Published : 11 Aug 2019 09:53 AM
Last Updated : 11 Aug 2019 09:53 AM

வாழ்ந்து காட்டுவோம் 18: மாற்றுத்திறனாளிகளுக்குப் புதுவாழ்வு

ருக்மணி

சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் போன்றோருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதைப் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கிவருகிறது. பலருக்கும் அது குறித்த தகவல் தெரியாததால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டியது அரசின் கடமை என்றால், என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என அரசு அலுவலகங்களை அணுக வேண்டியது நம் உரிமை.

இரண்டு கால்களும் செயல் இழந்தவர்களுக்குக் கைகளால் மட்டும் இயக்கக்கூடிய மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
வயதுத் தகுதி: 12 முதல் 65 வயது வரை.
12 முதல் 15 வயது வரையுள்ளோருக்குச் சிறிய மூன்று சக்கர வண்டியும் 16 முதல் 65 வயது வரையுள்ளோருக்குப் பெரிய மூன்று சக்கர வண்டியும் வழங்கப்படும்.

1. இரண்டு கால்களும் இரண்டு கைகளும் செயல் இழந்தவர்களுக்குச் சக்கர நாற்காலி வழங்குதல்:

வயதுத் தகுதி: 5 முதல் 70 வயது வரை.

2. காதொலிக் கருவி வழங்குதல்:

வயதுத் தகுதி: 3 முதல் 70 வயது வரை.
தகுதி: காதொலிக் கருவியைப் பயன்படுத்துகிறவர் களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சோலார் பேட்டரி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

3. பார்வையற்றோருக்குக் கறுப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் வழங்குதல்: இரண்டு கண் களிலும் பார்வை இல்லாமல் 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

பிரெய்லி கைக்கடிகாரம் வழங்குதல்:
சுயதொழில் செய்பவராகவோ அமைப்புசாரா நிறுவனங் களில் வேலை செய்பவராகவோ இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணாக்கராகவும் இருக்கலாம்.

4. கால்தாங்கிகள் (காலிப்பர்) - ஊன்றுகோல் வழங்குதல்:

கால் ஊனத்துக்காக மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும்.

5. கால்களை இழந்தவர்களுக்குச் செயற்கைக் கால் வழங்குதல்:

விபத்தினாலோ பிற காரணங்களாலோ கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

6. மாணவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி வழங்குதல்:

கல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

பயணச் சலுகை

பேருந்துப் பயணச் சலுகை (பார்வையற்றோர்):

பார்வையற்றோர் அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். நகர, புறநகரப் பேருந்துகளில் மாவட்டம் முழுவதும் சென்றுவர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
அடையாள அட்டை பெற்றுள்ள இதர மாற்றுத் திறனாளிகள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பள்ளி, கல்லூரி, பணியிடம், தொழில் பயிற்சி பெற, மருத்துவமனையில் சிகிச்சை பெற போன்றவற்றுக்குச் செல்ல இலவச பேருந்துப் பயணச் சலுகை அளிக்கப் படுகிறது.

தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சென்று வர 75 சதவீத கட்டணச் சலுகையும் வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் பேருந்துப் பயணச் சலுகையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக உடன் செல்லும் ஒரு நபருக்கு 75 சதவீத பேருந்துப் பயணச் சலுகையும் அளிக்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை

a. பார்வையற்றவரைத் திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இருவருக்கும் அது முதல் திருமணமாக இருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கல்வித்தகுதியும் வருமான உச்ச வரம்பும் இல்லை. ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ.12,500 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்.

b. பேசும் திறனற்ற, காது கேளாதவரைத் திருமணம் செய்யும் நல்ல நிலையிலுள்ள நபருக்கு ரூ. 25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இருவருக்கும் அது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கல்வித் தகுதியும் வருமான உச்ச வரம்பும் இல்லை. ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ.12,500 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்.

ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது இரண்டு அவயங்களும் இல்லாத மாற்றுத்திறனாளியைத் திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளவர்க்கு ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இருவருக்கும் அது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கல்வித்தகுதியும் வருமான உச்ச வரம்பும் இல்லை ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ12,500 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளியை மணந்துகொள்ளும் மாற்றுத் திறனாளிக்கு 25,000 ரூபாய் உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இருவருக்கும் அது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கல்வித்தகுதியும் வருமான உச்ச வரம்பும் இல்லை. ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ12,500 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்.
மேற்கண்ட நான்கு வகையான திருமண நிதியுதவித் திட்டங்களிலும் பட்டயம், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயின்ற பெண்களுக்கு மட்டும் ரூ.50,000 ஊக்கத்தொகையுடன் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். ரூ.25,000 ரொக்கமாகவும் ரூ.25,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை:
மாற்றுத்திறனாளிகள், மாவட்ட அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் மருத்துவக் குழுவில் ஊனத்தின் தன்மையையும் அளவையும் குறிப்பிட்டுச் சான்று பெற வேண்டும்.
40 சதவீதத்தில் தொடங்கி அதற்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
குடும்ப அட்டை நகலையும் நான்கு பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையை வைத்திருந்தால், தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெற முடியும்.

கல்வி உதவித்தொகை

அரசுப் பள்ளியிலோ அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படிப்பவருக்கு ஆண்டுக்கு ரூ.1,000 முதல் ரூ. 7,000 வரை தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்புவரை படிப்பவருக்கு ஆண்டுக்கு ரூ.7,000 முதல் ரூ.1,00,000 வரை மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் (www.scolarships.gov.in). பார்வையற்ற மாணவ மாணவியர் களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை அரசு மூலம் வழங்கப் படுகிறது.

பாதுகாவலர் நியமனம்

மனவளர்ச்சி குன்றியவர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர், புற உலகச் சிந்தனையற்றவர், பலவகை மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குப் பாதுகாவலர் நியமனச் (கார்டியன்ஷிப்) சான்று வழங்குதல்:
விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையுடன் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்தவர்களுக்குப் பாதுகாவலரை நியமிக்கப் பெற்றோர் அல்லது நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு அறக்கட்டளை சட்டம் 199-ன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு மூலம் பாதுகாவலர் நியமனச் சான்று வழங்கப்படும். இதற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு (www.thenationaltrust.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x