முன்மாதிரி பள்ளியை உருவாக்கிய தலைமையாசிரியர்!

முன்மாதிரி பள்ளியை உருவாக்கிய தலைமையாசிரியர்!
Updated on
2 min read

கே.சுரேஷ் 

அந்தப் பள்ளி வளாகத்தின் முன்வாசலில் மாடு மேய்ப்பவர்கள் படுத்துக்கொள்வார்கள். மாடுகளும் அங்குதான் இளைப்பாறும். ஒரு முறை எருமை மாடு ஒன்று அப்பள்ளி மாணவரை விரட்டியது. மறுநாளே பள்ளிக்கு வேலி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, பொது மக்களின் உதவியுடன் மாணவர்களுக்கு உடை, காலணி, டை, ஐ.டி. கார்டு, புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டன. 

இப்படிப் படிப்படியாக மாற்றப்பட்டு இன்று தரமான இருக்கைகள், ஒலி பெருக்கி, ஸ்மார்ட் வகுப்பறைகள், இரண்டு தவிர அனைத்தும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம், அனைத்து வகுப்பறைகளுக்கும் சுத்தமான குடிநீர் வசதி என முழுவதுமாக நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியை இந்நிலைக்கு முன்னேற்றியவர் இப்பள்ளியின் தலைமையாசிரியராகக் கடந்த 15 ஆண்டுகள் பணியாற்றிய  வி.ஜோதிமணி. தான் நல்லாசிரியர் விருது பெற்றது மட்டுமல்லாமல் பாழடைந்து கிடந்த இப்பள்ளியை மீட்டெடுத்து மாதிரிப் பள்ளியாகத் தேர்வுசெய்யப்படும் அளவுக்குத் தலைகீழ் மாற்றங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். மேலும், மத்திய, மாநில அரசுகளும் இப்பள்ளிக்குப் பல்வேறு விருதுகளை அளித்திருக்கின்றன.

‘எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்!’

குக்கிராமத்தில் இருக்கும் ஓர் அரசுப் பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற்றிய  தலைமையாசிரியர் வி.ஜோதிமணிக்கு அறந்தாங்கி அருகே உள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு இடமாறுதல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக மாங்குடி பள்ளிக்கு வந்தார். மாணவர்கள், ஆசிரியர்களைக் கலையரங்கத்துக்கு வரவழைத்துப் பேசினார். அப்போது, தான் வேறு பள்ளிக்கு இடமாறுதலில் செல்வதைத் தெரிவித்ததும் மாணவர்கள் கண்ணீர்விட்டனர். 

பின்னர், அங்கிருந்து விடைபெற்ற ஜோதிமணியை, மாணவர்கள் கட்டித் தழுவி அங்கிருந்து வெளியேற விடவில்லை. தகவல் அறிந்து பள்ளிக்குத் திரண்டு வந்த பெற்றோர்களும் ஜோதிமணியை சூழ்ந்துகொண்டு வேறு பள்ளிக்குச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார். 
“பதவி உயர்வு மூலம் மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் 2004-ல் பொறுப்பேற்றேன். முதல்நாள் பள்ளிக்குச் சென்றபோது இதற்கு முன்பு பணிபுரிந்த தலைமை ஆசிரியர் மீது சில குறைகளைக் கூறி, பொதுமக்கள் பள்ளியை மூடிவிட்டுச் சாவியை எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும், கல்வித் துறை அலுவலகத்தில் சாவியை ஒப்படைக்க உள்ளதாகவும், இதற்குத் தீர்வு ஏற்படாதவரை பள்ளியைத் திறக்கக் கூடாது எனவும் கூறினர். அதன்பிறகு, ‘எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். சில மாதங்களிலேயே மாற்றத்தைக் கொண்டுவருகிறேன். அதில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் நானே இடமாற்றம் பெற்றுக்கொள்கிறேன்’ என வாக்குறுதி அளித்தேன்.

அதை ஏற்றுக்கொண்டு சாவியை ஒப்படைத்தார்கள். ஏறத்தாழ அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அன்று பள்ளிக்கு உள்ளே விட மனமின்றி இருந்த அதே மக்கள்தான், இன்று அந்தப் பள்ளியில் இருந்து நான் வெளியே செல்ல அனுமதிக்க மனமின்றி உருகுகிறார்கள். ஊர் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொண்டது திருப்தி அளிக்கிறது. இந்தப் பள்ளியின் தரத்தை மென்மேலும் உயர்த்தலாம். அதேநேரம், வேறு பள்ளியையும் மேம்படுத்தவே இடமாறுதலில் செல்கிறேன்” என்றார் ஜோதிமணி.

தமிழகத்தில் ஏராளமான அரசுப் பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் ஒரு தலைமையாசிரியர் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கும்,  தலைமை ஆசிரியரின் பணி எத்தகையது என்பதற்கும் மாங்குடிப் பள்ளியே சான்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in