Published : 12 Aug 2019 12:15 pm

Updated : 12 Aug 2019 12:44 pm

 

Published : 12 Aug 2019 12:15 PM
Last Updated : 12 Aug 2019 12:44 PM

எதிர்காலத்தை இன்றே வாழ முடியுமா?

can-the-future-survive-today

எம். ரமேஷ்
ramesh.m@hindutamil.co.in

சம்பாதிப்பது இப்போது அனைவருக்கும் எளிதான ஒன்று. வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. உங்கள் சவுகரியப்படி நீங்கள் பகுதி நேரமாக மட்டுமே கூட பணி புரியலாம். விரும்பாத நேரங்களில் ஓய்வெடுக்கலாம். ஆனால் சம்பாதிப்பதை சேமிப்பதும், எதிர்காலத்துக்காக திட்டமிடுவதும் தனிக் கலை. இது பலருக்கும் கைகூடுவது கிடையாது. இதை உணர்ந்தே சிலர் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று பிற்காலத்துக்கென திட்டமிடுகின்றனர்.
வாழும் காலம் நிதர்சனம். எதிர்காலம் கேள்விக்குறி. ஆனால் அதற்காக வாழும் காலத்தில் ஜாலியாக செலவழித்துவிட்டு எதிர்காலத்தை நாம் மேலும் கேள்விக்குறியாக மாற்றி மற்றவர்களுக்கு பாரமாக வாழ்வது வாழ்க்கையா. வயதான காலத்தில் நொந்து கொள்ளும் பலரும் கடந்தகாலத்தில் திட்டமிடாமல் செலவழித்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

எனது நண்பர் ஒருவர் வீடு வாங்கினார் அவரது 28-வது வயதில். ஆனால், அவர் தந்தை வீடு வாங்கியதோ அவரது 54-வது வயதில். இதில் பெரிய வித்தியாசம் என்ன வென்றால் நண்பர் வாங்கியது வங்கிகளில் பெற்ற வீட்டுக் கடன் மூலம். அவரது தந்தை வாங்கியது முழுப் பணத்தையும் செலுத்தி. அவருக்கு பிற்காலத்தில் எவ்வித நெருக்கடியும் கிடையாது. ஆனால் நண்பரோ வாழும் காலம் அதாவது 28-வது வயதிலேயே நிதி பொறுப்புக்காக நிகழ்கால வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, 20 ஆண்டுகள் எப்போது கடனை அடைப்போம் என்று அலைந்துகொண்டிருக்கிறார். இது சிறிய உதாரணம்தான். கடன் என்பது நாளைய பணத்தை இன்றைக்கே செலவிடுகிறீர்கள் என்பதை பெரும்பாலானோர் கவனத்தில் கொள்வதில்லை.

அதில் நண்பரும் விதி விலக்கல்ல என்பதுதான் யதார்த்தம். இதேபோல எனது உறவினர். நடுத்தர குடும்பம். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். இவர்கள் இருவரது சம்பளமும் அதிகம். ஆனால் செலவோ அதைவிட அதிகம். இவர்களும் ஆங்காங்கு முதலீடு செய்திருந்தனர். ஆனால் இவர்கள் எந்த அளவுக்கு முதலீடு செய்திருந்தனரோ அதே அளவுக்கு கடனும் வைத்திருந்தனர். ஓய்வு காலத்துக்குள் கடனை அடைத்து விடலாம் என்று ஓடிக் கொண்டிருந்தனர் இருவரும். ஆனால் துரதிருஷ்டமோ வேறு ரூபத்தில் அவர்களை துரத்தியது.

ஆம் கணவருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. ஆங்காங்கே முதலீடு செய்திருந்த இந்த தம்பதியினர், மருத்துவக் காப்பீடு எடுக்காமலிருந்தது இவர்களின் வாழ்க்
கையில் பேரிடியாக இறங்கியது. மருத்துவ சிகிச்சை செலவு ரூ.30 லட்சம். ஒருவழியாக சிகிச்சைக்கு செல்லும் முன்பு, கணவரது அலுவலகத்தில் ஒரு மாதம் மட்டும் லீவு தருவதாக கண்டிப்புடன் கூறிவிட்டனர். அதன் பிறகும் வேலைக்கு எடுத்துக் கொள்வது குறித்து எந்த உத்தரவாதமும் கிடையாது.

ஒரு மாதத்துக்குப் பிறகு வேலைக்கு செல்ல முடியாத சூழல். பிஎஃப் பணத்தை எடுத்து அதிலிருந்து மாதாந்திர தவணை தொகைகளை செலுத்த ஆரம்பித்தார். கையிலிருந்த ரொக்கமும் வேகமாக கரைந்தது. சேமிப்புகள் முற்றிலுமாக நின்று போயின. மனைவியின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாத சூழல். இந்நிலையில் பர்சனல் லோன் மூலம் கடன் வாங்கியதும் இவர்களது கழுத்தை சுற்ற ஆரம்பித்தது. கடைசியில் குடியிருந்த வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவசரத்துக்கு வீட்டை விற்க முயன்றதால் சந்தை மதிப்பை விட 20 சதவீதம் குறைவாக விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறினர்.

அந்த கணவர் தொடர்ந்து பணியில் இருந்திருந்தால் இந்தக்கடனை அடைத்திருக்கமுடியும். ஆனால் திடீரென ஏற்பட்டமருத்துவ செலவு, ஏற்கெனவே வாங்கியிருந்த கடன் சுமை மேலும் அதிகரித்ததால் பிரச்சினை தீவிரமடைந்து வாடகை வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. இவை அனைத்துக்கும் மேலாக அவசர தேவை ஏற்படும் என்று இவர்கள் ஒருபோதும் கணிக்கவேயில்லை. தங்களது சேமிப்பின் பெருமளவு தொகையை வீட்டில் முடக்கினர்.

கடைசியில் அதுவும் இவர்களது அவசர தேவையின்போது உதவவில்லை. வீட்டுக்கான சுலப தவணை கட்டும்போது வரிக் கழிவாக கிடைக்கும் 4.5 சதவீத தொகையை ஒரு சேமிப்பாக தனியாக சேமித்திருந்தால் கூட, அது அவசர கால தேவைக்கு உதவியாக நிச்சயம் இருந்திருக்கும். வரிச் சலுகையில் கிடைத்த தொகையையும் அவர்கள் செலவிட்டதுதான் அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும்.

பொதுவாக கடன் மற்றும் கடனுக்கான வட்டி நிலுவை அதிகரிக்கும்போது அதன் சுமையானது சொத்து மதிப்பை விட அதிகமாகவே இருக்கும் என்பதுதான் யதார்த்தமான விஷயம். சேமிப்பை விட கடன் நிலுவை அதிகரித்ததே இவர்களை பெரும் கடன் சுமைக்கு இட்டுச் சென்றது. எதிர்காலத்துக்காக கடன் வாங்குவது எப்போதுமே ஆபத்தானது. பெரும்பாலான குடும்பங்கள் எவ்வளவு கடன் சுமையை தாங்க முடியும் என்பதை அறியாமலேயே கடன் வாங்கி பிறகு திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்குப் பெரும்பாலும் ஆசைதான் காரணமாக இருக்
கிறது. சமூக நெருக்குதலும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. வாழ்க்கை முறையில் சிக்கனம் மற்றும் கஞ்சத்தனத்துக்கும் நூலிழை வித்தியாசம் உள்ளது.

அனைத்துக்கும் மேலாக நம்மால் எவ்வளவு சுமையை தாங்க முடியும் என்று அனு
மானிப்பதும் புத்திசாலித்தனமாக இருக்கும். இப்போது வங்கிகள் கூவிக்கூவி கடன் அட்டைகளை வாரி வழங்குகின்றன. ‘இன்று வாழ்க்கையை அனுபவியுங்கள். நாளை கடனை அடையுங்கள்’ என்பதான வாசகம் பலரையும் ஈர்க்கிறது. ஆனால் உண்மையில் கடன் சுமை நெருக்கும்போதுதான் முன்னர் அனுபவித்த மகிழ்ச்சி ஒருபோதும் சந்தோஷமான நினைவைத் தராது என்பதை பலரும் உணர வேண்டும்.

இன்றைய சூழலில் தேவைக்கும் வாழ்க்கையின் பூர்த்தியடை தலுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. மாதந்தோறும் கடன் அட்டை ஸ்டேட்மென்ட் வீட்டுக்குவராமலும், நிலுவைத் தொகைக்காக வங்கிஏஜென்ட் வீட்டுக் கதவை தட்டாத நிலையையும் யோசித்துப் பாருங்கள். அந்த வாழ்க்கை எவ்வளவு ரம்மியமாக இருக்கும் என்று.

சிறிய வயதில் வீடு வாங்குவது உங்களை ஒரே நகரிலேயே வாழ்நாள் முழுவதும் கட்டிப்போட்டுவிடும் என்பதை உணருங்கள். நல்ல வாய்ப்புகள் வேறு நகரங்களில் வரும்போது, சொந்த வீடு வாங்கிவிட்டோம் என்பதற்காக முடங்கிய பலரும் பின்னாளில் நொந்து போனதுண்டு. பொருளியல் சூழலில் பணத்துக்காக ஓடிக் கொண்டிருந்தாலும், நிதி திட்டமிடல் எக்காலத்துக்கும் சிறந்தது.


எதிர்காலம்வாழ முடியுமாவீடு வாங்குவதுவேலைசுமை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author