Published : 12 Aug 2019 12:08 PM
Last Updated : 12 Aug 2019 12:08 PM

சித்தார்த்தா: தவறு எங்கே நடந்தது?

ஜி. கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

தற்கொலைகள் தினசரி செய்திகளில் எப்போதும் இடம் பெறும் ஒன்று. ஆனால், எப்போதாவது சிலரது தற்கொலைகள் மட்டும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி பேசு பொருளாகிவிடுகின்றன. சமீபத்தில் காபி டே நிறுவனர் சித்
தார்த்தா வின் தற்கொலை தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் சாமான்ய பொது மக்கள் வரை அனைவரையும் உலுக்கியது. காரணம் அவருடைய தொழில் வரலாறு.

காபி குடிப்பது சுவை சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருந்து வந்ததை மாற்றி... காபி குடிக்கப் போவதையே ஒரு கவுரவ அடையாளமாக மாற்றிக் காட்டியவர் இந்தசித்தார்த்தா. சர்வதேச நிறுவனமான ஸ்டார்பக்ஸ் பிராண்டுக்கு இணையாக ஒரு பிராண்டை உருவாக்கி இந்தியாவின் அனைத்து முன்னணி நகரங்களிலும் 1,600 கிளைகளுக்கு மேலாக ஏற்படுத்திவெற்றிகரமாக நடத்தியவர். காபி டே விற்பனையகங்களின் அமைப்பு, அதன் உத்திகள் பல தொழிலதிபர்களுக்கும் கைவராதது.

சித்தார்த்தாவின் தற்கொலைக்குப் பிறகு பலரும் பகிர்ந்த நினைவலைகளைப் பார்க்கும் போது அவர், வழிகாட்டியாக, குருவாக, முன்னோடியாக, ஊக்குவிப்பாளராக முகம் தெரியாத
வர்களுக்கும் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனால், இறுதியில் அவர் எடுத்த முடிவு அவருடைய மொத்த வாழ்க்கைக்கும் முரண்பாடாக அமைந்துவிட்டது. வாழ்க்கையின் அத்தனை சவால்களையும் துன்பங்களையும் தோல்விகளையும் காண்பவர்கள் தொழில்முனைவோர்கள் என்றால் மிகையில்லை. அப்படிப்பட்ட தொழில் வாழ்க்கையில் யாரும் அடையாத வெற்றியை கண்ட ஒருவரா இப்படிப்பட்ட முடிவை எடுத்தார் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.

அவர் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதத்தில் ‘என்னுடைய மரணத்துக்கு வேறு யாரும் காரணம் இல்லை. பணச் சுமை மற்றும் வருமான வரி தொந்தரவுதான் காரணம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள்கூட அடுத்த வழியை யோசிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள் பலர். பல ஆயிரம் கோடியில் ஆண்டு விற்பனை செய்யும், லாபம் ஈட்டும் தொழிலின் அதிபர் இப்படியொரு கடிதத்தை எழுதிவிட்டு தற்கொலை செய்வதுதான் இங்கே பல கேள்விகளை எழுப்புகிறது. சரி அவருக்கு என்னதான் பணப் பிரச்சினை, வருமான வரித் துறையினர் கொடுத்த தொந்தரவு என்ன?

தொழில்-முதலீடு-கடன்-வரி இவையெல்லாம் எல்லா தொழில்முனைவோர்களுக்கும் உள்ள சவால்கள். சித்தார்த்தாவின் பிரச்சினையைப் பார்க்கும் முன், கடன், பிரைவேட் ஈக்விட்டி, வருமான வரி இவற்றைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக நிறுவனங்கள் தொழில் அபிவிருத்திக்கு முதலீடு தவிர வங்கிக் கடன் பெறுவது சாதாரணமான ஒன்று. கடனுக்கான வட்டி மற்றும் அசலை உரிய நேரத்தில் கட்டும் பட்சத்தில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை. ஆனால், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிவிட்டு திருப்பித்தராமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால் அது நாட்டை உலுக்கும் செய்தியாக மாறிவிடுகிறது. கடன் வாங்குவதும் கடனைத் திருப்பிச் செலுத்துவதும் ஒவ்வொருவரின் கடமை. அது திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொறுப்பும் அவரவருக்கு உரியதே.

பிரைவேட் ஈக்விட்டி அதாவது நிறுவனங்களின் முதலீடு என்பது அடிப்படையில் வித்தியாசமானவை. இ-காமர்ஸ் போர்ட்டல் போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடனாகக் கொடுக்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. இத்தகைய தொழில்களில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இத்தகைய முதலீட்டிற்கு குறிப்பிட்ட வட்டி என்று கொடுக்கப்பட வேண்டியதில்லை. லாபத்தில் பங்கு உண்டு. பங்கு விலை உயர்வில் பயனுண்டு. இவர்களது நோக்கமே பங்குகளில் ஒரு விலையில் முதலீடு செய்து, குறிப்பிட்ட காலத்தில் நிறுவனத்தின் மதிப்பை பெருக்கி இதனால் ஏற்படும் பங்கு விலை உயர்வில் பயன் அடைவதுதான்.

வங்கிகள் வட்டியும், அசலும் சரியாக வருகிறதா என்பதோடு நிறுத்திக்கொள்கின்றன. ஆனால், பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் ஒரு கம்பெனியில் குறைந்த அளவில் பங்குகளை வைத்திருந்தாலும், தாங்கள் முதலீடு செய்த நிறுவனத்தின் விற்பனை இலக்கு, லாப இலக்கு என்று தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அந்த அடிப்படையில் சித்தார்த்தாவிடம் ஏற்கனவே முதலீடு செய்திருந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களில் ஒன்று தமது முதலீட்டினை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு ஒருவரிடம் பெரும் கடனாக பெற்று சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

ஏராளமான பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் இலக்குகளை அடைய தொழில் முனைவோர்களை வற்புறுத்தலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்குவதாக பரவலாக சொல்லப்படுகிறது. நிச்சயமாக தேவையான சமயத்தில் வங்கிகள் கொடுக்க முடியாத பணத்தை இத்தகைய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் கொடுத்து உதவுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தொழில் நிறுவனங்கள், ‘இது கடன் அல்ல; இதற்கு லாபத்தில் பணம் கொடுத்தால் போதும், என்பதை உணர்ந்து தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் நிறுவன பொறுப்பாக எடுத்துக்கொண்டால் சித்தார்த்தாவின் முடிவு போல் நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஓலா, பே டிம், ,ஸ்விகி உட்பட 4,200-க்கும் மேற்பட்ட புதிய கம்பெனிகளில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள முதலீடு செய்துள்ளன.

அமெரிக்காவில் தொழிலில் முயற்சி செய்து தோல்வி அடைந்தால் உதவ அரசு சட்டங்கள் உள்ளன. தற்போது இந்தியா
விலும் திவால் சட்டம் உள்ளது. திவால் சட்டம் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்
பட்டிருக்கிறது. விடா முயற்சி செய்து வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்களையும், தொழிலிலிருந்து பணத்தை வேறுவிதமாக எடுத்து பயன்படுத்தி திட்டமிட்டு தோல்வி அடைந்தவர்களையும் வித்தியாசப்படுத்தி பார்க்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. எனவே தொழில்முனைவோர்கள் “மயிர் நீப்பின் உயிர் நிப்பான் கவரிமான்” என்பது போல தனிப்பட்ட முறையில் தொழில் தோல்வியை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

2017-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரி சோதனையில் சுமார் ரூபாய் 480 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் இருப்பதாக வரித்துறை சித்தார்த்தாவிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளது. இந்தத் தொகைக்கு ஒரு பகுதியாக சித்தார்த்தாவின் மைண்ட் ட்ரீ பங்குகளை வருமான வரி இலாகா பறிமுதல் செய்து வைத்து விற்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஹவாலா பரிவர்த்தனைகளிலும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முழுமையான உண்மை வெளிவரும்வரை இதில் எந்த முடிவுக்கும் நம்மால் வர முடியாது.

அதேசமயம், வரி விதிப்பைப் பொறுத்தவரை, அது அனைவருக்குமே பொதுவான கடமை. தொழிலதிபருக்கும், சாதாரண கடை நிலை ஊழியனுக்கும் பொதுவானது. முடிந்தவரை வரி தொடர்பாக நேர்மையாகவும், சரியான நேரத்திலும் கடமை ஆற்றுவது எல்லா பிரச்சினைகளையும் தவிர்க்க உதவும்.
அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் “ஒரு பூவிலிருந்து தேனீ எடுக்கக்கூடிய தேனின் அளவு பூவையும் நோகடிக்க கூடாது தேனீயும் அளவு மீறாமல் அதிகமான தேனை எடுத்து விடக்கூடாது என்பது போலதான் அரசன் வரியை வசூலிக்க வேண்டும்” என்கிறார்.

வரி கட்ட வேண்டியது ஜனநாயகக் கடமை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், வரி கட்டுபவர்கள் தங்களின் தொழிலை மேலும் பெரிதாக்க வேண்டும் என்கிற உற்சாகத்தை அடையும் வகையிலும், தொழில் மீது சலிப்புக்கு ஆளாகாமல் இருக்கும் வகையிலும் வரி வசூல் முறை இருப்பதுதான் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். தொழிலதிபர்களது அதிர்ச்சி முணுமுணுப்பு, பலத்த குரலாய் மாறுவதற்கு முன் இதில் அரசு கவனம் செலுத்துவது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x