Published : 06 Aug 2019 11:06 AM
Last Updated : 06 Aug 2019 11:06 AM

ஆங்கிலம் அறிவோமே  276: வீட்டுக்கா இல்ல வீட்டுக்குள்ளேயா? 

ஜி.எஸ்.எஸ். 

கேட்டாரே ஒரு கேள்வி 

Mass என்பதற்கும், மரண mass என்பதற்கும் என்ன வேறுபாடு?

“Gazelle can run faster than snow leopard” என்று படித்தேன். மான் என்பது சிறுத்தைப் புலியைவிட வேகமாக ஓடுமா!?’’ 

நிலத்தில் வாழும் விலங்குகளில் சீட்டா எனப்படும் சிவிங்கிப் புலிதான் மிக வேகமாக ஓடக் கூடியது. நீங்கள் குறிப்பிட்ட வாக்கியத்தில் மான், சிவிங்கிப் புலி ஆகியவற்றைப் பொதுவாகக் குறிப்பிடவில்லை. Gazelle என்பது ஒரு வகை மான். இது இரலைமான் வகையில் உள்ள ஓர் இனம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதிவேகமாக ஓடும் விலங்குகளில் ஒன்று. Snow leopard என்பதைத் தமிழில் பனிச் சிறுத்தை எனலாம். 

எனவே, இந்த இருவகை விலங்குகளில் இரலைமான் வேகமாக ஓடும் என்றுதான் கொள்ள வேண்டும். கஸ்தூரிமானை ஆங்கிலத்தில் Musk deer என்கிறார்கள் என்பதையும், கலை மான் ஆங்கிலத்தில் Royal stag என்று அழைக்கப்படுகிறது என்பதையும் கூடத் தெரிந்துகொள்வோம். 

கே.ஒ.கே. நண்பரே, பொதுவாக mass என்பதற்கும், weight என்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பள்ளிப் பாடங்களில் கூறி இருப்பார்கள். ஒரு பண்டத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறது என்பது mass. நம்மைப் பொறுத்தவரை mass என்றாலும், எடை (weight) என்றாலும் ஒன்றுதான். ஆனால், தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால் புவி ஈர்ப்பு விசையும் எடையில் பங்கு வகிக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு பொருளின் எடை பூமியில் வேறாகவும், நிலவில் வேறாகவும் இருக்கும். Mass இரு இடங்களிலும் ஒன்றுதான். 

பலரையும் உள்ளடக்கிய ஒரு விளைவு என்ற பொருளிலும் mass என்பது பயன்படுத்தப்படுகிறது. Mass destruction, a mass murderer, mass starvation, mass demonstration, mass unemployment, mass desertion என்பதைப் போல. 

பலரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று என்ற பொருளையும் Mass என்பது குறிக்கிறது. (அவனுக்கு mass அதிகம்). 

ஒருவருக்கு மரண mass என்றால் அவருக்கு எக்கச்சக்கமான புகழ் என்று வைத்துக்கொள்ளலாம் (மரண அடி என்பது அடியில் உச்சத்தைப் போல).  

“‘I kindly request you to address’ என்று ஒரு வி.ஐ.பி.யை அழைப்பதைக் கண்டேன். அது சரியா?’’ எனக் கேட்கிறார் ஒரு வாசகர். 

வாசகரின் நெருடல் நியாயமானதுதான். Kindly என்ற சொல்லை (பேச்சாளரிடம்) வேண்டுகோளாகக் கூற நினைப்பவர் ‘நான் கருணையுடன் வேண்டுகிறேன்’ என்று தவறான பொருள் தரும்படியாகக் கூறுகிறார். 

“I request you to kindly address” என்பதுபோல்தான் வாக்கியம் அமைந்திருக்க வேண்டும்.  

போட்டியில் கேட்டுவிட்டால் 

A ______________ man will never stoop to meanness. 

(a) sensible 

(b) sensitive 

(c) cunning 

(d) insane 

(e) unreliable 

Meanness என்றால் அற்பத்தனம். Stoop என்றால் குனிதல் என்று கொள்ளலாம். Stoop to meanness அற்பத்தனத்தில் இறங்குதல் அல்லது அற்பத்தனமான வேலைகளில் ஈடுபடுதல் எனலாம். எத்தகைய மனிதர் அற்பத்தனமான செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் நாம் தேர்வு செய்யும் சொல் அளிக்க வேண்டும். 

கடைசி இரண்டு சொற்களும் இரண்டு விதங்களில் இங்குப் பொருந்தாது. Insane, unreliable ஆகிய சொற்களுக்கு முன் an என்று வருமே தவிர ‘a’ என்று வராது. தவிர மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரும் (insane), நம்ப முடியாத ஒருவரும் (unreliable), அற்பத்தனத்தில் இறங்க மாட்டார்கள் என்று கூற முடியாது. வஞ்சகமான (cunning) ஒருவர் அற்பமான செயல்களில் ஈடுபடவே வாய்ப்பு அதிகம். 

Sensitive என்றால் நுட்பமான உணர்வு கொண்ட என்று பொருள் (தொட்டாற் சிணுங்கி!). இப்படிப்பட்ட ஒருவர் அற்பமாக நடந்துகொள்ளலாம் அல்லது நடந்துகொள்ளாமலும் இருக்கலாம். 

Sensible என்றால் அர்த்தமுள்ள, விவேகமான என்று பொருள். அப்படிப்பட்ட ஒருவர் அற்பக் காரியங்களைச் செய்ய மாட்டார். தன் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள மாட்டார். கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் sensible என்பது கோடிட்ட இடத்தில் பொருத்தமாக உட்கார்கிறது. எனவே, A sensible man will never stoop to meanness என்பதுதான் சரியான வாக்கியம்.  

சிப்ஸ் 

# ஒருவரை வீட்டுக்குள் அழைக்க Come to my house என்று கூற வேண்டுமா? அல்லது Come into my house என்று கூற வேண்டுமா? 

    ஒருவரை வீட்டுக்கு அழைக்க Come to my house என்றும் வீட்டுக்குள் அழைக்க Come into my house என்றும் கூற வேண்டும். 

# Impassable என்றால்? 

    கடக்க முடியாத அல்லது தடைபட்ட. Many roads are flooded and impassable. 

# Nettlesome என்றால் என்ன? 

    எரிச்சலையோ கஷ்டத்தையோ ஏற்படுத்துவது. Nettlesome behaviour, nettlesome act. 

தொடர்புக்கு: -  

aruncharanya@gmail.com 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x