Published : 07 Aug 2019 11:43 AM
Last Updated : 07 Aug 2019 11:43 AM

இந்த பாடம் இனிக்கும் 06: பாகிஸ்தானில் பேசப்படும் திராவிட மொழி

ஆதி

நமது தாய்மொழியான தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவையே முதன்மை திராவிட மொழிகள். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளின் மொத்த எண்ணிக்கை 28. திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் உலகில் 22 கோடிக்கும் மேல் இருக்கிறார்கள்.

திராவிடத் தொன்மை

திராவிட மொழிக் குடும்பம் தனித்தது, அதற்கும் ஆரிய மொழிக் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை முதலில் (1816) முன்வைத்தவர் ஆங்கிலேயே அரசு அதிகாரி பிரான்சிஸ் டபிள்யு. எல்லிஸ்.
‘திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்’ எனும் நூலை எழுதியதன் மூலம், தென்னிந்திய மொழிகளை ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் வழக்கத்தை மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தொடங்கி வைத்தார்.

தமிழ்

தமிழக மாவட்டங்களிலேயே தமிழ் மொழி குறைவாகப் பேசப்படும் மாவட்டம், நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் தொதவம், கோத்தம், இருளம், காட்டு நாயக்கர், பனியா, குறும்பா ஆகிய பழங்குடி மொழிகளும் கன்னடக் கிளை மொழியான படகமும் பேசப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகள் பேசப்படுவதன் காரணமாகவே தமிழ் பேசுபவர்கள் இந்த மாவட்டத்தில் குறைவாக உள்ளனர்.

தமிழ் பேசுபவர்கள் தமிழ்நாட்டைத் தவிர, இலங்கை, மியான்மர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். கயானா, ஃபிஜி, மொரிஷியஸ், ரியூனியன், மடகாஸ்கர், டிரினிடாட், மார்டினிக் ஆகிய நாடுகளில் குறைந்த அளவில் வாழ்கிறார்கள்.

நாடு முழுவதும்

திராவிட மொழி பேசும் பழங்குடிகள் தென்னிந்தியாவில் மட்டுமே வாழ்கிறார்கள் என்று நினைக்கிறோம். இது தவறு. வட இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் பழங்குடிகள் திராவிடப் பழங்குடிகளே. இந்தியாவில் 461 வகைப் பழங்குடிகள் வாழ்கிறார்கள். இவர்களில் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் பழங்குடி கோண்டு (58 லட்சம்), இரண்டாவது பழங்குடி பில்லர் (வில்லர்) – 52 லட்சம், நான்காவது பழங்குடி ஒராவன் – 17 லட்சம். இந்த மூன்று பழங்குடிகளும் திராவிடப் பழங்குடிகள்.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா பகுதிகளில் வாழும் கோண்டு பழங்குடிகள் பேசும் மொழி; அசாம், பிஹார், மத்தியபிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கத்தில் வாழும் ஒராவன் பழங்குடி பேசும் குடுஹ்; பிஹார்-மேற்கு வங்கப் பழங்குடிகள் பேசும் மால்தோ ஆகியவையும் திராவிடப் பழங்குடி மொழிகளே. இதிலிருந்து திராவிடர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள், பரவியிருக்கிறார்கள் என்ற கூற்று உண்மையாகிறது.

இந்தியாவுக்கு வெளியே

அதேபோல இந்திய நிலப்பகுதிக்கு வெளியில் மட்டும் பேசப்படும் ஒரு திராவிட மொழியும் இருக்கிறது. அதன் பெயர் பிராகூய். தெற்கு பாகிஸ்தானி்ல் உள்ள சிந்து, பலூசிஸ்தானம் பகுதியிலும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளிலும் இந்த மொழி பேசப்படுகிறது. 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பேசும் இந்த மொழி மட்டுமே தென்னிந்தியாவிலிருந்து அதிகம் விலகியிருக்கும் திராவிட மொழி பேசப்படும் பகுதி. சிந்து சமவெளி நாகரிகத்தில் பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்க வேண்டுமென மொழியியல் அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மொழி பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் தழைத்திருந்த இன்றைய பாகிஸ்தானில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

# தமிழகத்தில் வாழும் பழங்குடிகளான கோத்தர், தொதவர், இருளர், குறும்பர், பனியர் ஆகியோர் பேசும் பழங்குடி மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையே. இவர்கள் வாழும் பகுதியில் பழங்குடி மொழியில் இல்லாமல், தமிழில் பாடங்கள் கற்பிக்கப்படுவதால், பழங்குடி மொழிகள் அழிந்து வருகின்றன.
# கோண்டி, துளு, குடுஹ் ஆகிய திராவிட மொழிகளைப் பேசு பவர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
# படகம் (படுகர் பேசுவது), குடகு, துளு போன்ற கன்னடச் சாயல் கொண்ட திராவிட மொழிகளுக்குத் தனித்த இலக்கியங்கள் கிடையாது.
# இலங்கை, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.
# தமிழில் நான்கு முக்கிய வட்டார வழக்குகள் உள்ளன: மதுரை, நெல்லை, நாஞ்சில், ராமநாதபுரம். இவற்றைத் தவிர மேலும் பல வட்டார வழக்குகள் உண்டு.

இந்த வாரம்:

ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘மொழி’ என்ற இயலின்கீழ் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற உரைநடை உலகம் பகுதி.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x