Published : 11 Aug 2019 09:53 AM
Last Updated : 11 Aug 2019 09:53 AM

நம்பிக்கை முனை: இவர்களும் ஊழியர்களே

ம.சுசித்ரா

வீட்டைத் தாண்டி வெளியே சென்று அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஓராயிரம் சிக்கல்கள் என்றால் தையல் வேலை, நகை வடிவமைத்தல், பேக்கேஜிங் வேலை, காலணிகளை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகளை வீட்டிலிருந்தபடியே செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். சொல்லப்போனால், அலுவலகம் சென்று பணிபுரியும் பெண்களுக்குக் குறைந்தபட்ச அங்கீகாரமும் ஊழியர்களுக்குரிய சலுகைகளும் கிடைக்கின்றன. ஆனால், இவர்களோ முகமற்றவர்கள்.

இப்படி வீட்டிலிருந்தே வேலை செய்யும் லட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் உள்ளனர். இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத அவர்களுடைய பணிவாழ்க்கையில் திருப்புமுனையான தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு ஆடை உற்பத்தி நிறுவனமான கோதாவரி கார்மென்ட்ஸ் லிமிடெட் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது.

நிராகரிப்பினால் கிடைத்த விடியல்

தன்னுடைய நிறுவனத்துக்காக வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்துவந்த பெண்களுக்குத் துணி, நூல், பொத்தான் போன்ற தையலுக்குத் தேவையானவற்றை வழங்கிய கோதாவரி கார்மென்ட்ஸ், தையல் மிஷினை அளிக்கவில்லை. அதை அந்தப் பெண் தொழிலாளர்கள் சொந்தமாக வாங்க வேண்டியிருந்தது. இப்படி வருடக்கணக்கில் பணியாற்றிவரும் பெண்கள் அநேகர். அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டதெல்லாம் தையல் கூலி மட்டுமே. இந்நிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண் தனக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவனத்திடம் கேட்டார்.

ஆனால், அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்படவே அவர் நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தின்படி இந்நிறுவனத்துக்காக வீட்டிலிருந்தவாறு பணிபுரியும் பெண்களும் ‘ஊழியர்களே’ என்று தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி அவர்களுடைய ஊதியத்தில் 8.5 சதவீதம் வைப்பு நிதியாகச் சேமிக்கப்படும். பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்பணியைத் தொடரும்பட்சத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் உறுதிப்படுத்தப்படும்.

வீட்டிலிருந்தபடியே தையல் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும். அதாவது, அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் வைப்பு நிதியைப் போலவே அலுவலகம் செல்லாமல் அது சார்ந்த பணிகளைச் செய்துவரும் எவரும் வைப்பு நிதியைக் கோரமுடியும்.

ஒன்றிணைய வேண்டும்

ஓர் அமைப்பின்கீழ் பணிபுரியும் பெண்களே ஒருங்கிணைந்து தங்களுடைய உரிமைக்குக் குரல் எழுப்பும் நிலை இதுவரை முழுவதுமாக எட்டப்படவில்லை. இந்நிலையில் எத்தகைய பின்புலமும் இன்றித் தனித்தனியே பணிபுரிந்துவரும் பெண்கள் தாங்களும் ஊழியர்களே என்கிற உரிமையை நாட்டுவதற்கான ஆலோசனை கேட்டபோது, “நெடுங்காலமாக உதாசீனப்படுத்தப்பட்டுவந்த தொழிலாளர்களுக்குக் கிடைத்திருக்கும் குறைந்தபட்ச வெற்றி இது. ஆனாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமே உறுதிப்படுத்தப்படாத நிலைதான் இன்றுவரை நீடிக்கிறது. புதிய ஊதியச் சட்ட மசோதாவின்படி 44 தொழிலாளர் சட்டங்கள் தற்போது நான்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இதில் ஊழியரின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, ஆரோக்கியம், தொழில் நிறுவனத்துடனான தொடர்பு உள்ளிட்ட பிரிவுகள் அடங்கும். இவற்றையெல்லாம் தொழிலாளர் சங்கங்கள் கோரிவருகின்றன. வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி உச்ச நீதிமன்றம் அவர்களை ஊழியர்களாக அறிவித்திருக்கும் இவ்வேளையில், ஊதிய சட்ட மசோதாவும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், லட்சக்கணக்கான பெண்களின் உழைப்பு இப்படி சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, எட்டு மணி நேர வேலைத் திட்டம், போக்குவரத்துக்கான செலவு உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட வேண்டும். கால நேரம் பாராமல் வேலை செய்ய வேண்டிய நிலையும், தங்களுக்கு உரிய உரிமை, சலுகைகளைக் கோரினால் பணி நீக்கப்படும் போக்கு ஆகியவற்றில் இருந்து பணிப் பாதுகாப்பு பெறும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உதிரிகளாக இருக்கும் இப்பெண்கள் அமைப்புகளின் பலத்தை உணர்ந்து ஒன்றிணைந்து தங்களுடைய உரிமையைக் கோர வேண்டும்” என்கிறார் ‘பெண் தொழிலாளர்கள் சங்க’த்தின் தலைவி சுஜாதா மோடி.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்து அவள் உழைப்பை மட்டுமே உறிஞ்சிவந்த நிறுவனங்களுக்கு இத்தீர்ப்பு மிகப் பெரிய சவுக்கடி. இந்த வழக்கின் கதாநாயகி அந்த முகம் தெரியாத பெண் தொழிலாளரே. அன்று தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் துவண்டுபோயிருந்தால், இன்று ஒட்டுமொத்த நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வீட்டு ஊழியர்களுக்கு விடிவு பிறந்திருக்காது. அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்தின்
இந்தத் தீர்ப்பு மட்டுமே தீர்வாகிவிடாது.

தங்களை ஊழியர்களாகச் சட்டம் அங்கீகரித்திருப்பதை உணர்ந்து சட்டத்தில் இருக்கும் நீதியை நடைமுறைக்குக் கொண்டுவரும் ஆற்றல் ஒவ்வொரு வீட்டு ஊழியரின் கையில்தான் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x