Published : 10 Aug 2019 12:17 PM
Last Updated : 10 Aug 2019 12:17 PM

முதியோருக்கான வீட்டு அடமானக் கடன் திட்டம்

முகேஷ்

ஒரு புதிய வீட்டைக் கட்ட வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் வழங்குகின்றன. அளிக்கும் கடனுக்கு மாதா மாதம் வட்டியும் அசலுமாகத் திருப்பிச் செலுத்தும் விதமாகத் தவணைத் தொகையை வங்கிகள் வீட்டுக் கடன் வாங்கியவரிடம் வசூலிக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. இதுபோல் ஒரு வீட்டை வங்கியிடம் அளித்துவிட்டு, மாதா மாதம் வங்கி ஒரு தொகை தருமா என நமக்கு வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அப்படி ஒரு அருமையான திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பொதுத்துறை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.

‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ என்றழைக்கப்படும் இந்தக் கடன் திட்டம், 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கானது. ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டம் மூலம், தன் பெயரில் வீடு இருக்கும் எந்த மூத்த குடிமக்களும் கடைசிக் காலத்தில் யார் தயவையும் எதிர்பார்க்கத் தேவையில்லை. தன் வீட்டை அடமானம் வைத்து மாதந்தோறும் பணத்தை வங்கியிடம் இருந்து பெற்றுச் செலவு செய்யலாம்.

அது எந்தச் செலவாக இருந்தாலும் பிரச்சினையில்லை. மூத்த குடிமக்களுக்குப் பயன் அளிக்கும் இந்தக் கடன் திட்டத்துக்கு வருமான வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 60 வயதைக் கடந்த இந்திய மூத்த குடிமக்களாக இருக்க வேண்டும். வயதான மூத்த தம்பதியினர் இணைந்தும் கடன் பெறலாம். ஆனால், தம்பதியில் ஒருவர் 60 வயதைக் கடந்திருக்க வேண்டும். நிச்சயம் சொந்த வீடு அல்லது ஃபிளாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீட்டில் எந்த வில்லங்கப் பிரச்சினையும் இருக்கக் கூடாது. வீட்டின் ஆயுள் காலம் குறைந்த பட்சம் 20 ஆண்டுகளாக இருக்க வேண்டும். கடன் வாங்கும் முதியவர்களின் வீடு, நிரந்தரச் சொந்த வீடாக இருக்க வேண்டும்.

வீடு அமைந்துள்ள இடத்தின் சந்தை மதிப்பு, கடன் பெறுபவரின் வயது, வட்டி விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் தொகை முடிவு செய்யப்படும். சொத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்குக் குறைவாக இருக்கக் கூடாது. 60-70 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கு அதிகபட்சமாக 60 சதவீதம் கடன் தொகை கிடைக்கும். 70-80 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கு 70 சதவீதத் தொகை கிடைக்கும். 80 வயதுக்கு மேல் 75 சதவீத தொகை பெறலாம். தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்ள வசதி உண்டு.

அல்லது காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்ற வகையிலும் தொகையைப் பெறலாம். இது கடன் பெறுபவரின் விருப்பத்தைப் பொறுத்தது. கணவனுக்குப் பிறகு மனைவிக்கும் கடன் தொகை வழங்க இந்தத் திட்டத்தில் இடமுண்டு. அவர்கள் காலத்துக்குப் பிறகு, வீட்டை ஏலம் விட்டு அதுவரை வழங்கிய கடனை வங்கி எடுத்துக்கொள்ளும். பணம் மீதியிருக்கும்பட்சத்தில் வாரிசுகளுக்குக் கொடுத்துவிடும். ஒருவேளை வாரிசுகள் வீட்டை மீட்க நினைத்தால், அதற்கும் இந்தக் கடன் திட்டத்தில் வசதிகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x