Published : 04 Aug 2019 10:22 AM
Last Updated : 04 Aug 2019 10:22 AM

சரோஜினி சம்சாரமா, மின்சாரமா?

சரோஜினி சம்சாரமா, மின்சாரமா?

சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பத்தில் ஏற்படும் தாக்கம் சமூகத்தில் எதிரொலிக்கும். பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் கட்டுக்கோப்பை இழக்காமல் இருக்க கையில் வைத்திருக்கும் ஆயுதம் ஆணாதிக்கம். சில குடும்பங்களில் அந்த ஆயுதத்தைப் பெண்களும் ஏந்தக்கூடும். ஆணாதிக்கக் குடும்பத்தில் அடங்கிப்போகும் உறுப்பினர்களுக்கு எப்போதும் சிக்கலில்லை. இனிப்பில் தோய்த்த ரொட்டி அவர்களுக்குக் கிடைத்துவிடும். தந்தையுடனோ தலைமையுடனோ முரண்படும் உறுப்பினர்களுக்குத்தாம் பிரச்சினைகள் தலைதூக்கும்.

33 ஆண்டுகளுக்கு முன்னர் 1986 ஜூலை 18 அன்று வெளியாகி, பெண்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றிபெற்ற, விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ ஒரு ஆணாதிக்கப்படம். அதன் முதன்மைக் குடும்பத் தலைமை ஆண் அம்மையப்ப முதலியார். பெயரின் பின்னொட்டு சொல்லிவிடும் அவரது குணாதிசயத்தை. அண்ணி சீதைக்காக லட்சுமணன் போட்ட கோட்டைவிட சக்திவாய்ந்த கோட்டைப் போட்டு வீட்டைப் பிரித்தவர் சாட்சாத் அம்மையப்ப முதலியார். சீதையும் கோட்டுக்குள் நிற்கவில்லை; அந்தக் குடும்ப உறுப்பினர்களும் கோடு தாண்டாமல் இல்லை. எல்லாக் கோடுகளும் தாண்டப்படும் என்பதே காலம் தரும் பாடம். 

வா மகளே வா

முதலியாருடைய ஒரே மகள் சரோஜினி வேடத்தை நடிகை இளவரசி ஏற்றிருந்தார். வறட்டு கௌரவம் மிக்க அம்மையப்ப முதலியார் எல்லாப் பிள்ளைகளுக்கும் தேசபக்தர்களின் பெயரை வைத்திருப்பார். வ,உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதி என மகன்களுக்குப் பெயர்வைத்த முதலியார் தன் மகளுக்கு சரோஜினி நாயுடுவின் பெயரை வைத்தார். சரோஜினி நாயுடு சாதி கடந்து காதல் திருமணம் செய்துகொண்டவர். 

அம்மையப்ப முதலியாரின் பெண்ணான சரோஜினியைப் பெண் பார்க்க வரும் காட்சியில் படம் தொடங்குகிறது. அந்தக் காட்சியிலேயே அவர் உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கிவிடுகிறார். வரன் வீட்டினருக்குச் சிற்றுண்டி எல்லாம் வழங்கியபிறகு, அந்தக் கால வழக்கப்படி பெண்ணைப் பாடச் சொல்கிறார்கள். ‘ஜானகி தேவி ராமனைத் தேடி’ என்ற குடும்பத்துக்கு ராசியான பாடலைப் பாட அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அம்மா கோதாவரியை அப்பா பெண் பார்க்க போனபோது, அண்ணி உமாவை அண்ணன் பார்த்தபோதெல்லாம் அந்தப் பாடலே பாடப்பட்டது.

அந்தப் பாடலைப் பாடினால் திருமணம் நிச்சயமாகிவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. சரோஜினி பாடினாள்; ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப்போனது. எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போகும் காலமும் வரத்தானே செய்யும்.  வந்திருக்கும் வரனைத் தனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் சரோஜினி. ஏன் என்று காரணம் கேட்கிறார் சரோஜினியின் அண்ணி உமா. “இதுவரை மூணு பையனுங்க என்ன வந்து பார்த்தாங்க.

பிடிக்கலைன்னு சொன்னாங்க. காரணம் கேட்டீங்களா?” என்று நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் கேட்கிறார் சரோ. சிவன் நெற்றிக் கண்ணைத் திறப்பார்; அவனில் பாதியான உமையவள் ‘உம்’ கொட்டுபவளாகவே இருப்பாளா? சரோஜினியின் நியாயமான கேள்விக்கு உமாவிடம் பதிலில்லை. வழக்கம்போன்ற குடும்ப அமைப்பின் சமரச அஸ்திரங்களைப் புஸ்வாணமாக்கிவிடுகிறார் சரோஜினி. பெண் பார்க்க வந்த ஜெகநாதன் குடும்பத்தினர் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுவிடுகிறார்கள்.

சகலகலா சம்பந்தி

அவர்களைச் சமாதானப்படுத்த ஜெகநாதன் வீட்டுக்கு அம்மையப்ப முதலியார் செல்கிறார்; நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறார். அவர் கௌரவமான குடும்பத்தின் தலைமை உறுப்பினராயிற்றே? பெரிய குடும்பத்துப் பண்பு அதுதானே? சரோஜினி தன் பையனை நிராகரித்ததை இயல்பாக எடுத்துக்கொள்வதாகச் சொல்கிறார் ஜெகநாதன். அவரும் பெரிய மனிதர்தானே. தன் மகள் வசந்தாவை அம்மையப்பனின் இரண்டாம் மகனுக்கு மணம்செய்துகொடுக்க அவருக்குச் சம்மதமா எனக் கேட்கிறார் ஜெகநாதன்.

ஜெகநாதன்: இது என் பொண்ணக்கூடக் கேக்காம இப்ப எடுத்த திடீர் முடிவு. இதுக்கு நான் என் பொண்ணக் கேட்க வேண்டிய அவசியமே இல்ல. கழுத்த நீட்டச் சொன்னவனுக்கு நீட்டுவா… ஏன்னா நான் அவள அப்படித்தான் வளத்துவச்சிருக்கேன். 

அம்மையப்பன்: நீங்க கூடிய சீக்கிரமே நல்ல நாள் பார்த்துரலாம். என்ன எம்பையனக் கேக்காம சொல்றனேன்னு பாக்குறீங்களா? அவனும் நான் கட்டச் சொன்ன கழுத்துல தாலிய கட்டுவான். நான் எம்பொண்ணத்தான் தப்பா வளத்து வச்சிருக்கனே தவிர, பையன சரியாத்தான் வளத்து வச்சிருக்கேன்.

இந்த உரையாடல் தந்தைகளின் மனப்போக்கை அழகாக வெளிப்படுத்திவிடும். ‘சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத’ என்பதே தந்தைகளின் தாரக மந்திரம். எந்தக் குடும்பத்தில் தந்தையின் பிடி பாறையாக இறுகுகிறதோ, அங்கெல்லாம் பாறையைப் பிளக்க ஒரு வேர் கிளம்பும். பாறைகளை வெடிவைத்தெல்லாம் தகர்க்க வேண்டியதில்லை வெறும் வேராலேயே முடிந்துவிடும் காரியம். 

சிவப்புச் சேலை அதே நிற ஜாக்கெட் அணிந்திருக்கும் சரோஜினி தன் காதலனுடன் வீட்டுக்கு பைக்கில் வந்து இறங்குகிறாள். கழுத்தில் துண்டைப் போட்டுக்கொண்டு திண்ணையில் அமர்ந்து நாளிதழ் வாசித்தபடி அதைப் பார்க்கிறார் அம்மையப்பன். அவராக எதுவும் கேட்கவில்லை. சரோஜினியே தனது திருமணம் தொடர்பாகப் பேசுகிறாள். அம்மையப்பன் வீட்டுக்குள் செல்கிறார்; குடும்ப அங்கத்தினர்களை அழைக்கிறார். எல்லோரும் வந்து சுற்றிலும் நிற்கிறார்கள். நடுக்கூடத்தில் ஊஞ்சலில் ஆடியபடியே வழக்கமான நையாண்டியுடன் பேசுகிறார் அவர். 

உரிமை ஊஞ்சலாடுகிறது

சரோஜினியின் காதலன் பெயரைக் கேட்டு அதிர்கிறார் தாய் கோதாவரி. பெயர், பீட்டர் பெர்னாண்டஸ். “கிறிஸ்டினா?” என்கிறார் தாய். “இந்தியன்” எனப் பதிலளிக்கிறார் மகள். “அம்மாடி, உங்க அப்பா ஒரு முதலியாரும்மா” என்கிறார் அண்ணி. “அவரே பேசாம ஊஞ்சலாடிட்டுத்தானே இருக்குறாரு. நான் இந்த வீட்டுப் பொண்ணு. நீங்க வாழ வந்தவங்க. அநாவசியமா என் விஷயத்தில் தலையிடாதீங்க” எனத் தன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் உமாவின் உரையாடலைத் துண்டித்துவிடுகிறார் சரோஜினி.

தன் வீட்டின் கட்டுப்பெட்டித்தனத்தில் சலிப்படைந்துதான் பீட்டரைக் காதலித்து மணக்கிறார் சரோஜினி. அவரது புழுக்கத்தைப் போக்கும் சுதந்திரக் காற்று பீட்டரின் வீட்டில் கிடைக்கும் என நம்பினார் சரோ. ஆனால், அங்கே தொடர்ந்து அரங்கேறிய சம்பவங்கள் சரோஜினியின் போக்குக்கு ஒத்துவரவில்லை. மாமனாரின் ஆணாதிக்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டு, ஒரு நாள் காலையில் கையில் பெட்டியுடன் மொத்தமாகப் பிறந்தவீட்டுக்கு வந்துவிடுகிறார். 

கூட்டுக் குடும்பங்கள் உடைபடத் தொடங்கிய நேரத்தில் வெளிவந்தது ‘சம்சாரம் அது மின்சாரம்’. கூட்டுக் குடும்பங்களால் கிடைத்த அனுகூலங்களைப் போல அதனால் ஏற்பட்ட அவதிகளையும் பேசிய படம் இது. மகளை ‘ஓடுகாலி’ எனப் பேசிய மகனின் கேள்வியைப் பொறுத்துக்கொள்ளாமல் வீட்டைப் பிரிக்கிறார் அம்மையப்பன். வீம்புகொண்ட ஆண்களின் வீராப்பால் பெண்களும் பிரிந்துகிடக்கிறார்கள். எல்லாவற்றையும் சரிசெய்யும் பொறுப்பை எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்றுகிறார் உமா. ஆனால், இறுதியாக அவர் தனியே பிரிந்துசெல்ல முடிவெடுக்கிறார். ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் மரியாதையும் அவமரியாதையும் அவள் புருஷனால்தான் என்பதை உணர்ந்தே வீட்டிலிருந்து பிரிந்துசெல்வதாகச் சொல்கிறார். 

ஒருவகையில் உமா ஆணாதிக்கத்தின் கரத்தை வலுப்படுத்தும் வேலையைச் செய்தவர். ஆனால், சரோஜினியோ அதை எதிர்த்துக் கேள்விகேட்டவர். பெண்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்குச் செவிகொடுக்காத போதும், அவர்களது உரிமைக் குரலுக்குச் செவிசாய்க்காதபோதும் அதற்கான விலையாகக் குடும்பத்தின் நிம்மதியைத் தர வேண்டியதிருக்கும். இதைக் குடும்பங்கள் உணராதவரை சரோஜினிகள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்.

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x