செய்திப்பிரிவு

Published : 06 Aug 2019 10:24 am

Updated : : 06 Aug 2019 10:24 am

 

குத்துச்சண்டையில் கலக்கும் கோவை மாணவர் 

kovai-student-wining-in-boxing

த.சத்தியசீலன் 

சாதனையாளர்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் தயாரிக்கப்படுவதில்லை. தங்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கும் வேட்கை, கனவு, பார்வையிலிருந்தே சாதனையாளர்கள் உருவெடுக்கிறார்கள் என்றார் உலகப் புகழ் பெற்றக் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. அப்படியான ஒரு சாதனையாளராக வளர்ந்துகொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் எஸ்.முகேஷ். 

இவர் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரத்துக்கு உட்பட்ட சஞ்சுலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

‘பைக்கா’ என்றழைக்கப்படும் பஞ்சாயத் யுவா கிரிடா கேல் அபியான் அசோசியேஷன் சார்பில், இரண்டாம் ‘பைக்கா’ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தின் சார்பில் குத்துச்சண்டைப் போட்டியில், ஜூனியர் 46-49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட எஸ்.முகேஷ் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

வெற்றியின் ருசி 

கோவையை அடுத்துச் சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த ஜெ.சிவக்குமார்- எஸ்.முத்துலட்சுமி தம்பதியின் மகன் முகேஷ். இவர் தெலுங்குபாளையத்தில் உள்ள மதர்லேண்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். குத்துச்சண்டை வீரரான இவர் மாவட்டப் போட்டி முதல் தேசியப் போட்டிகள்வரை பதக்கங்கள் வென்றிருக்கிறார். 

“8-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் உடற்பயிற்சி வகுப்பில் குத்துச்சண்டை குறித்து உடற்கல்வி ஆசிரியை தீபா விளக்கினார். அது குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. இதை உடற்கல்வி ஆசிரியையிடம் தெரிவிக்க, குத்துச்சண்டை பயிற்சியாளர் சி.வி.மயில்சாமி என்பவரிடம் சேர்த்துவிட்டார். 

அதைத் தொடர்ந்து நேரு விளையாட்டு அரங்கில் உள்ள மாநகராட்சி குத்துச்சண்டைப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறத் தொடங்கினேன். முதலில் உடற்திறன் மேம்பாடு, ஆற்றலை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

2016-ல் பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். அதே ஆண்டில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியிலும் இரண்டாமிடமே கிடைத்தது.  

2017-ல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டுப் போட்டியில், குத்துச்சண்டைப் பிரிவில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்றேன். முதல் தங்கப்பதக்கம் எனக்குள் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறும் வேட்கையைத் தூண்டியது” என்கிறார் முகேஷ். 

இதுவரை தேசிய அளவில் 2 தங்கம், மண்டல அளவில் 2 தங்கம், மாவட்ட அளவில் 1 தங்கம், மாநில அளவில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் எனப் பதக்கங்களைக் குத்துச்சண்டையில் வென்றிருக்கிறார் முகேஷ். 

வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில், தேசியப் போட்டிக்குத் தேர்வு பெறுவதற்கான மாநிலப் போட்டி நடைபெறுகிறது. இதற்காகத் தினந்தோறும் காலை 6-8 மணி, மாலை 5.30-8 மணி வரை பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இந்தத் தன்னம்பிக்கை கதாநாயகன். 

குத்துச்சண்டைகோவை மாணவர்வெற்றியின் ருசிஉடற்பயிற்சி வகுப்புநேரு விளையாட்டு அரங்கம்பள்ளி கல்வித்துறை

Popular Articles

You May Like

More From This Category

More From this Author