக்கு:
karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x