Published : 06 Aug 2019 10:12 AM
Last Updated : 06 Aug 2019 10:12 AM

மகளிரியல்: பல்துறை வளர்ச்சி சார்ந்த படிப்பு! 

என். மணிமேகலை  

பெண்களும் விளிம்பு நிலை மக்களும் சமத்துவமற்ற போக்கையும், சமூகப் புறக்கணிப்பையும் இன்றுவரை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இப்பிரச்சினைகளைப் பாலினச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு அணுகி, சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, இதன் மூலமாகச் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே மகளிரியல் (Women Studies) அல்லது பாலினவியல் (Gender Studies) படிப்புகளின் நோக்கமாகும். இதை மையமாகக் கொண்டே இப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் பல்துறைசார்ந்ததாக (Interdisciplinary) உருவாக்கப்படுகின்றன. 

இந்தியாவில் 1980களின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மானியக் குழுவால் மகளிரியல் பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதிலும் 160 மகளிரியல் மையங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கல்விப்புலமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மேலும், 61 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மகளிரியல்/ பாலினவியல் முதுகலைப் பட்டப்படிப்புகள் மானுடவியல், சமூக அறிவியல் துறைகளின் மூலமாக வழங்கப்படுகின்றன. இளங்கலை, முதுகலை, சான்றிதழ் எனப் பல நிலைகளில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலையில் எந்தப் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களும் இப்படிப்புக்குத் தகுதியானவர்கள். இதைப் படிக்கும் மாணவர்கள் பல்துறைசார் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பன்முகப் பயிற்சிகள் 

பங்கேற்போடு கூடிய வகுப்பறைக் கற்றலும், தொடர் களப்பணி அனுபவங்களும் மகளிரியல்/பாலினவியல் பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் பொருளாதார, பண்பாட்டு, அரசியல் சூழல்களுக்கு ஏற்ப சமூகப் பிரச்சினைகளைக் கோட்பாட்டுரீதியாகப் புரிந்துகொண்டு தீர்வுகளைக் கண்டறியும் அணுகுமுறையை அவர்கள் கண்டறிய முடிகிறது. 

வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாக இத்துறை மாணவர்களை வளர்த்தெடுக்க ஆராய்ச்சித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, உளவியல் ஆலோசனை வழங்கும் பயிற்சி, ஆவணப்படுத்துதல் பயிற்சி, ஊடக மேலாண்மைப் பயிற்சி, ஒருங்கிணைப்பு, களப்பணிகள் மேற்கொள்ளுதல், குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடல் மூலமாகப் பயிற்றுவித்தல் எனப் பல்துறைசார் அறிவையும் திறன்களையும் கற்றுக்கொள்ளும்வகையில் வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் அமைந்துள்ளன. 

வேலைவாய்ப்புகள் 

மகளிரியல்/பாலினவியலைக் கற்றுத்தேர்ந்த மாணவர்கள் பாலினச் சமத்துவக் கொள்கை வகுத்தல் (Gender Policy and Planning), பாலினத் தணிக்கை (Gender Auditing), மகளிரியல் நோக்கிலான ஆற்றுப்படுத்தல் (Feminist Counselling) போன்ற சிறப்புத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதோடு, சமூகநீதியைப் பேணுவதற்கான செயற்பாட்டாளர்களாகவும் பணியாற்ற முடியும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள மகளிரியல் துறைகள், மையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது. 

அரசு, அரசு சாரா நிறுவனங்களில் பல துறைகளிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் வேலைவாய்ப்புக்கான தளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அனைத்து அமைச்சகங்களிலும் உள்ள பாலினச் சமத்துவ உள்ளீட்டுக்கான துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, மகளிர் - குழந்தைகளுக்கான, சமூக விளிம்புநிலை மக்களுக்கான மேம்பாட்டுப் பணிகள், திட்டங்களில் ஏராளமான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 

வளரிளம் பெண்கள், பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கான உளவியல் ஆலோசகர், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சட்டப் பாதுகாப்புக்குரிய உளவியல் ஆலோசகர், வாழ்க்கை முறை திறன்கள், திறன்மேம்பாடு, பாலின உணர்வூட்டல் (Gender Sensitization), பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுத்தல் போன்றவற்றில் பயிற்றுநர், ஊடகத் துறைகளில் பெண்ணிய பதிப்பாளர், செம்மைப்படுத்துபவர் (Feminist Publishing and Editing), பாலினச் சமத்துவத் திட்டமிடல், தணிக்கை செய்தல், நிதியறிக்கை தயாரித்தல், மேலாண்மை துறைகளில் திட்ட மேலாளர், இயக்குநர் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை. 

உயர்கல்விக்கான வழிகள் 

இதுபோக, ஐ.நா. சபைக்கு உட்பட்ட ஐ.நா. பெண்கள், யு.என்.டி.பி., யுனெஸ்கோ, யுனிசெப், யு.என்.டி.எஃப். ஆகிய நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. இவை தவிரவும் தமிழ்நாடு பொதுத்தேர்வுகள் ஆணையம் மகளிரியலைச் சமூக அறிவியல் துறையின்கீழ் இணைத்துள்ளதால் இந்தப் படிப்பைப் படித்தவர்கள் அரசுப் பணிகளுக்கும் முயலலாம். 

பிற சமூக அறிவியல் பாடப் பிரிவுகளைப் போலவே மகளிரியலிலும் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ளன. மகளிரியல்/பாலினவியல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் எம்.ஃபில்., முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு JRF (Junior Research Fellow), SRF (Senior Research Fellow) PDF ( Post – Doctoral Research Fellow) உள்ளிட்ட ஊக்கத்தொகைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு, Indian Council for Social Science Research (ICSSR), Indian Council for Historical Research (ICHR), UN Women, Ministry of Women and Child Development ஆகிய நிறுவனங்கள் அளிக்கின்றன. 

தொழில், வேலைவாய்ப்பைக் கடந்து மாற்றுச் சிந்தனை, சமூக மாற்றம், சமத்துவம், சமநீதி போன்றவற்றில் அக்கறையுள்ளவர்களுக்கு இப்படிப்பு மிகவும் உகந்ததாக இருக்கும். 

கட்டுரையாளர்:  

இயக்குநர்-தலைவர், மகளிரியல் துறை,

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x