Published : 05 Aug 2019 09:55 AM
Last Updated : 05 Aug 2019 09:55 AM

ஸ்டைலான நேர்த்தியான ஏதர் 450

எங்கு பார்த்தாலும் மின்சார வாகனங்கள் பற்றிய பேச்சுதான். ஆனாலும் பெரும்பாலானோருக்கு மின்சார வாகனங்கள் குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். விலை அதிகம் என்ற எண்ணம் ஒருபக்கம். இதற்கெல்லாம் மத்தியிலும் ஏதர் 450 மின்சார இருசக்கர ஸ்கூட்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. காரணம் அதன் ஸ்டைலான தோற்றமும், நேர்த்தியான உருவாக்கமும்தான்.

2013–ம் ஆண்டில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு ஏதர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதுவரை இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று ஏதர் 350. மற்றொன்று ஏதர் 450. இதில் ஏதர் 450 தான் தற்போதைய புதிய வரவு. இதற்கான விளம்பரப் படங்களை பார்க்கும்போதே இந்த ஸ்கூட்டரின் தன்மை எப்படி என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு மற்ற ஸ்கூட்டர்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை.

குறிப்பிட்ட தொலைவுக்குள் அன்றாடப் பணிகளுக்காக வாகனத்தை பயன்படுத்துபவர்களை நோக்கமாகக் கொண்டு இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  தற்போது பெங்களூரு மற்றும் சென்னையில் மட்டும்தான் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களைப் பொருத்தவரை சார்ஜிங் என்பதுதான் சவாலான விஷயம். அந்த விஷயத்தில் ஏதர் திட்டமிட்டு சார்ஜிங் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் ஒரு சார்ஜிங் யூனிட்டை வாடிக்கையாளர் வீட்டிலேயே பொருத்தி தருகிறது. தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் சார்ஜிங் செய்து கொள்ளலாம். தவிர்த்து, வெளியிடங்களுக்கு செல்லும்போது சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் இதற்கென்று தனி சார்ஜிங் கேபிள் கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சாதாரண 5A பிளக் பாயின்ட்களின் மூலமும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜூலை நிலவரப்படி, சென்னையில் மட்டும் காபி ஷாப், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் 10 சார்ஜிங் நிலையங்களையும் அமைத்துள்ளது. வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது சார்ஜ் குறைவாக இருந்தால் அருகில் உள்ள இந்த நிலையங்கள் ஒன்றில் இலவசமாக சார்ஜ் செய்து கொள்ள
லாம். 2 மணி 40 நிமிடங்களில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஏறிவிடும் எனக் கூறப்பட்டுள்ளது. 4 மணி 18 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை எட்டும் என்கிறது நிறுவனத் தரப்பு. பாஸ்ட் ஜார்ஜிங் மோடில் ஒரு நிமிடத்தில் ஒரு கிலோமீட்டருக்கு தேவையான சார்ஜ் ஏறிவிடும்.

வேகத்தைப் பொருத்து இதன் பேட்டரி பயன்பாடு மாறுபடும். எகானமி ரேஞ்ச் எனப்படும் மோடில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணித்தால், முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைக் கொண்டு 75 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும். மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணித்தால் 65 கிலோ மீட்டர் தூரம் வரை தாங்கும். ஸ்போர்ட் ரேஞ்ச் என்று அழைக்கப்படும் அதிவேகத்தில் அதாவது மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணித்தால் 55 கிலோ மீட்டர் தூரம் வரை சார்ஜ் தாங்கும்.

இந்த ஸ்கூட்டரில் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2.71 கிலோவாட்  திறனை கொண்டிருக்கும் இந்த பேட்டரியில் 2.4 கிலோவாட் திறன் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த ஸ்கூட்டர், 3.9 வினாடியில் 40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.  இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர். 5.4 கிலோவாட் பவரில் 20.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் மொத்த நீளம் 1800 மிமீ. அகலம் 1200 மிமீ. உயரம் 765 மிமீ. இதனால் இது மிக நளினமான தோற்றத்தை தருகிறது.  முன் மற்றும் பின் பக்க சக்கரங்கள் 12 அங்குல அளவில் உள்ளன. பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. 7 அங்குல தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது. இதில் எங்கெங்கு சார்ஜிங் நிலையங்கள் உள்ளன என்பது உட்பட கூகுள் மேப் போன்ற பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வைஃபை மூலம் இந்த ஸ்கூட்டரை மொபைல் போனுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் வாகனத்தின் சார்ஜ் அளவு உட்பட மேலும் சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ஏதர் 450-க்கு 3 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. எவ்வளவு கிலோ மீட்டர்கள் ஓடி இருந்தாலும் வாரண்டி உண்டு. அதேபோல் பேட்டரிக்கும் 3 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது.

இதன் விலை பெங்களூர் மற்றும் சென்னைக்கு என்று தனித்தனி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள விலை ரூ.1,22,224. பெங்களூரில் இது ரூ.1,13,715. இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் இதன் விலை ரூ.1,31,683 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது பேட்டரி வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு இருப்
பதால் இதன் விலை ரூ.10,000 குறைந்துள்ளது. இருந்தபோதிலும் இந்த விலை சற்று அதிகம்தான். தற்சமயம் பெங்களூரு மற்றும் சென்னையில் தனது சேவையை வழங்கி வரும் இந்த நிறுவனம், அடுத்த கட்டமாக ஹைதராபாத், டெல்லி, புனே ஆகிய நகரங்களில் தனது தயாரிப்புகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர இருக்கிறது.

இதன் குறைபாடு என்னவென்றால் பிற ஸ்கூட்டரைப் போல இந்த வண்டியை வெகு தூரத்துக்கு உல்லாச பயணத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால் இதற்கான சார்ஜிங் நிலையங்கள் சென்னையின் மைய இடங்களில் மட்டுமே உள்ளன. சென்னையைத் தவிர்த்து பிற இடங்களில் சார்ஜ் செய்வதற்கு  சிரமப்பட வேண்டும். மின்சார வாகனப் பயன்பாடு அதிகரிக்கும்போது இந்தக் குறைபாடும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்பலாம். அதன் பிறகு ஏதர் 450-ல் இந்தியா முழுவதும் கூட சுற்றி வரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x