Published : 04 Aug 2019 10:26 AM
Last Updated : 04 Aug 2019 10:26 AM

வட்டத்துக்கு வெளியே: உலகம் ஒரு நாள் வசப்படும்!

எல். ரேணுகாதேவி

வாழ்க்கையில் எதிர்படும் துன் பங்கள் எவ்வளவு மோச மானதாக இருந்தாலும் அவற்றை எதிர்த்து வெற்றிபெறுவதில்தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்று சொல்வதுடன் அதை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார் சுந்தரி சிவசுப்பு.

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இவர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். முடக்குவாதம் சுந்தரியின் உடலைச் சற்று முடக்கியதே தவிர, கனவுகளை முடக்க முடியவில்லை. சக்கர நாற்காலி உதவியுடன் பயணத்தைத் தொடர்கிறார் சுந்தரி. நீண்ட நேரம் பேனா பிடித்து எழுதுவது அவருக்குச் சிரமம். ஆனால், அந்தச் சவாலைச் சமாளித்து சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிவருகிறார் சுந்தரி.

மூளை முடக்குவாதத்துடன் தான் கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து ‘A Bumblebee’s Balcony – Celebrating Life With Cerebral Palsy’ என்ற ஆங்கில நாவலை சமீபத்தில் அவர் வெளியிட்டார். இந்த நாவலை எழுத பத்து ஆண்டுகளைச் செலவிட்டுள்ளார். வாழ்க்கையில் சோர்ந்து போனவர்களுக்குப் புதிய நம்பிக்கையை விதைக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கியச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் சுந்தரி சிவசுப்பு பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், அனைவரின் மனத்துக்கும் உற்சாகம் அளிக்கும் வல்லமை பெற்றவை.

அழாமல் அழவைத்தவர்

பொதுவாக அழாமல் இருக்கும் சற்று வளர்ந்த குழந்தைகளையே பெற்றோ ருக்குப் பிடிக்கும். ஆனால், சுந்தரி பச்சிளம் குழந்தையாக இருந்தபோதே அழாமல் இருந்ததுதான் அவருடைய பெற்றோரைக் கலக்கத்தில் ஆழ்த்தியது. ஆம், சுந்தரி இந்தப் பூமிக்கு வந்தபோது அவர் அழவில்லை. பிறந்து ஒரு மணி நேரம் ஆகியும் அழவில்லை. சுந்தரியின் சிறுமூளையில் உள்ள செல்கள் ஒவ்வொன்றாக இறக்கத்தொடங்கியதுதான் இதற்குக் காரணம். இந்த செல்களின் இறப்புதான் குழந்தைகளுக்கு மூளை முடக்குவாதம் ஏற்பட முக்கியக் காரணி.

இப்படிக் குழந்தை அழாமல் இருப்பது மூளை முடக்குவாதப் பாதிப்பின் அறிகுறி என்பதை மருத்துவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. இன்றைக்கு மருத்துவத் துறை ஓரளவு மேம்பட்டிருக்கிறது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு மூளை முடக்குவாதம் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்திருக்கிறது. தங்கள் குழந்தைக்கு நடப்பதில் மட்டுமே பிரச்சினை; மற்றபடி அவள் ஆரோக்கியமாகவே இருப்பதாக சுந்தரியின் பெற்றோர் நம்பியுள்ளனர். மகளை நடக்கவைக்க பிசியோதெரபி, நாட்டு வைத்தியம் எனப் பல மருத்துவ முறைகளைப் பின்பற்றியுள்ளனர்.

“நடை பழகுவதற்காகக் கடற்கரையில் கால்களை ஊன்றி நீண்ட நேரம் நின்றுகொண்டிருப்பேன். அப்போது ஒருமுறை அலை என்னை அடித்துச்சென்றுவிட்டது. நல்லவேளை காப்பாற்றிவிட்டார்கள். நடப்பதில்தான் எனக்குப் பிரச்சினை என்று நினைத்துப் பல பயிற்சி மையங்களில் நடைபழகக் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், என்னால் எப்போதுமே நடக்கமுடியாது என்று அவர்களுக்குத் தெரியாது” எனத் தன்னுடைய இளமைக் காலத்தை நினைவுகூர்கிறார் சுந்தரி.

நம்பிக்கை தந்த பேராசிரியர்

சுந்தரிக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக சென்னைக்கு அவர்களுடைய குடும்பம் குடிபெயர்ந்தது. சுந்தரி மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. இனிமேல் அவ்வளவுதான் எனச் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ஊருக்குச் செல்வதற்கு முன்பாகப் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்துவிட்டு செல்லுமாறு நண்பர் ஒருவர் அறிவுறுத்தியுள்ளார். “அவரும் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறார் என அவநம்பிக்கையுடன்தான் நாங்கள் இருந்தோம். ஐஐடியில் உயிர் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருந்த ஆர். சந்திராவைப் பார்த்தபோது, எங்கள் எண்ணம் மாறியது. அவரும் என்னைப் போல் சக்கர நாற்காலியில்தான் தன்னுடைய அன்றாடப் பணிகளைச் செய்துவந்தார். சந்திரா மேடம் கொடுத்த ஊக்கம்தான் என் மீதே எனக்கு நம்பிக்கை பிறக்கச் செய்தது. ஊருக்குப் போவதை மறந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டோம்” என்கிறார் சுந்தரி.

அச்சுறுத்தும் பார்வை

சென்னையில் உள்ள ‘தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி’யில் இணைந்து மனத்துக்கும் உடலுக்குமான பயிற்சிகளை சுந்தரி எடுத்துக்கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இல்லாத கட்டமைப்பு வசதிகளே பொது இடங்களில் பெரும் பிரச்சினை. சுந்தரி படித்த கல்வி நிலையங்களில் இந்தப் பிரச்சினையை அவர் எதிர்கொண்டுள்ளார். ஆனால், எல்லா நிலையிலும் அவருடைய தோழிகள் உறுதுணையாக இருந்துள்ளனர். படிக்கும் காலத்தில் சிறந்த மாணவியாக சுந்தரி வலம்வந்துள்ளார்.

“படிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் பேனா பிடித்து எழுதுவது, அவ்வளவு கடினமாக இருக்கும். இப்போதுவரை ஒவ்வொரு நொடியும் பேனா பிடிக்கும்போது மிகவும் பத்திரமாகக் கையாள்வேன். என்னால் நீண்டநேரம் ஒரு பொருளைப் பிடிக்க முடியாது. கை விரல் தசைகள் இறுகிவிடும். அதேபோல்தான் சாப்பிடுவதும். ஒவ்வொரு நாளும் என் உடல் நினைவாற்றலை இழந்துகொண்டே இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை நினைவுபடுத்தித்தான் செயல்பட வேண்டியுள்ளது” எனச் சொல்லிவிட்டுத் தன் புத்தகத்தில் கையெழுத்து பெற வரும் வாசகர்களுக்குப் பொறுமையாகக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறார்.

தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சுந்தரி தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் உள்ளார். “நான் இன்றைக்கு இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என்றால், அதற்கு முக்கியக் காரணம் என்னுடைய அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் செலுத்திய கடும் உழைப்புதான். என்னால் நடக்க முடியவில்லை, கைகளை அசைக்க முடிவதில்லை, மற்றவர்கள் பேசுவதைச் சரியாகக் கேட்க முடிவதில்லை, லென்ஸ் இல்லாமல் பார்க்க முடிவதில்லை எனப் பல பிரச்சினைகள் இருந்தாலும், எதற்காகவும் நான் சோர்ந்துபோவதில்லை.

ஆனால், இவை அனைத்தையும்விட ‘அய்யோ பாவம்’ என்ற இரக்கப் பார்வை, என்னைச் சட்டென்று காயப்படுத்திவிடும். அதற்கு மருந்தாகத்தான் அசாத்தியமான விஷயங்களைக் கனவு காணத் தொடங்கினேன். படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நபராக நாம் திகழ வேண்டும் என்பவை எல்லாம் அப்படி நான் கண்ட கனவுகளின் விளைவே. என் கனவுகளை ஒவ்வொன்றாக வசப்படுத்தியதால் இன்று உங்கள் முன்னால் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறேன்” என்று சொல்லி அந்தக் கூட்டத்துக்கு வந்திருப்பவர்களின் மனங்களிலும் முகத்திலும் புது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார் சுந்தரி சிவசுப்பு. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x