Published : 19 Jul 2015 12:56 PM
Last Updated : 19 Jul 2015 12:56 PM

விவாதக் களம்: இருவருக்கும் பொதுவில் வைப்போம்

‘உறவு சார்ந்த பிரச்சினைகளில் எப்போதும் ‘பெண்ணையே குறிவைத்துத் தாக்குவது ஏன்?’ என்று ஜூலை 12-ம் தேதியிட்ட ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். பெண்ணை அடக்கியாள நினைக்கும் மனோபாவத்தின் வெளிப்பாடு இது என்று பலரும், பெண்ணுக்கும் குற்றத்தில் பங்கிருக்கும்போது அவளைக் கேள்வி கேட்பதில் தவறில்லை என்று சிலரும் எழுதியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு.

பாசம், இரக்கக் குணம், பொறுமை போன்றவற்றைப் பெண்ணுக்கான குணங்களாக வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவளையே காரணம் காட்டுகிறார்கள். பெண்ணை வளர விடாமல் அடக்க நினைக்கிறவர்கள், அவளது நடத்தையைப் பற்றிப் பேசி அவளை முடக்கிவிடுகின்றனர். ஆனால் பெண்கள் இந்தத் தடைகள் அனைத்தையும் தாண்டி வர வேண்டும்.

- எஸ். கிருஷ்ணவேணி பால்ராஜ், சேலம்.

பாரதத்தின் பெருமை, குடும்ப அமைப்பிலும் அதைக் கட்டிக்காக்கிற பெண்களின் கையிலும்தான் அடங்கியிருக்கிறது. அப்படியிருக்கும்போது பெண்கள் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்தால் அது தவறில்லையா? ஆணாதிக்கத்தால் இது நேர்வதில்லை. பெண்களின் தாழ்நிலைக்கு அவர்களே காரணம். இதற்குப் பொறுப்பேற்பதும் விடியல் காண்பதும் பெண்களின் பொறுப்பு.

- சின்னை வெங்கட்ராமன், சேலம்.

முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் என்று சொல்லப்படும் போதனைகள் சொல்லப்பட்டுப் பலவீனப்படுத்தப்படுகிறாள் பெண். எதிலும் ஆண்கள் தப்பித்துக்கொள்ள இந்தச் சமூக அமைப்பும் சதி செய்கிறது. பெண் உரிமைக்குரல் எழுப்பிவிட்டால் அவளைக் கொத்திக் குதறுவது இங்கே வாடிக்கை. அதற்கெல்லாம் பெண்கள் சோர்ந்து போகாமல் சம்பந்தப்பட்ட ஆணையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர், சென்னை.

தாயான பிறகும் தடம் மாறும் பெண்ணை இந்தச் சமூகம் என்றும் ஏற்காது. விரும்பாப் பெண்ணிடம் வம்பு செய்தால் விளையும் விளைவை உலகம் நன்கறியும். நெறி தவறும் சமூக அவலம் விரும்பத் தகாதது, வேதனைக்குரியது.

- மு. குழந்தைவேலு, கோபாலசமுத்திரம்.

பெண்கள் பலவீனமானவர்கள் என்ற நினைப்பிலேயே பலரும் அவளை வசைபாடுகின்றனர். வீட்டிலும் வெளியிலும் பெண் எப்போதும் கண்காணிக்கப்படுகிறாள். தன்னிடம் வல்லுறவு கொண்டவனையே தேடிப்பிடித்து மணந்துகொள்ளும் மனநிலைக்குப் பெண்ணைத் தள்ளுவதும் இந்தச் சமூகம்தான். இந்த அறியாமையிலிருந்து பெண்கள் வெளிவர வேண்டும்.

- லட்சுமி சீனிவாசன், சென்னை.

ஒரு ஆண் தவறிழைத்தால் அது சம்பவம், அதையே பெண் செய்தால் அது சரித்திரம். மதுவாலோ, கூடா நட்பினாலோ ஒருவன் சீரழிந்தால் அவனை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் பெண்ணுக்கு இருப்பதாகச் சொல்கிறது இந்தச் சமூகம். ஆனால் ஒரு பெண் பாதை மாறினால் அவளைத் தூற்றுவதுடன் அதில் தொடர்புடைய ஆணைப் புறக்கணித்துவிடும்.

- வே. த. யோகநாதன்.

இந்தியப் பெண்கள் மீது குடும்பமும் சமுதாயமும் கொண்டுள்ள அதீத அக்கறையும் அதிகார ஆளுமையுமே ஆண்கள் தப்பிக்கவும் பெண்கள் தலைகுனியவும் காரணம். இந்த மனோபாவம் பிற்போக்குத்தனமானது. பெண்களைப் பற்றி ஆரோக்கியமான பார்வை, சிந்தனை, அணுகுமுறை இல்லாதவரை இந்தக் கேவலங்கள் தொடரத்தான் செய்யும்.

- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.

ஏற்கெனவே பெண்களைக் காட்சிப் பொருளாக்கிவிட்ட நிலையில் பொதுமக்களிடையே செய்திகளைச் சுவாரசியப்படுத்தும் நோக்கில் ஊடகங்கள் கையாளும் உத்தி இது. இவர்களின் வியாபாரத் தந்திரத்தால் பெண்களே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். நீதி காப்பதுதான் தங்கள் பணி, அநீதி இழைப்பது அல்ல என்பதைத் தவறான செய்திகளைப் பரப்புகிறவர்கள் உணரவேண்டும்.

- தேனி பிரபுமதி.

ஆண் குற்றம் செய்யும்போதும் பெண் குறிவைக்கப்படுகிறாள். பெண்ணின் உண்மை நிலை எப்போது மக்கள் மன்றத்தில் அழுத்தமாகப் பதியவைக்கப்படுகிறதே அப்போதுதான் பெண்கள் மீதான குற்றப்பார்வை அகலும்.

- சுபிசுதா, காவேரிப்பாக்கம்.

பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தவறு, தவறுதான். பிரச்சினைகளை எதிர்க்கத் திராணியற்று ஓடி ஒளியும் பெண்களால் சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் ஏற்படுகின்றன.

- எஸ். கே. வாலி, திருச்சி.

பிரச்சினையின் மூலகாரணத்தை ஆராயாமல் பெண் மீது மட்டும் பாய்வது நியாயமா? அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, இனிக் குற்றங்கள் நிகழாமல் தடுக்க வேண்டாமா? சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்பத் தவறான கோணத்தில் செய்தி பரப்புவது கண்டிக்கத்தக்கது.

- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

அடக்குமுறையின், ஒடுக்குமுறையின் வெளிப்பாடு இது. பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சமூகத்தில் பெண்ணை அடக்கியாண்டே பழகிவிட்டது ஆணினம். அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவளை நடத்தை என்னும் கூர் ஆயுதத்தால் குத்திக் கிழிக்கிறது. பெண்ணுக்குப் பெண்ணே எதிர்வினையாற்றும் அவலமும் நடக்கிறது.

- மலர்மகள், மதுரை.

புகழ்பெற்ற இயக்குநர் மிருணாள் சென் இயக்கிய ஒரு குறும்படம். ஒரு பெண் காலையில் குளித்துவிட்டு வேலைக்குச் செல்வாள். அன்று இரவு அவள் வீடுதிரும்பமாட்டாள். தாய் அழுவாள். அப்பாவும் அண்ணனும் அவள் நடத்தையைச் சந்தேகப்பட்டுத் திட்டித் தீர்ப்பார்கள். மறுநாள் காலை வீடு திரும்பும் அந்தப் பெண், வழக்கம்போல குளித்துவிட்டு வேலைக்குச் செல்வதுடன் கதை முடியும். பல விருதுகளைக் குவித்த அந்தப் படத்தின் வெற்றிவிழா மேடையில் மிருணாள் சென்னிடம், ‘அந்தப் பெண் இரவு எங்கே சென்றிருந்தாள்?’ என்று ஓர் இளைஞன் கேட்கிறான். அதற்கு அவர், ‘அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அவளைப் படைத்த எனக்கே உரிமையில்லை’ என்றார். பலத்த கைதட்டல் விண்ணைப் பிளந்தது. பெண்ணின் அந்தரங்கத்தை விமர்சிக்க இங்கே யாருக்கும் உரிமையில்லை. ஒவ்வொரு தாயும் பெண்ணை மதிக்கத் தன் மகனுக்குக் கற்றுத்தர வேண்டும்.

- ஸ்ரீரஞ்சினி ஜீவண்ணா, திருச்சி.

ஆண் - பெண் உறவு சார்ந்த அனைத்திலும் எப்போதுமே தராசு முள் பெண் பக்கமே கீழிறங்குகிறது. தராசுக் கோல் ஆண்களின் கையில்தானே இருக்கிறது! அறிவு சார்ந்து அவள் தன் பணியில் எவ்வளவுதான் முன்னேறினாலும், சந்தேகக் கண்ணோட்டத்திலேயே இந்தச் சமூகம் அவளை அணுகுகிறது. பெண் மட்டுமே கலாச்சாரச் சீர்கேட்டுக்குக் காரணம் என்று சித்தரிக்கப்படுகிறது. குடும்பம், குழந்தைகளைக் கவனிப்பது அவளுடைய கடமை மட்டுமே என வலியுறுத்தப்படுகிறது. ஆண்கள் தங்கள் மனதை விசாலமாக்கத் தேவையில்லை. மனது என்று ஒன்று தங்களுக்கு இருக்கிறது என்று உணர்ந்தாலே போதும்.

- கல்பனா ரத்தன்.

பெண்களை மட்டம்தட்டி வைப்பதில் ஆண் சமூகத்துக்கு ஒரு அல்பச் சந்தோஷம். பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக இருக்கும்போது ஆண்களைக் குறைசொல்வானேன்? அப்படியே ஆண்களைக் குறைசொன்னாலும், அந்த ஆணின் மனைவி என் கணவன் உத்தமன் என்று போராடுவாள். ஒரு சில பெண்கள் செய்யும் தவறால் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தையும் இழிவுபடுத்துவது நியாயமல்ல. ஆண்களிடம் மாற்றங்களை எதிர்பார்ப்பதைவிட பெண்கள் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.

- உஷாமுத்துராமன், திருநகர்.

பெண்கள் மென்மையானவர்கள், எதிர்த்துப் பேசத் தயங்குபவர்கள், வன்மத்தில் ஈடுபடாதவர்கள் என்று ஒரு மாயவலையை உருவாக்கி வைத்துள்ளது இந்தச் சமூகம். ஆண் வர்க்கம் தங்கள் மேலுள்ள தவறை ஏற்றுக்கொண்டால், அவர்களது சமூக அந்தஸ்து என்னாவது? அதை எளிதாகப் பெண்கள் மேல் சுமத்திவிடுகின்றனர்.

- எம். விக்னேஷ், மதுரை.

ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி மற்றும் அடிப்படை உரிமைகள்தான் மூலக் காரணம். சிறு வயது முதல் போர் குணமின்றி மென்மையானவர்களாகப் பெண்கள் சித்தரிக்கப்படுவது இன்னொரு காரணம். ஆணுக்குப் பெண் சமம் என்கின்ற ஒப்பிடுதல் பார்வை நீங்கி, மனிதர்கள் அனைவரும் சமம் என்கிற நோக்கில் சிந்திக்க வேண்டும்.

- சு.தட்சிணாமூர்த்தி, பீளமேடு, கோவை.

ஆண் செய்யும் தவறு அவனை மட்டுமே பாதிக்கும். பெண் செய்யும் தவறு தலைமுறையையே பாதிக்கும் என்ற கருத்து காலக் காலமாய் வலுவாகச் சொல்லப்பட்டதன் விளைவே இது. பெண் தவறு செய்து விடுவாளோ என்ற சந்தேகமே அவளை எப்போதும் கண்காணிக்கச் சொல்கிறது. விளைவு? அவளின் ஒவ்வொரு செயலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

என்னதான் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேறினாலும் அனைத்து இடத்திலும் ஆண்களின் சதவீதம் அதிகம். அப்படி இருக்கும்போது தங்கள் இனத்தை எப்படி விட்டுக் கொடுப்பார்கள் ? இதுவே தவறு செய்பவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது. தங்கள் தவறுகளை மறைத்து, பெண்கள் மீது பழி போடுகிறார்கள். இதுவே பெண்கள் பெரும்பான்மையினராக இருந்தால், ஆண்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது. பெண்களும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்லலாம்.

- என்.உஷாதேவி, மதுரை.

பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பொருள் என்ற எண்ணம் ஆணின் மனதில் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. அதனை அவ்வளவு சுலபத்தில் அகற்றிவிட முடியாது. ஆணை வளர்க்கும் பொறுப்புடைய பெண்ணும், ஆரம்பத்திலிருந்தே ஆணைச் சர்வ சுதந்திரத்துடனும், பெண்ணைப் பொத்திப் பொத்தியும் வளர்க்கிறாள். ஆண்கள் மட்டுமே இதற்குக் காரணமல்ல. பெண்களுக்கும் இதில் பங்குண்டு. ஒரு கை ஓசை தராது. பெண்களின் உறவு மேம்பட ஆண், பெண் இருவரும் பங்களிக்க வேண்டும்.

- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.

ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு அநீதி என்றிருக்கும் நம் சமூகத்தில் பெண்ணை மட்டும் நடுவீதிக்கு இழுத்து வந்து கொடும்பாவி எரிப்பது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிற பெண்களின் மானசீக ஆதரவு வலுவாகப் பெருகிக்கொண்டே போகும். காலம் உணர்த்தும் நீதிக்குச் சமுதாயம் தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.

- ஜே லூர்து, மதுரை.

தாய்வழிச் சமூகமாக இருந்த மனித இனம், ஆணாதிக்கத்தில் விழுந்தது சொத்துடைமைச் சமூகமாக மாறியபிறகு சொத்துகளைச் சேர்க்கத் துவங்கிய மனிதன், தனது சொத்து தனது வாரிசுக்கு என்ற மனப்பான்மைக்கு ஆட்பட்டான். வாரிசுகளை உருவாக்கும் பெண்களைக் கற்பு எனும் கோட்டைக்குள் உள்வைத்து அடைத்தான். அந்தக் கற்புக்கோட்டையை அவள் தாண்டாதவாறு பல்வேறு சமூகக் கட்டுப்பாடுகளைச் சமைத்தான். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் பெண்ணை நோக்கி அவதூறு என்னும் வாளைச் சுழற்றிக்கொண்டே இருக்கிறான்.

- சுதாகர் ஜெயராமன், திண்டுக்கல்.

கேள்வியே ‘பெண்ணுக்கு மட்டும் சிறப்பு விலக்கு ஏன்?’ என்று இருந்திருக்க வேண்டும். பரஸ்பர விருப்பத்தின் பேரில் நடக்கும் பாலியல் தொடர்புகளைத் தீர்மானிப்பதில் பெண்ணே பெரும்பங்கு வகிக்கிறாள். தவறு செய்கிற பெண் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் சட்டம் அதைச் செய்யவில்லை. நியாயம் இருக்கிறது என்பதற்காகத் திருட்டை நியாயப்படுத்த முடியுமா? தங்கள் விருப்பப்படி நடக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுத்துத் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்க அல்ல. அப்படிச் செய்பவர்களுக்கு எதிராகச் சமூகத்தின் மனநிலையைக் கொண்டுவருவதே ஊடகங்களின் பணியாக இருக்கவேண்டும்.

- அர்ஜுன் சேத், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x