Published : 11 Aug 2019 09:55 AM
Last Updated : 11 Aug 2019 09:55 AM

பெண்கள் 360: வறுமையால் நேர்ந்த கொடுமை

தொகுப்பு: முகமது ஹுசைன்

வறுமையால் நேர்ந்த கொடுமை

வீட்டு வேலைப் பணிக்காக குவைத்துக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்கள், வீட்டு முதலாளிகளால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதுடன் உடல்ரீதியான வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டனர். இவர்களில் எம்.அமுதா, ஜி.ராஜேஸ்வரி இருவரும் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிய நிலையில், வசந்தாமணியும் முத்துலட்சுமியும் கடந்த ஞாயிறன்று சென்னை திரும்பினார்கள். முத்துலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

குவைத்தில் தாங்கள் அனுபவித்த சித்ரவதை குறித்துக் கூறிய அமுதா, “அங்கே சிறிய காற்றோட்டம் இல்லாத அறையில் இரண்டு நாட்கள் உணவு இல்லாமல் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஓய்வு கிடைக்கும். என் கணவர் முடக்குவாதத்தால் முடங்கிப்போனதால்தான் நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலை ஆறு மணிக்கு வேலைத் தொடங்கி அதிகாலை 2 மணி வரைசெய்வேன். நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டிய பின்னரே அவர்கள் என்னை விடுவித்தார்கள். மேலும், ஏழு பெண்கள் அங்கே அகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசின் உதவி தேவை” என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நியாயம் கேட்டால் தண்டனையா?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ, கன்னியாஸ்திரி ஒருவர் மீதான பாலியல் புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரளம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த லக்கி கலப்புரம் என்ற கன்னியாஸ்திரி, அந்தப் போராட்டத்தைத் துணிச்சலோடு முன்னெடுத்துச் சென்றார். இந்நிலையில் லக்கி கலப்புரத்தி வாழ்க்கை முறை குறித்துப் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை இது குறித்து விளக்கம் அளிக்கும்படி லக்கி கலப்புரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் லக்கி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அவரைச் சபையிலிருந்து நீக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்துச் சட்டரீதியான போராட்டத்தில் இறங்கவுள்ளதாக லக்கி கலப்புரம் தெரிவித்திருக்கிறார்.

விடைபெற்றார் சுஷ்மா

முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 1952 பிப்ரவரி 14 அன்று பிறந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு 67 வயது. இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த பெண் சுஷ்மா ஸ்வராஜ். வழக்கறிஞரான சுஷ்மா ஸ்வராஜ், எமர்ஜென்ஸிக்குப் பிறகு பா.ஜ.கவில் இணைந்தார். 25 வயதில் அம்பாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டுயிட்டு வென்றார். அப்போதே மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்து, அப்போதைய நாடாளுமன்றத்தில் மிக இளம் வயதில் அமைச்சரானவர் என்ற பெருமையையும் பெற்றார்.

டெல்லி முதல்வராக 1998-ல் சிறிது காலம் பதவி வகித்ததன் மூலம் டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற புகழையும் தனதாக்கிக்கொண்டார். ஒளிபரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவுத் துறை எனப் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், ட்வீட் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கிறார். சுஷ்மாவின் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “மிகச் சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர், கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மா ஸ்வராஜின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்குத் தடையில்லை

சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் பெண்களின் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சவுதியில் தியேட்டர், விண்வெளித் திட்டம் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, வெளிநாடு செல்ல சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது.

21 வயது நிறைவடைந்த எந்தப் பெண்ணும், யாருடைய ஒப்புதலும் இல்லாமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்புக்கு சவுதி அரேபியப் பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்குத்தானா 370 நீக்கம்?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு மத்திய அரசு நீக்கியது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சையினி, தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “இனி நீங்கள் காஷ்மீரைச் சேர்ந்த அழகான பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். பாஜக அரசின் நடவடிக்கையால் இனி, கட்சித் தொண்டர்கள் காஷ்மீருக்குச் சென்று நிலம் வாங்கலாம்” என்று பேசியுள்ளார். காஷ்மீர் பெண்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. பேசியது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x