Published : 13 Aug 2019 12:09 pm

Updated : 13 Aug 2019 12:09 pm

 

Published : 13 Aug 2019 12:09 PM
Last Updated : 13 Aug 2019 12:09 PM

பாட்டாலே பாடம் சொன்னார்!

songs

வா.ரவிக்குமார்

அது ஒரு மாநகராட்சிப் பள்ளியின் விளையாட்டுத் திடல். மாணவர்கள் சிலர் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ரயில் வண்டி போல நீண்ட வரிசையமைத்து ஓடிவரும் இன்னொரு மாணவர் கூட்டம் ஒரு பாடலைப் பாடிக்கொண்டே நின்று கொண்டிருப்பவர்களைக் கடந்து சென்றது.

பாட்டு பாடியபடி வந்தவர்கள் நின்றுகொண்டிருக்கும் மாணவர்களின் அருகில் வரும்போது ஒலி அலைகளின் அளவு அதிகரிப்பதையும் தொலைவில் செல்லும்போது ஒலி அலைகளின் அளவு குறைவதையும் ஆசிரியர் படம் வரைந்து விளக்கினார். ரயில் தூரத்தில் வரும்போது சத்தம் மெதுவாகக் கேட்கும். நமக்கு அருகில் வரவரச் சத்தம் அதிகமாகும். நம்மைக் கடந்து போகப் போகச் சத்தம் குறைந்துகொண்டே போகும்.

ஆனால், ரயில் ஓடும்போது உண்டாகும் சத்தத்தின் அளவு ஒன்றுதான். டாப்ளர் விளைவு என்ற இயற்பியல் பாடம் அங்கு நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நண்பர்களின் கைகளைப் பிடித்தபடி பாட்டுப் பாடிய அந்தத் தருணமும் டாப்ளர் விளைவும் அந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களுடைய நினைவில் நிற்கும்தானே!

ஒருங்கிணைக்கும் வழி

ராப்சடி இசைவழிக் கல்வி நிறுவனம் இந்தப் பாணியில் இசைவழிக் கல்வியை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கொண்டுசென்றிருக்கிறது. அதன் நிறுவனரும் பிரபல பியானோ கலைஞருமான அனில் ஸ்ரீநிவாசன் இத்திட்டம் குறித்து விளக்கினார்.

“ஒரு குழந்தைக்கு உடற்பயிற்சி அளித்தால் அந்தக் குழந்தை விராட் கோலியாகத்தான் உருவாக வேண்டும் என்றோ, கணிதம் படிக்கும் எல்லோரும் ராமானுஜன் ஆக வேண்டும் என்றோ, அறிவியல் படிக்கும் எல்லாரும் ஐன்ஸ்டீன் ஆக வேண்டும் என்றோ நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்படித்தான் இசையைப் படிக்கும் குழந்தைகள் எல்லாருமே இசை அமைப்பாளர்கள் ஆகிவிட வேண்டும், இசை நிகழ்ச்சியில் ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்.

இசை வகுப்புகள் நடத்தப்படும் சில பள்ளிகளிலும் அந்த வகுப்புகளைக் கணித வகுப்புக்கோ அறிவியல் வகுப்புக்கோ தாரை வார்க்கும் நிலை உள்ளது. சில பள்ளிகளில் கத்திரி வெயில் அடிக்கும்போதும், ‘ரெயின் ரெயின் கோ அவே’ என்று நமக்குப் பொருந்தாத பாடல்களைச் சொல்லிக்கொடுக்கும் நிலையும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் 2013-ல் இசை மூலமாகக் கல்வி அளிக்கத் தொடங்கினேன். சிலருக்குப் பாட்டை ரசிப்பதற்கு மட்டும் பிடிக்கும். சிலருக்குப் பாடப் பிடிக்கும். சிலருக்கு வாத்தியங்களை வாசிக்கப் பிடிக்கும். இதை எல்லாம் ஒருங்கிணைக்கும் வழிதான் எங்களின் இசைவழிக் கல்வி” என்கிறார் அனில் ஸ்ரீநிவாசன்.

எங்கெங்கும் இசை மழை

இசை மூலமாகவே அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு என எல்லாப் பாடங்களையும் விளக்கும் 465 பாடல்களை ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதிக் குழந்தைகளைப் பாடவைத்துப் பயிற்சி அளிக்கின்றனர்.
மீஞ்சூர், புழல், எண்ணூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை என வட சென்னையில் இருக்கும் பல பள்ளிகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுபோகச் சென்னையின் பிற பகுதிகளிலும், மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருநெல்வேலி, புதுச்சேரியில் உள்ள பல பள்ளிகளிலும் இந்நிறுவனம் இசைவழிக் கல்வியை முன்னெடுத்துவருகிறது.

“மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறோம். அரசுப் பள்ளி, சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் பாடத்துக்கு ஏற்றமாதிரி பாடல்களை வடிவமைக்கிறோம். தமிழ் மட்டுமின்றி இந்தி, வங்காள மொழிப் பாடல்களையும் தமிழ்க் குழந்தைகள் பாடுவார்கள். வி.வி.சடகோபன் எழுதிய ‘டிமிக்கி டிமிக்கி அடியோம் யாம்...’ போன்ற தெம்மாங்கு, நாட்டுப்புற, கோலப் பாடல்களைப் பல்வேறு பள்ளிகளில் 200-க்கும்
மேற்பட்ட எங்கள் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். ராப்சடியின் முதல்வராக இருக்கும் சுதா ராஜாவின் பணி மகத்தானது. தமிழ் இசைக் கல்லூரி, கலாக்‌ஷேத்ரா போன்ற இடங்களில் இசை படித்துவிட்டு வருபவர்களையும் இந்தப் பணிக்கேற்ற வகையில் தயார்படுத்தி அவர்களை ஈடுபடுத்தி செய்கிறார்” என்கிறார் அனில் ஸ்ரீநிவாசன்.

மயக்கிய மார்கழி இசை

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பதற்காக இந்நிறுவனத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தேர்வுசெய்தது. “எங்களுடைய மாணவர்களின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கவந்தபோது, ‘நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?’ என்று கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். “எங்களுக்கு ஆசிரியர்கள் நிறையப் பேர் தேவை, உங்கள் பள்ளியில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களைத் தாருங்கள்” என்றோம். அவருடைய கே.எம். இசைப் பள்ளி மாணவர்களும் இந்தப் பணியில் கைகோத்திருக்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு மார்கழி இசை மேடையில் பாடவைத்தபோது அவர்களுக்குப் பாராட்டு குவிந்தது. ஸ்பாஸ்டிக் சொசைட்டி, ஆதரவற்ற இல்லங்கள், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நாங்கள் இலவசமாகவே கற்பிக்கிறோம்” என்கிறார் அனில் ஸ்ரீநிவாசன்.
மனத்தை ஆற்றுப்படுத்தக்கூடிய, குணத்தை நெறிப்படுத்தக்கூடிய அரிய கலை இசை. அதன்வழியாகக் கல்வியும் சாத்தியப்படும் என்றால், இனி நம் மாணவர்களுக்கு எல்லாப் பாடங்களும் அத்துப்படிதானே!

கணித இசை

தகதிமி தகதிமி மழைத் துளி பார்
கனமழை கனமழை நனைந்தது யார்?

- என்று இனிமையாகப் பாடிக்கொண்டிருந்த இந்நிறுவனத்தின் இசை ஆசிரியர் உமா கணிதப் பாடத்தை இசையின் மூலம் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்?
“ஆரோகண அவரோகண ஸ்வர வரிசையைக் கொண்டு கணக்கில் ஏறுவரிசை, இறங்கு வரிசைகளைச் சொல்லித் தருவோம். ஒரு ஸ்வரத்துக்கு ஒருமுறை கையொலி எழுப்புவது, இரண்டு ஸ்வரத்துக்கு இருமுறை கையொலி எழுப்புவதன்மூலம் ஒற்றைப்படை, இரட்டை படை எண்களையும், தாளங்களைக் கொண்டு பின்னங்கள் போன்ற கணிதப் பயிற்சிகளையும் இசையின் வழியாகவே சொல்லித் தருகிறோம்” என்றார்.


பாடம் சொன்னார்மாநகராட்சிப் பள்ளிவிளையாட்டுத் திடல்ஒருங்கிணைக்கும் வழிராப்சடி இசைவழிக் கல்விஇசை மழைமார்கழி இசைவிராட் கோலி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author