Published : 04 Aug 2019 10:21 AM
Last Updated : 04 Aug 2019 10:21 AM

முகங்கள்: தங்கம் வென்ற சதுரங்க ராணி

த.சத்தியசீலன்

கறுப்பு வெள்ளைக் கட்டங்களின் நடுவே கம்பீரமாக வீற்றிருக்கும் ராணி, தன்னிகரில்லாத அதிகாரத்தோடு முன்னேறிச் செல்வதைப் போலவே செஸ் விளையாட்டில் முன்னேறிவருகிறார் கோவையைச் சேர்ந்த பிரியங்கா. தனியொரு பெண்ணாக இருந்து தன்னை வளர்க்கும் தாயின் கடமைக்குப் பரிசாக இதைப் போன்ற இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும் முனைப்புடன் பிரியங்கா பயிற்சியெடுத்துவருகிறார்.

டெல்லியில் ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த பிரியங்கா, பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 600 போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில்தான் இந்தச் சாதனையை பிரியங்கா நிகழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் அந்தப் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். கோவாவில் நடைபெறவுள்ள செஸ் போட்டிக்காகத் தயாராகிவருகிறார் பிரியங்கா.

வெற்றி மேல் வெற்றி

கோவை வடவள்ளியைச் சேர்ந்த பிரியங்கா, அம்மா கே.மருதாம்பாளுடனும் பாட்டி எம்.ராமலட்சுமியுடன் வசித்துவருகிறார். சிறுவயதில் தன்னுடைய தந்தை எஸ்.காளிதாஸ், தாத்தா எம்.மயிலப்பன் ஆகிய இருவரும் செஸ் விளையாடுவதைப் பார்த்த பிரியங்காவுக்கும் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. தந்தையும் தாத்தாவும் பயிற்சியளிக்க, பயணம் தொடங்கியது. பயிற்சியாளர் தனசேகரிடம் முறையாகப் பயிற்சிபெறத் தொடங்கினார்.

2010-ல் ஒசூரில் நடைபெற்ற மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒன்பது வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றது பிரியங்காவுக்கு உற்சாகத்தையும் உத்வேதகத்தையும் தந்தது. அதே ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான செஸ் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார்.

பயிற்சியாளர் தனசேகர் ஆலோசனையின்படி, கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் என்பவரிடம் பயிற்சி பெற்றார். அப்போது எதிர்பாராத விபத்தில் பிரியாங்காவின் தந்தை இறந்துவிட, அவரது செஸ் பயணம் தடைபட்டது. குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவரின் மரணம் பிரியங்காவைச் சோர்வுறச் செய்தது. 2012,  2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

தடைபட்ட பயணம்

ஒரு மாறுதலுக்காக கர்நாடகத்தில் உள்ள தன்னுடைய மாமா கே.வி. தர் வீட்டுக்கு அம்மாவுடன் சென்றார் பிரியங்கா. அங்குள்ள பள்ளியில் படித்தார். 2014-ம் ஆண்டு மீண்டும் கோவைக்குத் திரும்பினர். அந்த நேரத்தில்தான் மகளைத் தொடர்ந்து செஸ் விளையாடச் சொல்லி அறிவுறுத்தினார் பிரியங்காவின் அம்மா. ஆனால், அந்த ஆண்டில் பங்கேற்ற எந்தப் போட்டியிலும் பிரியங்காவால் வெற்றிபெற முடியவில்லை.

தவறவிட்ட வெற்றி அனைத்தையும் 2015 முதல் கைப்பற்றத் தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற மாநில செஸ் போட்டியில் தங்கம் வென்றார். அந்த வெற்றி அந்தக் குடும்பத்தின் சோகத்துக்கு ஆறுதலாக இருந்தது. அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம்தான்.

“டெல்லியில் நடத்தப்பட்ட காமன்வெல்த் போட்டிகளில் 2017-ல் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கப் பதக்கமும் 2018-ல் நடைபெற்ற போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றேன். இந்த மாதம் அபுதாபியில் நடைபெறவிருக்கும் ‘ஓபன் கிராண்ட் மாஸ்டர் போட்டி’யில் இந்தியா சார்பில் பங்கேற்கிறேன். கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே என் கனவு. கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவிடம் பயிற்சிபெற்று வருகிறேன்” என்று சொல்லும் பிரியங்கா இலக்கை அடையும் உறுதியோடு இருக்கிறார்.

உதவிக்கரம் நீளுமா?

“என் கணவரின் இழப்பு எங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. எங்களால் அந்தச் சோகத்தில் இருந்து மீள முடியவில்லை. அதற்காக என் மகளின் திறமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. அவளது சாதனைப் பயணம் தொடரணும். அதுக்காகப் பலவிதமான கஷ்டத்தைச் சந்திக்கிறேன். சாப்பிடவும் தங்கவும் பிரச்சினை இல்லை.

ஆனா, வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் போட்டிக்காக பிரியங்காவை அனுப்பி வைப்பதற்கான செலவை என்னால் சமாளிக்க முடியவில்லை. நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவிக்கரத்தால்தான் பல்வேறு போட்டிகளுக்கு அவளை அனுப்ப முடிகிறது. அரசின் உதவி கிடைத்தால் அவள் இன்னும் பல வெற்றிகளைக் குவிப்பாள்” என்கிறார் பிரியங்காவின் தாயார் மருதாம்பாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x