கடந்த வாரம்: சேதி தெரியுமா?

கடந்த வாரம்: சேதி தெரியுமா?
Updated on
2 min read

தொகுப்பு: கனி

பிரிக்கப்பட்டது காஷ்மீர்

ஆகஸ்ட் 6: ஜம்மு&காஷ்மீர் மாநிலத் துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 திரும்பப்பெறப்பட்டது. அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு

ஆகஸ்ட் 6: பா.ஜ.க.வின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. அவர் ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 2014-2019 வரை, வெளியுறவுத் துறை அமைச்ச ராகவும், 2009-2014வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டவர்.

கும்பல் வன்முறைக்கு எதிரான மசோதா

ஆகஸ்ட் 6: ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கும்பல் வன்முறைகள், ஆணவக் கொலைகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டது. கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, நாட்டில் நடைபெற்ற கும்பல் வன்முறைகளில் 86 சதவீதக் கும்பல் வன்முறைச் சம்பவங்கள் ராஜஸ்தானில் நடைபெற்றிருக்கின்றன.

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா

ஆகஸ்ட் 8: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மறைந்த பாடகர் பூபேன் ஹஸாரிகா, மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.

அதிகமான மொழிகள் பேசும் நாடு

ஆகஸ்ட் 7: உலகில் அதிகமான ‘வாழும்’ உள்நாட்டு மொழிகளைப் பேசும் நாடாக பசிஃபிக் தீவு நாடான பபுவா நியூ கினி (Papua New Guinea) அறிவிக்கப்பட்டது. பபுவா நியூ கினியில் 840 மொழிகள் பேசப்படுகின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 453 மொழிகள் பேசப்படுகின்றன. 2019-ம் ஆண்டை ஐ.நா. சர்வதேச உள்நாட்டு மொழிகளுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது.

நீலகிரியில் அதிகபட்ச மழை

ஆகஸ்ட் 8: நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி பகுதியில் 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 820 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. இந்த அதிகபட்ச மழைக்குப் பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 911 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

வேலூர் தேர்தலில் தி.மு.க. வெற்றி

ஆகஸ்ட் 9: வேலூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர் 47.3 சதவீத வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை வீழ்த்தியுள்ளார். இந்தத் தேர்தலில் மொத்தம் 10,05,365 வாக்குகள் பதிவாகின.

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

ஆகஸ்ட் 9: 66-ம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த திரைப்படத்துக்கான விருது குஜராத்தி திரைப்படமான ‘ஹெல்லாரோ’வுக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, விக்கி கௌஷல் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகைக்கான விருதுக்கு கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பாரம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in