Published : 11 Aug 2019 09:53 am

Updated : 11 Aug 2019 09:53 am

 

Published : 11 Aug 2019 09:53 AM
Last Updated : 11 Aug 2019 09:53 AM

எல்லாம் நலமே 18: குழந்தைப் பிறப்பில் தாமதம் ஏன்?

why-the-delay-in-childbirth

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி மூன்றே மாதங்களில், “வீட்ல விசேஷமா?” என்று கேட்பது தவறு. ஆனால், அதற்காக எந்தவிதக் கருத்தடை முறைகளும் பயன்படுத்தாமல் குறைந்தபட்சம் ஓராண்டு கழித்தும் கருவுறவில்லை என்றால், அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறுதான். கருத்தரிக்கும் விஷயத்தில் ஆண், பெண் இருவருக்குமே சம பங்கு இருப்பதால் கருத்தரித்தல் தொடர்பான சிகிச்சைக்குக் கணவன், மனைவி இருவருமே போக வேண்டும். பெண்ணுடன் துணைக்கு வரும் அம்மா, மாமியார் என அனைவரிடமும் எவ்வளவுதான் சொல்லி அனுப்பினாலும் கணவன் வருவதே இல்லை. “முதல்ல இவளுக்குப் பாருங்க” என்று சொல்லிவிடுகிறார்கள். பெரும்பாலான ஆண்கள் வர மறுத்துவிடுகிறார்கள்.

இப்படித்தான் என்னிடம் வந்த ஒரு பெண்ணுக்குச் சீரற்ற மாதவிடாய் இருந்தது. முதலில் அதைச் சரிசெய்தோம். பிறகு லேப்ராஸ்கோபி செய்வதுவரை போயாகி விட்டது. அதற்கு முன் கணவரைப் பரிசோதித்து அதன் முடிவு தெரியவந்தால்தான் பெண்ணுக்கு சிகிச்சையைத் தொடர்வேன் என்று சொல்லிவிட்டேன். கடைசியில் பார்த்தால் அந்தப் பெண்ணின் கணவருக்கு விந்தணுவே இல்லை. இதை முதலிலேயே செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தால் வீணாக அந்தப் பெண்ணுக்குப் பலவிதமான பரிசோதனை களைச் செய்திருக்க வேண்டியதே இல்லை. ஏனென்றால், ஆண்களைப் பொறுத்தவரை சிலருக்கு விந்தணு எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் இல்லாமல் போகலாம். சிலருக்கு விந்தணுவே இல்லாமலும் போகலாம். சிலருக்கு விந்தணுவின் பயணம் துரிதமாக நிகழாமல் மெதுவாக நகர்வதாகவும் இருக்கலாம்.

இருவருக்கும் ஈடுபாடு தேவை

குழந்தை பெறுவது பற்றிப் பெண் மட்டும் ஆர்வமாக இருந்தால் போதாது. கணவன், மனைவி இருவரும் இது பற்றி ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டும். குழந்தை பெறுவதில் சிரமம் இருப்பவர்களுக்கான சிகிச்சை முறைகள் நேரத்துடனும் பணத் துடனும் சம்பந்தப்பட்டவை. சிகிச்சை முழுமையாக நடக்க வேண்டும் என்றால் அதற்குக் கணவரும் ஆசைப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் சிகிச்சை முழுமையடையாமல் போகலாம். அதேபோல் மாதவிடாய்ச் சுழற்சிக்கு நடுவில் கருத்தரிக்கும் வாய்ப்புள்ள நாட்களில் இருவரும் உறவுகொள்ள வேண்டும். இதை ஒருவர் விரும்பி, விரும்பாத இன்னொருவர் மேல் திணிக்க முடியாது.

மனைவி குழந்தை வேண்டும் எனவும் கணவன் இப்போது என்ன அவசரம், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டால் குழந்தைப் பேறு சிகிச்சை தொடர்பான செயல்பாடுகள் முழு வீச்சோடு நடக்க முடியாது. “ரெண்டு வருஷமா டாக்டர்கிட்டே போனோம். என்னென்னமோ சிகிச்சை அளிச்சாங்க, ஆனா, குழந்தை வரலை” என்று டாக்டரைக் குறைசொல்லிப் பயன் இல்லை.

பெண்ணுக்கான சோதனைகள்

பெண்ணுக்கு முதலில் உடல்நலம் சார்ந்த பொது விஷயங்கள் குறித்துப் பரிசோதனை செய்வோம். இரண்டாவது, ஹார்மோன் பரிசோதனைகள். மாதவிடாய்ச் சுழற்சிக்கும் கருத்தரிப்புக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து ஹார்மோன்களின் சுரப்புப் பற்றி அறியவே இந்தப் பரிசோதனைகள். குறை பாடுகளைத் தெரிந்து நிவர்த்தி செய்யப்
பார்க்கிறோம்.

பிறகு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன். கருப்பை வளர்ச்சி சரியாக இருக்கிறதா, சினைமுட்டைப்பைகளின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா, அவற்றின் நிலை எப்படி இருக்கிறதென்று பார்ப்போம். தேவைப் படுமானால் அடுத்து லேப்ராஸ்கோபி செய்வோம். இது சிறிய அறுவைசிகிச்சை. சிறு துளையிட்டு அதன் மூலம் உள்ளுக்குள் இருக்கும் விஷயங்களைப் பார்ப்போம். மயக்க மருந்து கொடுத்து முக்கால் நாள் அல்லது முழு நாள் மருத்துவமனையில் வைத்துத்தான் இதைச் செய்ய முடியும். கருப்பை வளர்ச்சி, கருக்குழாய்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்ப்போம். சினைக் குழாய்களில் அடைப்போ நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்று பார்ப்போம்.

இவை ஆணுக்கு

ஆணுக்கும் முதலில் பொதுவான பரிசோதனைகளைச் செய்வோம். பிறகு விந்தணு எண்ணிக்கை, விந்தணுவின் விரைவுத் தன்மை (அதாவது அது கருமுட்டையை சென்றடையும் தன்மை), விந்தணுவின் தரம் போன்றவற்றைப் பார்ப்போம். சிறு வயதில் பொன்னுக்கு வீங்கி (mumps) மாதிரி ஏதாவது வந்திருக்கிறதா எனக் கேட்டறிவோம். உடலுறவு கொள்வதில் கணவன் – மனைவி இருவருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். DNA – Fragmentation சோதனை மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம். மாத்திரை, மருந்துகள் மூலம் சரிசெய்து எப்போது சேர்ந்து இருந்தால் குழந்தை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று இயற்கையாகக் கருத்தரிக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் முதலில் பார்ப்போம்.

அவசரம் தேவையில்லை

இவற்றில் எல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றால் Intra Uterine Insemination (IUI) செய்வோம். ஒரு பெண்ணுக்கு மருந்துகள் கொடுத்து, ஸ்கேன் செய்து கருமுட்டை எந்த நேரம் வருகிறது என்று பார்ப்போம். அது ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்தவுடன் அடுத்த 36 மணி நேரத்துக்குள் கருப்பையில் இருந்து வருவது மாதிரி ஊசி போடுவோம். அதே நேரத்தில் ஆணிடம் இருந்து நல்ல வலுவுள்ள விந்தணுக்களை (இதற்கென்று சில முறைகள் உள்ளன) எடுத்து, அதைக் கருப்பைக்குள் வைக்கிறோம். சினை முட்டையும் விந்தணுவும் சேரும் கருவுறுதல் இயற்கையான முறையில்தான் நடக்க வேண்டும் என்றாலும், அதற்கான தக்க சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்போம்.
இப்படிப் பலவிதமாக முயன்ற பிறகும் எதுவும் நடக்கவில்லை என்றால்தான் செயற்கை முறையில் கருமுட்டையை உருவாக்க முயல்வோம்.

கருவுறுதல் பிரச்சினை தொடர்பாகச் சிலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சிகிச்சைக்கு கணவன் – மனைவி இருவரும் வர வேண்டும். ஆணின் விந்தணு எண்ணிக்கை, விந்தணுவின் விரையும் தன்மை போன்றவற்றை ஆரம்பத்திலேயே பரிசோதித்துப் பார்க்க வேண்டும். பெண் கருவுறுதலில் இருக்கக்கூடிய சிக்கல்களை ஒவ்வொன்றாகச் சரிசெய்துகொண்டே வர வேண்டும். மாத்திரை, ஊசி, தகுந்த நேரத்தில் உறவுகொள்ளுதல், கருமுட்டை விந்தணுவைச் சேர்வதற்கான சூழலை உருவாக்குதல் இவையெல்லாம் செய்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் மட்டுமே அடுத்த கட்டச் செயல்பாடுகளில் இறங்கலாம். அதை விட்டுவிட்டு எடுத்ததுமே செயற்கைக் கருவூட்டலுக்குச் செல்லக் கூடாது.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு:
mithrasfoundation@yahoo.co.in


எல்லாம் நலமேகுழந்தைப் பிறப்புதாமதம்ஈடுபாடு தேவைசோதனைகள்ஆண்பெண்அவசரம்கருவுறுதல் பிரச்சினை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author