Published : 11 Aug 2019 09:55 am

Updated : 11 Aug 2019 09:55 am

 

Published : 11 Aug 2019 09:55 AM
Last Updated : 11 Aug 2019 09:55 AM

பார்வை: யாருக்குத் தேவை நேர்கொண்ட பார்வை?

nerkonda-parvai

டி. கார்த்திக்

இந்தியர்களின் மனசாட்சியை ‘நிர்பயா’ பாலியல் கொடூரம் விதிவிலக்காக தட்டியெழுப்பியது. ஆனால், அதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடக்கும்போதெல்லாம் பொதுவெளியில் பெண்களைக் குற்றவாளிகளாக்கும் போக்கு எட்டிப் பார்ப்பது வாடிக்கை. பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்க முயலும் பொதுப்புத்தியைப் பற்றிப் பேசியிருக்கிறது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம்.

குடும்பத்தைச் சார்ந்திராமல் சுயமாகவும் சுதந்திரமாகவும் தனியாக வீடெடுத்து, சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்கள் இன்று அதிகம். இப்படித் தனித்து வாழும் பெண்கள் நாகரிகமாக உடை அணிவதையும் ஆண்களோடு இயல்பாகப் பழகுவதையும் இரவு 11 மணிக்கு மேல் வீடு திரும்புவதையும் வைத்து அவர்கள் எல்லோரும் அனைத்துக்கும் இணங்குவார்கள் என்ற முன்முடிவோடு இந்தச் சமூகம் அணுகும் விதம் இந்தப் படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

கதையோட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், படத்தில் பெண்களைப் பழிவாங்கத் துடிக்கும் ஆண்கள், அவர்களைப் பாலியல் தொழிலாளர்களாக முத்திரை குத்த முயல்கிறார்கள். ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்றால், அவளுடைய நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி அதன்மூலம் அவளை நிர்மூலமாக்க முடியும் என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இப்படியான செயல்கள்.

பெண்ணின் விருப்பம் என்ன?

வார இறுதி என்பது கார்ப்பரேட் உலகில் குதூகலமான கொண்டாட்டமாகிவிட்டது. ரிசார்ட்டுகளில் பாலின பேதமின்றி ஆடிப் பாடி பொழுதைக் கழிப்பதும் அவற்றில் ஒன்று. அப்படி ரிசார்ட்டுக்கு வரும் பெண்கள், ஆண்களோடு ஒரே அறையில் தங்க நேர்ந்தால் ‘அவர்கள் தவறு செய்திருப்பார்கள்’ என்றே இந்தச் சமூகம் நம்புகிறது. பாலியல்ரீதியாகப் பெண்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்’ என்று அரதப்பழசாகிப் போன வசனத்தையே இந்த நூற்றாண்டிலும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

காலங்காலமாகப் பேசப்படும் இந்த வக்கிரமான சொற்றொடருக்கு இந்தப் படத்தில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஊசிக்குள் நூலை நுழைக்க முயற்சி பண்ணிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அந்த நூல் சரியானதா என்று நாம பார்ப்பதே இல்லை’ என்று ஆணைக் கேள்வி கேட்கிறது. ஆண்கள் குடிக்கலாம்; ஜாலியாக இருக்கலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், பெண்கள் குடித்தால், அவளுடைய குணநலன்களை சேர்த்துக் கொலைசெய்வதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பொதுவான ஒரு செயல்பாட்டை வைத்துப் பெண்களின் நடத்தையை மதிப்பிடும் போக்கு எவ்வளவு பிற்போக்குத்தனமானது என்பதையும் இந்தப் படம் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணை ‘அப்பாவி’ அபலைப் பெண்ணாகச் சித்தரிக்காததே படத்தின் சிறப்புகளில் ஒன்று. பெருநகரில் வசிக்கும் இளம் பெண், அங்கு கிடைக்கும் கட்டட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் பெண்ணாகவும் ஆண்களோடு டேட்டிங் செல்லும் பெண்ணாகவுமே காட்டப்பட்டிருக்கிறார். ஆனால், பாலியல் உறவு என்று வரும்போது, அது அவளுடைய தனிப்பட்ட விருப்பம்; அதை ஒருதலைபட்சமாக யாரும் தாங்களாகவே எடுத்துக்கொள்ளவோ, ரிசார்ட்டுக்குத் தனியாக அவள் வருகிறாள் என்பதால் எல்லாவற்றுக்கும் அவள் தயாராக வந்திருப்பாள் என்று முடிவெடுத்துக்கொள்ளவோ முடியாது.

அதைச் சொல்லும்விதமாகத்தான் கிளைமாக்ஸ் காட்சியில், “ஒரு பெண் ‘நோ’ என்று சொன்னால் ‘நோ’தான். அது ஒரு சொல் அல்ல, ஒரு வரி. அதற்கு மேற்கொண்டு விளக்கம் சொல்ல முடியாது. தோழி, காதலி, பாலியல் தொழிலாளி, மனைவி என யாராக இருந்தாலும் ‘நோ’ என்று சொன்னால் நோதான்’ என்று பெண்களின் பார்வையிலிருந்து ஓர் ஆண் பேசுவது முக்கியமான தருணம்.

ஆணுக்கு விடுக்கும் அழைப்பா?

வேலைக்குச் சென்று இரவு 11 மணிக்குத் திரும்பும் பெண்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் சாலையில் செல்வோரும் எப்படிப் பார்க்கிறார்கள்? இரவு 11 மணிக்குச் சாலையில் ஒரு பெண்ணைப் பார்த்தால், வேகமாகச் செல்லும் வாகனம் ஏன் மெதுவாகிறது? ஏன் கார் கண்ணாடி கீழே இறங்குகிறது? பகலில் இது நடப்பதில்லையே என்று இந்தப் படத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சமூகத்திடம் நிச்சயம் பதில் இருக்காது. ஆடைக் கட்டுப்பாடு பற்றிப் பெண்களுக்கு இன்று அதிகமாகவே கற்பிக்கப்படுகிறது. ஆண்கள் சலனப்படும் வகையில் உடை உடுத்தக் கூடாது என்று பெண்களுக்கே இன்னும் எத்தனை காலத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம் என்ற சரியான கேள்வியையும் எழுப்புகிறது இப்படம்..

ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நிலைதான் தற்போது உள்ளது என்று ஒரு ஆண் மூலமே ஆண்களுக்கு அறிவுறுத்து்கிறது படம். நவீன ஆடைகளை அணிபவளின் நடத்தை சரியாக இருக்காது, தாமதமாக வீட்டுக்கு வருபவள் நல்லவள் அல்ல, சிரித்துப் பேசினால் எதற்கும் சம்மதிப்பாள், இரவில் தனியாக ஒரு ஆணை நம்பி வந்தாலோ அவனுடன் மது அருந்தினாலோ அவள் தவறானவள், அதற்கும் மேலே இவையெல்லாம் பாலியல்ரீதியாக அணுக ஓர் ஆணுக்குப் பெண்கள் தரும் சமிக்ஞை என்று நினைக்கும் ஆண்களின் பொதுப்புத்தி தோலுரித்துக் காட்டப்பட்டுள்ள விதம் சிறப்பாக உள்ளது.

யாரையும் சாராமல் தற்சார்புடன் வாழும் பெண்களைப் பார்க்கும்போது அவர்களை முன்முடிவுகளோடு அணுகும் சமூகத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ சொல்லும் பதில் இதுதான்:
உங்களை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.

கட்டுரையாளர்,
தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in


சுதந்திரம்பார்வைநேர்கொண்ட பார்வைபெண்ணின் விருப்பம்ஆண்நிர்பயாபெண்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author