Published : 11 Aug 2019 09:59 AM
Last Updated : 11 Aug 2019 09:59 AM

நட்சத்திர நிழல்கள் 18: எது களங்கம் புவனா?

செல்லப்பா

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்த வரை பெண்ணுடம்பைப் புனிதமாகக் கருதிக் கொண்டாடும் போக்கு தொடர்ந்துகொண்டே இருக் கிறது. மிக அரிதான சந்தர்ப்பங் களில் இதற்கு மாறுபாடான சித்தரிப்புகள் இடம்பெறுகின்றன. புனிதம் என்று ஒருபக்கம் தூக்கி நிறுத்தும் போதே இழிவு என்னும் மறுபக்கமும் துருத்திக்கொண்டு நிற்கிறது.

நாம் காணப்போகும் புவனா தமிழில் கொண்டாடப்பட்டவள். ஏனெனில், அவள் புனிதம் எனும் அந்தக் கருத்தாக்கத்துக்கு வலுச்சேர்த்தவள். அவள் செய்தது சரிதானா என்பதை 40 ஆண்டுகள் கடந்த பின்னர்கூட யாராவது கேள்வி கேட்கக்கூடும் என்பதை அவள் முன்னுணர்ந்திருந்தாளா என்பதும் தெரியவில்லை. எங்கேயாவது புவனாவைப் பார்க்க நேர்ந்தால் கேட்கலாம்; ஒருவேளை அவளுடைய மகன் பாபுவேகூடக் கேட்டிருக்கவும்கூடும்.

மகரிஷி எழுதிய ‘புவனா ஒரு கேள்விக் குறி’ என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு, பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம் எழுத, அதே பெயரில் இயக்கியவர் எஸ்பி.முத்துராமன். படம் 1977-ல் வெளியானது. புவனாவாக வேடமேற்றிருந்தவர் நடிகை சுமித்ரா. புவனா காதலித்த நாகராஜ், ஒரு பெண்பித்தன். அவர்களது முதல் சந்திப்பே மிக அபூர்வமான நிகழ்வு.

மயங்குகிறாள் ஒரு மாது

தொழில் ஒன்றைத் தொடங்குவது தொடர்பாக, நாகராஜும் அவனுடைய நண்பன் சம்பத்தும் சென்னைக்குத் தொடர் வண்டியில் சென்றனர்; புவனாவுடைய அண்ணன் முத்துவும் அதே பெட்டியில் சென்றான். வழியில் மாரடைப்பால் முத்து இறந்துவிடுகிறான். அவனது சூட்கேஸில் இருந்த எக்கச்சக்கமான பணத்தை அபகரித்துத் தொழிலுக்கு மூலதனமாக்கிவிடுகிறான் நாகராஜ். தன் உயிரைக் காப்பாற்றிய நண்ப னான நாகராஜை சம்பத்தால் தட்டிக்கேட்க முடியவில்லை. அவனது தவறுக்கு உடந்தையாகிவிடுகிறான்.

அண்ணன் முத்துவின் மரணம் குறித்த விவரமறியவும் கோயில் திருப்பணிக்குக் கொண்டுசென்ற கணக்கில் வராத பணம் குறித்து விசாரிக்கவும் நாகராஜைச் சந்தித்தாள் புவனா. முதலில் திடுக்கிடும் நாகராஜ் பிறகு சுதாரித்துக்கொள்கிறான். எப்படியும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கை கொண்ட நாகராஜ் அதற்கு வாய்ப்பாக அமையும் எந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை. இப்போது புவனா தனது வாழ்வில் ஒரு சிக்கலை ஏற்படுத்திவிடுவாளோ என்று பயந்தவன், அவளிடமிருந்து தப்பிக்க காதல் எனும் தந்திரமான வழியைக் கையாள்கிறான். ஏற்கெனவே பெண்கள் பலருக்கு விரித்தது போன்ற காதலெனும் மெல்லிய வலையை அவளைச் சிக்கவைப்பதற்காக அவன் வீசுகிறான். நாகராஜின் காமுகம் அறியாத புவனா நல்வாழ்வுக்கான பாதையாகக் கருதி அவன் மீதான காதலை வளர்க்கிறாள்.

காதல் பித்தேறிய ஒரு கணத்தில் மதிமயங்கித் தன்னை இழக்கிறாள் புவனா. அதற்காகவே காத்திருந்த நாகராஜ் காரியம் சாதிக்கிறான். காலம்காலமாகப் பெரும்பாலான பெண்கள் எப்படி இப்படி ஏமாந்துகொண்டேயிருக்கிறார்கள் என்பது வாழ்வின் புரிபடாத மர்மங்களில் ஒன்று. திரைப்படம் என்பதால் ஒருமுறை ஒன்று சேர்ந்ததாலேயே புவனா எளிதாக கருத்தரித்துவிடுகிறாள். ஆனால், அதை நினைத்து அவளால் மகிழ்ச்சியடைய முடியாது ஏனெனில், அவள் இப்போது மனைவி அல்ல; வெறும் காதலி. காதலி குழந்தை பெற்றுக்கொள்வதை இன்னும் சமூகம் அங்கீகரிக்கவில்லையே!

ஒரு கொடியில் இரு மலர்கள்

மனைவியாகும் முன்னர் தாயாகப் போவதை நினைத்து அஞ்சுகிறாள் புவனா. இருவரும் இணைந்து செய்த தவறுக்கு அவள் மட்டுமே அஞ்சி நடுங்குகிறாள். நேரிட உள்ள ஆபத்து குறித்து அறிந்த புவனா, நாகராஜைத் திருமணத்துக்கு வற்புறுத்துகிறாள். இன்பம் இரு வருக்குத் துன்பம் ஒருவருக்கா எனும் கேள்வி நாகராஜிடம் எழவே இல்லை. நாகராஜ் வழக்கம்போன்ற கருக்கலைப்பு அஸ்திரத்தை புவனாவிடம் செலுத்தப் பார்க்கிறான். அந்த அஸ்திரம் புவனா விடம் செல்லுபடியாக வில்லை. அவள் குழந்தையைப் பெற்றே தீருவேன் எனச் சாதிக்கிறாள்.

புவனாவின் நெருக்குதலில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறான் நாகராஜ். இந்த வேளையில் நாகராஜின் முதலாளியுடைய மகளான மனோகரியும் நாகராஜை மணக்க விரும்புகிறாள். செல்வந்தப் பெண் என்பதால் அவளை மணம்புரியவே நாகராஜும் விரும்புகிறான். ஒருகட்டத்தில், புவனாவால் தனது எதிர்காலத்துக்கு ஆபத்து வரும் என்றால் அவளைக் கொன்று விடவும் தயாராக இருப்பதாகச் சொல்கிறான் நாகராஜ். இதைக் கேட்டு அதிர்ந்துபோகிறான் சம்பத். நிலைமையறிந்த சம்பத், இந்தச் சிக்கலைத் தீர்க்க புவனாவைத் தானே மணம்புரிய முடிவெடுக்கிறான்.

புவனாவின் வீட்டுக்கு வரும் சம்பத் அவளுடைய தாயிடம் பேசுகிறான். தெரியாமல் தவறு நடந்துவிட்டதாகவும் தான் புவனாவைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறான். உண்மையைத் தாயிடம் கூற முடியாத கையறு நிலையில் நிற்கும் புவனா அதிர்ச்சியடைந்தாலும் வேறுவழியின்றி இந்த ஏற்பாட்டுக்கு இசைவு தெரிவிக்கிறாள். சம்பத்தும் புவனாவும் மணம்புரிகிறார்கள். நாகராஜ் மனோகரியைக் கைப்பிடித்துவிடுகிறான். தெருக்களில் துணிமணிகள் விற்றுவந்த நாகராஜ் நகரின் முக்கியமான வியாபாரப் புள்ளியாக மாறிவிடுகிறான். தொடர்ந்து நாகராஜுடனான நட்பைப் பேணும் சம்பத் அவனது நிறுவனத்திலேயே பணியாற்றுகிறான்.

குடும்பம் ஒரு கதம்பம்

நாகராஜ் திருமண வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். அதே வேளையில் புவனா பெயருக்குத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். அவளும் சம்பத்தும் தனித்தனியாகவே உறங்குகிறார்கள். சம்பத் புவனாவுக்கு ஒரு பாதுகாவலனாக இருக்கிறானே ஒழிய, அவளுடைய கணவனாக மாறும் வாய்ப்பை அவனுக்கு அளிக்கவே இல்லை புவனா. மறைந்துபோன தன் காதலியின் நினைவு தன்னிடமிருந்து முழுமையாக விலகி மனம் முழுவதும் புவனாவே நிறைந்திருக்கும் நிலையை அவன் புவனாவிடம் மனப்பூர்வமாகவே எடுத்துவைக்கிறான். என்றபோதும், புவனா, சம்பத்துக்கும் தனக்கு மிடையிலான மெல்லிய திரையை விலக்கத் தயாராக இல்லை. சம்பத் இறந்த பிறகு அவனது சடலத்தின் மீது அந்தத் திரையைப் போர்த்தி, அவள் ஒரு ‘பாந்தமான’ கைம்பெண் கோலத்துக்குத் தயாராகிவிடுகிறாள். மரபை அப்படியே சிந்தாமல் சிதறாமல் கைப்பற்றும் புவனா கொண்டாடப்பட்டதில் ஆச்சரியமில்லையே.

ஓர் ஆணுக்குத் தன்னை அளிப்பதற்கும் மறுப்பதற்கும் பெண்ணுக்கு முழுமையான உரிமை உண்டு. மனைவி என்றபோதும் கணவன் விரும்பும்போதெல்லாம் அவனுடைய தேவையை நிறைவேற்றிவைக்க வேண்டிய அவசியமில்லைதான். இதெல்லாம் புரிந்துகொள்ளக்கூடியவையே. ஆனால், அதற்கு புவனா தரும் விளக்கம்தான் அபத்தமானது. தான் களங்கப்பட்டவள் என்றும் சம்பத் போன்ற மனித தெய்வத்துடன் உறவில் ஈடுபட்டு வாழத் தனக்குத் தகுதியில்லை என்றும் அவள் கூறுகிறாள். புவனா போன்ற புனிதவதிகள்தாம் ‘புதிய பாதை’ சீதா போன்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள்.

புவனாவின் இந்த முடிவுக்கு அவள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், பெண் தன் உடம்பை ஒருவருக்குத்தான் அர்ப்பணிக்க வேண்டும் என்ற புனிதத்தன்மையைக் காலங்காலமாகச் சமூகம் பெண்ணுக்குள் ஊற்றிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் சமூகம் கண்ணுக்குத் தெரியாத சாட்டையைக் கையில் ஏந்தியபடி பெண்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. புனிதத்தன்மையும் சாட்டையும் புவனா போன்றவர்களின் நினைவில் புரண்டுகொண்டிருக்கக்கூடும். இப்போது பெண்கள் பேரளவில் மாறிவிட்டார்கள். புவனாபோல் அபத்தமான சிந்தனையில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. மரபூறிய சிந்தனையால் மதிகெட்டு முடிவெடுத்த புவனா, தனது முடிவு தவறென்று உணர்ந்திருக்கக்கூடும். இந்த நாற்பதாண்டுகளில் அவள் பார்த்த மனிதர்களும் சம்பவங்களும் அவளுக்குத் தெளிந்த நல்லறிவைத் தந்திருக்கக்கூடும் எனும் நம்பிக்கையுடன் அவளிடமிருந்து விடைபெறுவோம்.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x