Published : 08 Aug 2019 07:58 AM
Last Updated : 08 Aug 2019 07:58 AM

தெய்வத்தின் குரல்: கலியின் அடையாளம் அதர்மம் மட்டும்தானா

கலியின் கொடுமையைப் புராணம் முதலானவற்றில் ஜாஸ்திப்படுத்தித்தான் சொல்லியிருக்கிறது. எல்லாம் போயே போய் விட்ட மாதிரிதான் வர்ணித்திருக்கும். நம் ஆசார்யாள் அவதாரத்திற்கு முந்திக்கூட வேத தர்மம் அடியோடு போய்விட்டது என்றே தேவர்கள் கைலாசத்துக்குப் போய் பரமேச்வரனிடம் முறையிட்டுக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் அப்புறம் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக உயர்ந்த குடும்பத்தில் ஆசார்யாள் அவதாரம் பண்ணினார்.

யதோக்தமாக எல்லா வைதிக வித்யைகளையும் குருகுலத்தில் அப்பியாசம் செய்தார் என்றெல்லாம் தெரிந்துகொள்கிறோம். நல்ல வைதிகானுஷ்டானங்களால் சம்ஸ்காரம் பெற்றவர்கள்- பத்மபாதர் போன்றவர்கள்- அவரிடம் சிஷ்யர்களாக வந்து சேர்ந்ததாகப் பார்க்கிறோம். ஆனபடியால் வேத தர்மம்-‘வேத’ தர்மம் என்று சொல்வானேன்? நம்மைப் பொறுத்தமட்டில் தர்மம் என்றால் வேத தர்மம்தான். அப்படிப்பட்ட தர்மம்- எப்போதுமே முற்றிலும் அழிந்துபோய் விடவில்லை என்று தெரிகிறது.

குழம்ப வேண்டாம்

இந்த யுகத்தின் ஆரம்பத்தில் தர்ம சாஸ்திரங்களை வகுத்துக் கொடுக்கும்போதே ஒரு கேள்வி வந்தது. அக்னி ஹோத்ரம் என்பது கர்ம காண்டத்தில், ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் வருவது. சந்நியாசம் என்பது ஞான காண்டத்தில் நிவிருத்தி மார்க்கமாக வருவது. எனவே, இந்த இரண்டும் போய்விட்டால் ஜனங்கள் உருப்பட வழியேயில்லை. அல்ப சக்தர்களான கலிகால மனுஷ்யர்களுக்கு இந்த அதோகதிதானா என்று கேள்வி வந்தது.

அதற்கு தர்ம சாஸ்திரக்காரர்கள் என்ன பதில் சொன்னார்கள். அதாவது, தீர்ப்புக் கொடுத்தார்கள்?
“கலியுகம், க்ருதயுகம் என்று போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். எதுவரை வர்ண விபாகம் கொஞ்சமாவது இருக்கிறதோ, எதுவரை வேத அத்யயனம் கொஞ்சமாவது இருக்கிறதோ, அதுவரை அக்னிஹோத்ரமும் சந்நியாசமும் இருக்கலாம்” என்று தீர்ப்புக் கொடுத்தார்கள்.

அதனால் கலியிலும் இவையெல்லாம் மங்கிப் போனாலும் முழுக்க அணைந்து விடாமல் முணுக்கு முணுக்கு என்று எரிந்து கொண்டுதானிருக்கும் என்று தெரிகிறதல்லவா? அணைந்துபோகிற நிலைக்கு வரும்போது ஒரு மகா புருஷர் வந்து எண்ணெய்போட்டு, திரியைத் தூண்டிவிட்டு நன்றாகவே ஜ்வலிக்கச் செய்வார். க்ருதயுகமே வந்துவிட்டதோ என்று நினைக்கிற மாதிரிகூடக் கொஞ்சகாலம் ரொம்ப நன்றாகப் போகும். அப்புறம் மறுபடி மங்கல், மறுபடித் தூண்டிவிடுவது என்று போய்க்கொண்டிருக்கும்.

ஆசார்யாளின் அவதார காலம் உள்பட எப்போதும், இந்தக் கலியிலுங்கூட, நல்ல கர்மானுஷ்டாதாக்கள், நல்ல பக்தியுள்ளவர்கள், ஞானம் நிரம்பிய ஞானிகள் எல்லோரும் கொஞ்சமாவது இருந்து வந்திருக்கிறார்கள்; இனிமேலும் இருப்பார்கள். குருபரம்பரை என்று ஒன்று எல்லா மார்க்கத்திலும் முறிவுபடாமல் இருந்தே வந்திருக்கிறது. குரு இல்லாமல் அத்யயனமுமில்லை, சந்நியாச தீட்சையுமில்லையாதலால், இவை எப்போதும் இருந்திருக்கின்றன வென்றால் பரம்பரா கிரமத்தில் இவற்றை உபதேசித்து வந்த குருக்களும் தொடர்ந்து இருந்திருப்பதாகவே ஆகிறது.

புராணங்களின் அச்சுறுத்தல்

“போச்சு போச்சு! கலியில் எல்லாம் போச்சு! ஏதாவது கொஞ்சம் மிச்சமிருந்தாலும் அதுவும் கால கிரமத்தில் போயே போயிடும். எல்லாம் மிருகப் பிராயமாயிடும்” என்று புராணங்கள் பயமுறுத்துகின்றனவென்றால், நாம் ஆலஸ்யமாக (மெத்தனமாக) இருந்துவிடக் கூடாது என்று எச்சரித்து உசுப்பிவிட்டு உஷார்படுத்துவதற்குத்தான். ரொம்பவும் ஆபத்தாக வர்ணித்தால்தான் நாம் அசைந்து கொடுப்போம் என்பதால்தான்.

“கலி அதர்ம ஆட்சியை ஆரம்பித்துவிட்டான்” என்று சாஸ்திரங்கள் தண்டோராப் போடு வதற்கும் தாத்பர்யம், கூடிய மட்டும் தர்மத்தை ஜாக்கிரதையாக ரட்சித்துக் கொள்வதற்குத்தானே ஒழிய, ‘ஒன்றும் பண்ணிக்கொள்வதற்கில்லை’ என்று, இருப்பதையும் விட்டுவிட்டு வீணாகப் போவதற்கல்ல.
இந்த யுகத்தில் வரும் அதர்ம பிரவாகத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால்தான் பெருமை அதிகம்.

மற்ற யுகங்களில் ரொம்பப் பேர் ஈச்வரனிடம் போய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். அவருக்கு சாவகாசமாக ஒவ்வொருவரையும் விசாரித்து அனுக்ரஹம் செய்ய முடியாமலிருக்கும். கலியில், ‘யார் வருவா? யார் வருவா?’ என்று பார்த்துக்கொண்டிருப்பார். அதனால் நாம் கொஞ்சம் யத்தனம் பண்ணினால்கூடக் கோடியாக நினைத்துக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு நன்றாக அனுக்ரஹம் பண்ணிவிடுவார்.

இந்த யுகத்துக்கே உள்ள சில பிரத்யேக அனுகூலங்களையும் சாஸ்திரங்களில் சொல்லித் தெம்பூட்டியிருக்கிறார்கள். கிருத யுகத்தில் மனோ நிக்ரஹம் என்ற சிரம சாத்தியமான காரியத்துடன் கூடியதான தியானம் செய்தும், திரேதா யுகத்தில் சரீரத்தைக் கஷ்டப்படுத்திக்கொண்டு யாகங்கள் செய்தும், த்வாபர யுகத்தில் விஸ்தாரமாக அர்ச்சனை, பூஜை என்று செய்துமே பெறக்கூடிய அனுகிரஹ பலனை இந்தக் கலியில்தான் சுலபமாகச் பகவந்நாமத்தைச் சொல்லியே பெற்றுவிடலாமென்றும் சொல்லியிருக்கிறார்கள்-பயமுறுத்திய அதே சாஸ்திரங்களிலேயே ரொம்பவும் ஆறுதலாகச் சொல்லியிருக்கிறார்கள். “கலியா அஸத்தான யுகம்? அதுதான் சத்தான யுகம். கலி: ஸாது:, கலி: ஸாது:” என்று வ்யாஸாசார்யாள் இரண்டு தரம் உறுதிப்படுத்திச் சொல்லியிருக்கிறார்!

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x