Published : 06 Aug 2019 11:21 AM
Last Updated : 06 Aug 2019 11:21 AM

கடந்த வாரம் : சேதி தெரியுமா? 

தொகுப்பு: கனி 

ஐ.ஐ.டி.: 2,461 மாணவர்கள் இடைநிற்றல் 

ஜூலை 30: நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,461 மாணவர்கள் இடையில் நின்றிருப்பதாக மத்திய மனித வளத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. 23 ஐ.ஐ.டி.க்களில், அதிகபட்சமாக ஐ.ஐ.டி.-டெல்லியில் 782 பேரும், ஐ.ஐ.டி.-கரக்பூரில் 622 பேரும் இடையில் நின்றிருக்கின்றனர். குறைந்தபட்சமாக ஐ.ஐ.டி.-கான்பூரில் 190 பேரும், ஐ.ஐ.டி.-சென்னையில் 128 பேரும் இடையில் நின்றிருக்கின்றனர். இந்த ஒட்டுமொத்த இடைநிற்றலில், 1,171 மாணவர்கள்(47.5%) ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.  

நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு 

ஜூலை 31: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31 –லிருந்து 34-ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தலைமை நீதிபதியுடன் சேர்த்து அனுமதிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆக இருந்தது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை 

ஆகஸ்ட் 1: ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை’ திட்டம், குஜராத், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு  மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 2020, ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

தமிழ்நாடு: 48% பணியாளர் பற்றாக்குறை 

ஆகஸ்ட் 1: தமிழ்நாட்டில், அடுத்த ஆறு ஆண்டுகளில் உற்பத்தி, கட்டுமானம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் திறமையான பணியாளர்களுக்கான தேவையில் 48 சதவீதம் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழகம் (TNSDC) நடத்திய ஆய்வு  தெரிவிக்கிறது. தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 32 லட்சம் திறன்மிகுந்த பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.  

டெல்லி: மின்சார கார்கள் அறிமுகம் 

ஆகஸ்ட் 1: டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்காக இந்திய ராணுவம் மின்சார கார்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மத்திய ஆற்றல் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த முயற்சியை இந்திய ராணுவம் எடுத்துள்ளது. முதல்கட்டமாக இந்திய ராணுவம் பத்து மின்சார கார்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. டெல்லியின் காற்று மாசுப்பாட்டைக் குறைப்பதற்காக மின்சார கார்கள் பயன்பாட்டை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  

உள்நாட்டு உற்பத்தி: ஏழாம் இடத்தில் இந்தியா 

ஆகஸ்ட் 2: 2018-ம் ஆண்டின் உலகளாவிய உள்நாட்டு உற்பத்தித் தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டில், ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா தற்போது ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏழாம் இடத்தில் இருந்த பிரான்ஸ் ஆறாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியவை முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. 

ரவிஷ் குமாருக்கு ராமன் மகசேசே விருது 

ஆகஸ்ட் 2: இந்தியப் பத்திரிகையாளர் ரவிஷ் குமாருக்கு 2019-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்க ஊடகத்தைப் பயன்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படவிருக்கிறது. ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த விருது, மியான்மரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹு ஸே வென் (Ko Swe Win), தாய்லாந்ததைச் சேர்ந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் அங்கனா நீலபஜித் (Angkhana Neelapajit), பிலிப்பைன்ஸ் இசையமைப்பாளர் ரேமுன்டோ புயன்தே சியாப்யா (Raymundo Pujante Cayabyab), தென் கொரியாவின் இளைஞர் மனநலச் செயல்பாட்டாளர் கிம் ஜோங்-கி (Kim Jong-Ki) ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய நிதி: திருப்பி வழங்கிய தமிழக அரசு 

ஆகஸ்ட் 3: மத்திய அரசு 2017-18-ஆண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு நலத் திட்டங்களுக்காக வழங்கிய ரூ.5,920 கோடியில் ரூ.3,676 கோடியைப் பயன்படுத்தாமல் தமிழக அரசு திருப்பி வழங்கியதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, இந்த நிதியில் ஏழு திட்டங்களுக்காக ரூ. 2,243 கோடியை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x