Published : 06 Aug 2019 11:14 AM
Last Updated : 06 Aug 2019 11:14 AM

அந்த நாள் 44: காலங்களைத் தாண்டிய அரசியின் ஆட்சி 

ஆதி வள்ளியப்பன்  

“திருச்சியிலும் மதுரையிலும் பழைய ஆட்கள் யாரை நிறுத்திக் கேட்டாலும், ‘இந்தக் குளம் ராணி மங்கம்மாள் வெட்டியது’, ‘இந்தச் சத்திரம் ராணி மங்கம்மாள் கட்டியது’ன்னு 300 வருசத்துக்குப் பிறகும் அந்த ராணியோட பெருமையைச் சொல்லிக்கிட்டிருப்பாங்க, செழியன்” 

“நீ சொல்றது மாதிரியே திருச்சில ஒரு சிலர் சொல்றத நானும் கேள்விப் பட்டிருக்கேன், குழலி.” 

“ஒரு அரசனோ அரசியோ வாழும் காலத்துல புகழ்பெறுவது அபூர்வம்தான். அதிலயும் அவங்க காலம் முடிஞ்சு பல தலைமுறைக்குப் பின்னாடியும் அவங்களோட பெயரை உச்சரிக்கிறாங்கன்னா, அடக்குமுறைகளைத் தாண்டி ஏதோ சில நல்ல விஷயங்களை மக்களுக்கு அவங்க செஞ்சிருக் காங்கன்னு அர்த்தம்.”  

“சரி, சொக்கநாதருக்குப் பின்னாடி மங்கம்மாள் எப்போ ராணி ஆனாங்க?” 

“சொக்கநாதருக்குப் பின்னாடி அவரோட மகன் மூன்றாம் முத்துவீரப்பன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். ஏழு ஆண்டுகளே ஆட்சி நடத்தின அவர், அம்மை நோயால் இறந்துபோனார். அப்போ கருவுற்றிருந்த அவருடைய மனைவியும், குழந்தை விஜயரங்க சொக்கநாதன் பிறந்த பிறகு இறந்துட்டார். இதனால, பாட்டியான ராணி மங்கம்மாள் பேரனுக்குப் பொறுப்பாக மதுரை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பை 1689-ல ஏற்றார். நாயக்கர் வம்சத்துல ஆட்சி்ப் பொறுப்பை ஏற்ற முதலாவது, வெற்றிகரமான பெண் மங்கம்மாள்.”  

“சரி. திருச்சி மலைக்கோட்டை கிட்ட ராணி மங்கம்மாள் தர்பார் மண்டபம்னு ஒண்ணு  இருக்கு. மதுரை நாயக்கர்கள் திரும்பவும் எப்போ திருச்சிக்குப் போனாங்க?” 

“நாயக்கர்களால தொடக்கத்துல வர்த்தக நகராவும் பின்னாடி தலைநகராவும் திருச்சி மாற்றப்பட்டுச்சு. வடக்குலேர்ந்து வரும் ஆபத்தைச் சமாளிக்க சொக்கநாதர் காலத்திலேயே திருச்சிக்குத் தலைநகர் மாற்றப்பட்டிருந்திச்சு. அதுக்காகத்தானே திருமலை நாயக்கர் மகாலோட பெரும்பகுதி பெயர்த்து எடுக்கப்பட்டுச்சுனு ஏற்கெனவே பார்த்திருந்தோமே. திருச்சி அரண்மனையும் இந்தோ சாரசெனிக் கட்டிடக் கலை பாணில கட்டப்பட்டதுதான். திருமலை நாயக்கர் மகால் அளவுக்கு இது அழகானது இல்லேன்னாலும் தூண்களும், சுதை வேலைப்பாடுகளும், இயற்கைச் சாயங்களும் அது கட்டப்பட்ட காலத்துக்கே நம்மள கூட்டீட்டுப் போயிடும். 1666-ல கட்டப்பட்ட அரண்மனையோட ஒரு பகுதிலதான் இந்த தர்பார் மண்டபம் இருக்கு. இதுக்குக் கொலு மண்டபம்னு ஒரு பேரும் உண்டு. மங்கம்மாளும் திருச்சில இருந்து ஆட்சி நடத்தியிருக்கார்.”  

“ஆமா, இந்த மண்டபம் இருக்கும் பகுதில இப்போ வரைக்கும் அரசு அலுவலகங்கள் இயங்கி வர்றதுல இருந்தே, பாரம்பரியமாக இந்த இடம் பெற்றிருந்த முக்கியத்துவத்தைத் தெரிஞ்சுக்க முடியுது. தர்பார் மண்டபத்துலதான் திருச்சி மாவட்ட அருங்காட்சியகம் இயங்கி வருது. நானும் பாத்திருக்கேன்.” 

“இந்த அரண்மனைக்குப் பக்கத்துல இருந்த மங்கம்மாள் தோட்டம் அழிக்கப்பட்டிருச்சு. நாயக்கர் காலத்துல வெட்டப்பட்ட தெப்பக்குளம் மட்டும் இப்போ வரைக்கும் தப்பிச்சிருக்கு.” 

“ஆனா, மங்கம்மாள் திருச்சியிலேயே தொடர்ந்து ஆட்சி நடத்தினது போலத் தெரியலையே?” 

“ஆமா, மதுரை தமுக்கத்துல சொக்கநாதர் காலத்துலயே கட்டப்பட்ட அரண்மனைக்கு ‘ராணி மங்கம்மாள் அரண்மனை’ன்னு ஒரு பேரு உண்டு. தெலுங்குல தமுக்கம்னா கோடை காலத் தங்குமிடம்னு அர்த்தம். இந்த அரண்மனைக்குப் பக்கத்துல உள்ள தமுக்கம் திடல்ல அரசுப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், தற்காப்புக் கலை போன்றவையும் குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம் போன்றவையும் நடத்தப்பட்டிருக்கு. இந்த அரண்மனையிலதான் இப்போ ‘காந்தி நினைவு அருங்காட்சியகம்’ இருக்கு.”  

“அதேபோல மங்கம்மாள் சாலைன்னு ஒரு சாலையைச் சொல்றாங்களே, அது என்ன?” 

“மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் போடப்பட்டிருந்த நெடுஞ்சாலைக்குத்தான் அப்படிப் பேரு. மங்கம்மாள் போர்கள்ல வெற்றிகரமான அரசியா இருந்ததைவிட, மக்கள் நலன் காத்த அரசியாத்தான் புகழ்பெற்றிருந்தார். சாலைப் பணி, தண்ணீர் பந்தல், கால்வாய் வெட்டுதல், நீர்நிலை-குளம் அமைத்தல், சாலையோரம் மரக்கன்று நடுதல், அன்ன சத்திரங்கள் கட்டுதல்னு ஒரு பெண்ணுக்கே உரிய தன்மைகளோட மக்களோட நலன்களை பார்த்துப் பார்த்து செஞ்சவர் மங்கம்மாள், செழியன்” 

“அதுனாலதான் அவரைப் பத்தி இன்னைக்கு வரைக்கும் பேசிக்கிட்டு இருக்கோம், குழலி.” 

பட்டுநூல்காரர்கள் 

இன்றைக்கும் மதுரையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள சௌராஷ்டிரர்கள், குஜராத்தில் உள்ள கத்தியவார் எனப்படும் சௌராஷ்டிரப் பகுதியைச் சேர்ந்தவர்கள். பட்டுநூல் நெசவில் ஈடுபட்டிருந்த இவர்களுக்குப் ‘பட்டுநூல்காரர்’ என்ற பெயரும் உண்டு. திருமலை நாயக்கர் காலத்தில் ஜரிகை வேலைப்பாடு கொண்ட துணியை நெய்வதற்காக மதுரையில் இவர்கள் குடியேறி வாழ்ந்தார்கள். மங்கம்மாள் கால ஆவணங்களிலும் இவர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. 

யாருக்கு உதவும்? 

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, பள்ளி வரலாற்றுப் பாடத்தை தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு. 

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x