Published : 12 Aug 2019 11:46 AM
Last Updated : 12 Aug 2019 11:46 AM

எண்ணித் துணிக: பிசினஸ் மாடல் தயாரா?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப்புக்கு ஐடியா கிடைத்ததா? குட். தொழில் தொடங்க ரெடியா? பலே. எப்படி பணம் பண்ண உத்தேசம்? இதென்ன கேள்வி, பொருளை விற்றுத்தான் என்பீர்கள். அது அத்தனை லேசில்லை. அதற்கு முன் உங்களுக்கு தேவை ஒரு மாடல். விளம்பரத்துக்கு அல்ல, உங்கள் வியாபாரத்துக்கு. அதுதான் பிசினஸ் மாடல். இது இல்லாமல் தொழில் தொடங்குவது அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டுவது போல. பேஷாய் கட்டலாம். என்ன, மொட்டை மாடி சரிந்து சீக்கிரமே பேஸ்மென்ட் ஆகிவிடும்.

ஸ்டார்ட் அப்புக்கும் ஆதாரம் பிசினஸ் மாடல். யார் வாடிக்கையாளர், அவருக்கு என்ன விற்கப் போகிறீர்கள், அவரிடமிருந்து என்ன, எப்படி, எப்பொழுது பணம்
பெறத் திட்டம், வருவாய்க்கு வேறென்ன வழிகள் போன்ற கேள்விகளுக்கான விடைகள் பிசினஸ் மாடலில்தான் இருக்கின்றன. சுருக்கமாய் சொன்னால் உங்கள் ஸ்டார்ட் அப் பணம் பண்ணும் பிளான். விற்றோம் பெற்றோம் என்பதல்ல தொழில். வாடிக்கையாளரின் தேவையை சிந்தித்து, அவர்களிடம் எப்படி விற்பது, எந்தெந்த வழிகளில் விற்பது, போட்டியாளர்களை விட எவ்வாறு வித்தியாசப்படுவது போன்றவற்றின் மொத்த உருவம்தான் பிசினஸ் மாடல்.

பல காலமாக சானிடரி நாப்கின் விற்பனையில் இருந்தாலும் இந்தியப் பெண்களில் இரண்டு சதவீதத்தினர் மட்டுமே அதைப் பயன்படுத்தி வந்தனர். அத்தியா வசியமான பொருளை ஏன் இவ்வளவு குறைவானவர்கள் மட்டுமே வாங்குகின்றனர்? ஏனெனில் நாப்கின் பிராண்டு களின் விலை அதிகம். அந்த விலை தந்து மாதாமாதம் வாங்கும் வசதி பலருக்கு இல்லை. விலை குறைவாய் விற்றால் தான் பெருவாரியான பெண்களை வாங்க வைக்க முடியும் என்பதை மற்றவருக்கு முன் உணர்ந்தார் ‘அருணாசலம் முருகானந்தம்’. குறைந்த விலையில் அப்பொருளை விற்க அதை முதலில் குறைந்த செலவில் தயாரிக்க வேண்டும். விநியோகஸ்தர்கள், கடைக்காரர்களுக்கு தரப்படும் கமிஷனை குறைக்க வேண்டும்.

விளம்பரச் செலவுகள் இல்லாமல் கீழ்தட்டு மக்களிடம் கூட சென்று சானிடரி நாப்கின் முக்கியத்துவத்தைக் விளக்கி அவர்களை வாங்க வைக்க வேண்டும். இத்தனை ‘வேண்டும்’ இருக்க எதையுமே பெரிய கம்பெனிகள் கண்டுகொள்ளவில்லை. பணம் இருக்கும் பெண்கள் வாங்குகிறார்கள், விற்ற வரை போதும் வந்த வரை லாபம் என்று சானிடரி நாப்கின் மார்க்கெட்டை வளர்க்க எந்த முயற்சியையும் எடுக்காமல் இருந்தனர். அடித்தட்டு பெண்களையும் வாங்க வைக்க வேண்டும் என்றால் சானிடரி நாப்கின் பிசினஸ் மாடலை மொத்தமாய் மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்தார் அருணாசலம். பொருளைத் தயாரிக்கும் விதத்திலிருந்து அதைப் பெண்களிடம் விற்கும் வரையிலான செயல்முறையை மாற்றியமைக்கும் வழிகளைத் தேடினார்.

அவர் முயற்சியின் விளைவு, உழைப்பின் பிரதிபலிப்புதான் ‘ஜெயஸ்ரீ’ என்ற ஸ்டார்ட் அப்! மற்ற கம்பெனிகள் விலையுர்ந்த இயந் திரங்கள் மூலம் சானிடரி நாப்கினை தயாரிப்பது தான் உற்பத்தி செலவு அதிக மாவதற்கு காரணம் என்பதை உணர்ந்தார் அருணாசலம். அக்குறையை நீக்க குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். மற்ற கம்பெனிகள் ஒரு ஊரில் தொழிற்சாலை நிறுவி அங்கு மொத்த நாப்கினையும் தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வந்தனர். அதனால் அதன் விநியோக செலவு கூடுவதை உணர்ந் தார். அதற்கு மாற்றாக தன் விலை குறைவான இயந்திரத்தை நாடு முழுவதும் உள்ள அரசு சாரா அமைப்புகள், சுயஉதவி குழுக்கள், பெண் தொழில்முனை வோர்களுக்கு கொடுத்து அவர்களை தங்கள் வீடுகளில் தயாரிக்கும்படி செய்தார்.

இதனால் தயாரிப்பு செலவு கணிசமாக குறைந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளில் நாப்கின் தயாரித்து தங்கள் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் நேரடியாக சென்று அதன் அவசியத்தைப் பற்றி, அதன் பயன்பாட்டைப் பற்றி வாய் வழி மார்க்கெட்டிங் செய்ய வைத்தார். இதனால் விளம்பர கோடிகள் இல்லாமல் பொருள் பற்றிய விழிப்புணர்வு பல லட்சம் பெண்களுக்கு கிடைத்தது. ஆக மொத்தம், சானிடரி நாப்கின் என்ற பொருளின் தயாரிப்பு முதல் விளம்பரம் வரை ஆண்கள் ஆதிக்கத்திலிருந்து முழுவதுமாக மாற்றி மொத்த விநியோக முறையை பெண்களின் கட்டுப்பாட்டில் வரும்படி தன் பிசினஸ் மாடலை மாற்றியமைத்தார்.

இப்பொருள் பிரிவு அதுவரை பார்த்திராத பிசினஸ் மாடல் அவருடையது. அந்த பிசினஸ் மாடலின் படி விற்ற சானிடர் நாப்கின் விலை கணிசமாகக் குறைய, பெருவாரியான பெண்களுக்கு பொருள் பற்றிய விழிப்புணர்வு வளர அதிக எண்ணிக்கையில் பெண்கள் சானிடரி நாப்கின் வாங்கி பயன்படுத்த துவங்க இன்று அதை உபயோகிப்பவர் எண்ணிக்கை பத்து சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதை நூறு சதவீதமாக்குவதே தன் கனவு
என்கிறார் அருனாசலம். தொழில்நுட்ப, மார்க்கெட்டிங் திறனைத் தாண்டி திறமையான பிசினஸ் மாடல் வடிவமைத்
ததால் பெற்ற சூப்பர் வெற்றி இது!

அந்தக் கால ‘குடியிருந்த கோயில்’ படத்தை யாரேனும் இப்பொழுது ரீமேக் செய்தால் அப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடலை சற்றே மாற்றினால் ஸ்டார்ட் அப்புக்கு பிரயோஜனப்படும்: ‘ஆடலுடன் பாடலை சேர்த்து ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம். ஐடியாவுடன் மாடலை சேர்த்து ஸ்டார்ட் அப் செய்வது நலம் நலம் நலம்’!
அப்படியே பாடிக்கொண்டிருங்கள். பிசினஸ் மாடல் பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த வாரம் பேசுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x