Published : 07 Aug 2019 11:51 AM
Last Updated : 07 Aug 2019 11:51 AM

கதை: குதிரை எப்படி இருக்கும்?

கன்னிக்கோவில் ராஜா

அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு பக்கம் மாட்டுக் கொட்டகையும் இன்னொரு பக்கம் குதிரைக் கொட்டகையும் இருந்தன.
மாட்டுக் கொட்டகையில் ஒரு பசுவுக்குக் குட்டிப் பிறந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. மிகவும் துடுக்காகவும் புத்திசாலியாகவும் இருந்தது அந்தக் கன்றுக்குட்டி. அதைப் பொறுத்தவரை அந்தக் கொட்டகைதான் உலகம் என்று நம்பியிருந்தது.
கொட்டகையில் இருக்கும் மாடுகளைத் தவிர, உணவு தரும் சுப்பையா என்ற மனிதரை மட்டுமே அது அறிந்திருந்தது.
ஒருநாள் காலை அம்மாவிடம் பால் குடித்துவிட்டு, கொட்டகையைச் சுற்றிச் சுற்றி வந்தது. சின்னக் கன்றுக்குட்டி என்பதால் அதைக் கட்டிப் போடாமல் வைத்திருந்தார்கள்.

அப்போது ’ஹி...ஹி..ஹி’ என்று ஒரு கணைப்புச் சத்தம் கேட்டது.
இது என்ன புது சத்தமாகக் கேட்கிறதே! யாருக்காவது உடம்பு சரியில்லையோ என்று நினைத்தது. அருகில் இருந்த கருப்பனிடம் சென்று, “உங்களுக்கு உடம்பு சரியில்லையா? ஏன் தொண்டைக் கட்டிக் கொண்டதுபோல் கத்துறீங்க?” என்று கேட்டது.

“எனக்கு உடம்பு நல்லாதான் இருக்கு. நான் கத்தலை” என்றது அந்தக் கருப்பன் மாடு.
அடுத்து கொஞ்சம் தள்ளி இருந்த வெள்ளையனிடம் போய் அதே கேள்வியைக் கேட்டது கன்றுக்குட்டி. அதுவும் “நான் கத்தலையே” என்றது.
’என்ன இது! எனக்குச் சத்தம் கேட்டதே!’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கணைப்புச் சத்தம் தொடர்ந்து மூன்று நான்கு முறை கேட்டது.
“ஆஹா! இப்போது தெளிவாகக் கேட்கிறது” என்று உறுதி செய்துகொண்ட கன்றுக்குட்டி, தன் தாயிடம் துள்ளிக் குதித்து ஓடியது.

“அம்மா, இப்போது ஒரு மாட்டின் சத்தம் கேட்டதே! அது யார் கத்தியது?”.
“மாடு எதுவும் கத்தலை, அது ஒரு குதிரையின் கணைப்பு” என்றது தாய் மாடு.
“குதிரையா? அது எப்படி இருக்கும்? நம்மைப் போல கொம்புகளுடன் இருக்குமா? வால் இருக்குமா? நான்கு கால் இருக்குமா?” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டது கன்றுக்குட்டி.
“குதிரை நம்மைப்போல் விலங்கு வகையைச் சேர்ந்தது. நம்மைப் போலவே குட்டிப் போட்டுப் பால் கொடுக்கும். ஆனால், அதுக்குக் கொம்புகள் கிடையாது. முகம் நீண்டு இருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும். விரைவாக ஓடும்“ என்று தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொன்னது தாய் மாடு.

“அம்மா, அந்தக் குதிரை எங்கே இருக்கிறது?”
“அருகில் உள்ள கொட்ட கையில்தான் இருக்கிறது. ஆனால், நீ அங்கே போகக் கூடாது. அந்த மனிதர் பார்த்துவிட்டால் உன்னைக் கட்டிப் போட்டுவிடுவார். அப்புறம் உன்னால் சுதந்திரமாக நடமாட முடியாது.”
“சரிம்மா” என்று சொன்னதே தவிர, அதன் மனம் குதிரைகளைப் பார்க்கவே விரும்பியது. மறுநாள் காலை அம்மாவிடம் பால் குடித்துவிட்டு மற்ற மாடுகளுடன் கொஞ்ச நேரம் விளையாடியது. அப்போது குதிரையின் கணைப்பைக் கேட்டதும், மீண்டும் குதிரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொண்டது. யாருக்கும் தெரியாமல் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தது.
மாடுகள் தங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, மெதுவாகக் கொட்டகையை விட்டு வெளியேறியது. இப்போது குதிரையின் சத்தம் வெகு அருகில் கேட்டது.
கொட்டகையின் ஜன்னல் வழியே பார்த்தது. பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தன. அதில் இரண்டு குதிரைக் குட்டிகளும் இருந்தன.

“ஆஹா! எவ்வளவு கம்பீரமான குதிரைகள்” என்று சத்தமாகச் சொன்னது கன்றுக்குட்டி.
“யாரது?” என்று கேட்டது ஒரு குதிரை.
அந்தக் குரலைக் கேட்டுப் பயந்த கன்றுக்குட்டி, “நா... நான்... கன்றுக்குட்டி” என்று நடுங்கியபடி சொன்னது.
“உள்ளே வா.”
பயந்தபடி மெதுவாக உள்ளே நுழைந்து, கண்களைச் சுழலவிட்டது. வரிசையாகக் குதிரைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கன்றுக்குட்டி உள்ளே நுழைந்ததும் இரண்டு குதிரைக் குட்டிகளும் ஓடிவந்து வரவேற்றன.
கன்றுக்குட்டிக்கு மகிழ்ச்சியாகி விட்டது. தன்னைப் பற்றியும் தன்னுடன் இருப்பவர்களைப் பற்றியும் சொன்னது.
“எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் வாயில் ஒரு பை தொங்குகிறது அதில் இருந்து உணவைச் சாப்பிடுகிறீர்கள். கீழேக் கொட்டிச் சாப்பிடக் கூடாதா?” என்று கேட்டது கன்றுக்குட்டி.
“நீங்கள் உணவைச் சாப்பிடும் முறை வேறு. நாங்கள் சாப்பிடும் முறை வேறு. நீங்கள் வேகமாகச் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு மெதுவாக அசைபோடுவீர்கள். அது உங்கள் இயல்பு.”
“ஆமாம், அப்படித்தானே சாப்பிடணும்?”
“அது உங்கள் இயல்பு. நாங்கள் அப்படியல்ல. எங்களால் வேகமாக ஓட முடியும். ஆனால், வேகமாகச் சாப்பிட மாட்டோம். நன்றாக மென்று தின்போம். அதுதான் எங்களின் வழக்கம்.“

“ஓ…”
“நீங்கள் அமர்ந்து சாப்பிடுவதில் வல்லவர்கள். நாங்கள் நின்று கொண்டே இருப்பவர்கள். அதனால் எங்கள் உணவைப் பைகளில் போட்டு மாட்டி விடுகிறார்கள். ஆனால், காட்டில் உள்ள குதிரைகளுக்கு இப்படிப்பட்ட சிக்கல் இல்லை” என்று சிரித்தது குதிரை.
“உங்கள் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” என்று கன்றுக்குட்டியும் சிரித்தது.
“சரி, நீ அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தானே வந்தாய்?” என்று கேட்டது குதிரைக்குட்டி.
“இல்லை. தெரியாமல்தான் வந்தேன்.”
“இனி அம்மாவிடம் சொல்லிவிட்டு வா. நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பரிமாறிக்கொள்வோம். எங்களால் இந்த எல்லையைத் தாண்ட முடியாது. உன்னைக் கட்டவில்லை. அதனால் நீதான் வரவேண்டும்“ என்றது குதிரைக்குட்டி.
“உங்கள் எல்லோரையும் பார்த்ததில் மகிழ்ச்சி. இந்தச் செய்தியை என் அம்மாவிடம் சொல்கிறேன். இனி அம்மாவிடம் சொல்லிவிட்டே வருகிறேன்” என்ற கன்றுக்குட்டி, துள்ளிக் குதித்து ஓடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x