Published : 10 Aug 2019 12:27 PM
Last Updated : 10 Aug 2019 12:27 PM

சென்னை ரியல் எஸ்டேட்: மலிவு விலை வீடுகளின் மையம் எது?

அனில்

சென்னை ரியல் எஸ்டேட், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பெரும் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. அதற்கு முன்பு கோடம்பாக்கம் போன்ற மையப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை ரூ.10 லட்சம் என்ற அளவில் இருந்தது. ஆனால், ரியல் எஸ்டேட் துறையில் நடந்த அதிரடி மாற்றங்கள் வீட்டின், நிலத்தின் மதிப்பைப் பல மடங்கு அதிகமாக்கின. இதனால் நடுத்தர மக்கள் நகரின் மையப் பகுதியில் வீடு வாங்குவது என்பது கைகூடாக் கனவானது. சென்னையில் புதியதாக உருவான பெரும் தொழில்கள் இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

இந்தப் பின்னணியில் புதிய தொழில்களின் மையங்களான புறநகர்ப் பகுதிகளில் பல வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானது மென்பொருள் துறையின் மையமான பழைய மகாபாலிபுரம் சாலை. இன்றும் தென் சென்னையின் ரியல் எஸ்டேட் என்பது இந்தச் சாலையை மையப்படுத்தியதே. பல ஆண்டுகளாக தென் சென்னையே ரியல் எஸ்டேட்டின் முகமாக இருந்தது. அதன் பிறகு ரியல் எஸ்டேட் துறையில் நடந்த வீழ்ச்சி இந்த எல்லையை விரிவுபடுத்தியது. மேற்குச் சென்னையில் ரியல் எஸ்டேட் வளர்ந்தது.

தென் சென்னையைப் பொறுத்தவரை அதன் எல்லை விரிவடைந்தது. பல்லாவரம் ரேடியல் சாலைப் பகுதிகளிலும் புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் சமீப காலத்தில் அதிகமாக உருவாக்கப்பட்டுவருகின்றன. ஜி.எஸ்.டி. சாலைப் பகுதியில் கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள ஆதனூர், மாடம்பாக்கம் பகுதிகளிலும் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

இந்தப் பகுதியில் பழைய மகாபலிபுரம் சாலையுடன் ஒப்பிடும்போது இங்கு வீட்டு விலை குறைந்த அளவில் இருக்கிறது. கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியான பிறகு இங்கு வீடு வாங்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். புறநகர் ரயில் போக்குவரத்து இருப்பதால் இந்தப் பகுதியிலிருது நகரின் மையப் பகுதியை அணுகுவதும் எளிது. கூடுவாஞ்சேரியை தாண்டி பொத்தேரியில் பல அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தென் சென்னையின் மையமாக எப்படி மென்பொருள் துறை இருக்கிறதோ, அதுபோல் இங்கு இயந்திரவியல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. கார் தயாரிப்பு ஆலைகள், உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலைகள், செல்போன் தயாரிப்பு ஆலைகள், கண்ணாடித் தயாரிப்பு ஆலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. இதைச் சார்ந்து வாழும் மக்களுக்கான வீடுகளை உருவாக்கும்பொருட்டு இங்கு ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி பெற்றுவருகிறது. மேற்குச் சென்னையின் ஒரகடம், பெரும்புதூர், ஆவடி, திருவேற்காடு போன்ற பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி இப்போது துரிதமடைந்துவருகிறது. ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனைக்கு உள்ளன.

பொதுவாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய மகாபலிபுரம் சாலையில்தான் பெரிய வில்லா, டவுன்ஷிப் போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது மேற்குச் சென்னைப் பகுதியிலும் இதுபோன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. ஒரகடம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர், திருவேற்காடு, ஆவடி ஆகிய பகுதிகளில் வில்லா கட்டுமானங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் புதிதாகத் தொடங்கப்பட இருக்கின்றன.
இம்மாதிரியான புறநகர்ப் பகுதிகளின் ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் மலிவு விலையில் வீடு வாங்க ஏதுவாக ஆகிறது. மட்டுமல்லாமல் நகர நெருக்கடியிலிருந்து ஒரு ஆசுவாசமான வாழ்க்கைக்கும் இந்தப் புறநகர்ப் பகுதிகள் வழிவகுக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x