Published : 04 Aug 2019 10:22 AM
Last Updated : 04 Aug 2019 10:22 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 17: வானத்துக்கும் பூமிக்குமா பறந்த பிரமன்

தன் மகனுக்குப் பண்ணையார் மோதிரம் போட்ட மிதப்பில் இருந்த பிரமனைப் பார்க்க அவனுடைய சகதொலியாக இருந்த வீராசுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் கோபம் பொங்கியது. உடனே பிரமனைக் கூப்பிட்டு, “ஏலேய் பண்ணையாரு மோதிரம் போட்டுட்டாருன்னு ரொம்பவும் திமிரா அலையாத. பண்ணையாரு எதுக்குத் தெரியுமா உன் மவனுக்கு மோதிரம் போட்டாரு? அவருக்கும் உன் பொண்டாட்டிக்கும் ரொம்பப் பழக்கம் உண்டு.

எத்தனையோ தரம் உன்ன களத்துக் காவலுக்கு, வயலுக்கு, தண்ணிப்பாச்சன்னு அனுப்பிச்சிட்டு பண்ணையாரு உன் பொண்டாட்டிக்கிட்ட விடிய விடிய பேசிக்கிட்டு இருந்துட்டு வருவாரு. நாங்களே எத்தன நாளு எங்க கண்ணால பாத்திருக்கோம்” என்று சொல்ல பிரமன் அதிர்ச்சியானான். உடனே பக்கத்திலிருந்த வம்பட்டியை எடுத்து ஆத்திரமும் ஆவேசமுமாக அவர்களை வெட்டப்போனான். அவர்களும் அவனைத் தடுத்து, “ஏலேய் நீ எங்கள வெட்டி போட்டயனா ஒரு உப்புக் கல்லுக்கு ஆவாது. ஏன்னா நம்ம கும்புடுற சாமி மேல சத்தியமா சொல்றோம். உன் பிள்ளைக்கு அய்யா நீ இல்ல பண்ணையாருதேன்” என்று சொல்லவும் பிரமன் அவர்களுடன் மல்லுக்குப் போய்விட்டான்.

ஆறு விரல் ரகசியம்

அப்போதும் அவர்கள் அவனைத் தடுத்து, “நீ நல்லா யோசிச்சுப்பாரு. உன் கையில ஆறு விரலு இல்ல; உன் பொண்டாட்டி கையிலயும் ஆறு விரலு இல்ல. உன் மவன் கையில மட்டும் எப்படி ஆறு விரலு வந்துச்சு? ஏன்னா, பண்ணையாரு கையில ஆறு விரலு இருக்கு. அதேன் சொல்லுதோம்” என்றதும் பிரமனுக்கு கோபம் வருவதற்குப் பதில் தன் பொண்டாட்டி மீது சந்தேகம் வந்தது. ‘ஆமா இவுக சொல்லதுலயும் நாயமிருக்கு. நம்ம பரம்பரையிலேயே யாருக்கும் ஆறு விரலு கிடையாது.

நம்ம புள்ளைக்கு மட்டும் எப்படி வந்தது?’ என்றவன், “என் பொண்டாட்டிய இன்னைக்கி வெளுக்கிற வெளுப்புல அவ துண்டக் காணோம் துணியக் காணோமின்னு அவ ஆத்தா வீட்டுக்கு ஓடணும்” என்று எகிற, மீண்டும் எல்லோரும் அவனைப் பிடித்து நிறுத்தினார்கள். “ஏலேய் எதுக்குடா என்ன இப்படிப் புடிச்சி நிறுத்துறீங்க? நீங்க சொல்லதக் கேட்டதும் என் நெஞ்சுல தீ அள்ளிக்கொட்டுன மாதிரி இருக்கு. என்ன விடுங்க” என்று எகிறினான். உடனே அவர்கள் எல்லாரும் சேர்ந்து, “ஏ பிரமா எப்பவும் நீ கூறுகெட்ட வேலைதேன்டா பாக்க” என்று அவனைச் சாந்தப்படுத்த முயன்றார்கள். பிரமனுக்குப் பயங்கரக் கோபம். கண்ணெல்லாம் சிவந்துபோனது.

“என்னடா சொல்றீங்க? உனக்கு ஆறு விரலோட ஒரு புள்ளை பெறந்ததும் நல்லதுதான்”. “என்னடா சொல்லுதீக?”.  “உன் பொண்டாட்டிக்கிட்ட போயி நீ இப்ப கோபப்படாத. ஏன்னா பண்ணையாருக்குச் சொத்து கிடக்கிற கிடப்பப் பத்தி உனக்குத் தெரியாதா? ஊரெல்லாம் அவர் சொத்துதான். அதனால நீ உன் பொண்டாட்டிகிட்ட நைச்சியா பேசி பண்ணையார் கூட உனக்குப் பழக்கமான்னு கேளு. இந்தப் பொம்பளைக இருக்காகளே இந்த மாதிரி விசயத்தயெல்லாம் லேசுக்குள்ள ஒத்துக்கிட மாட்டாக. அதனால நீ என்ன செய்ற பாம்பும் நோவாம பாம்படிச்ச கம்பும் நோவாம பக்குவமா அவகிட்ட கேளு. அவமட்டும் ஆமான்னு சொல்லிட்டான்னு வையி பெறவு விசயத்த எங்ககிட்ட விட்டுரு. நாங்க பாத்துக்கிடுதோம்”.

“என்னடா சொல்லுதீக? எனக்கு ஒண்ணும் புரியலயே”. “ஏலேய் உன் பொண்டாட்டி பண்ணையார் கூடப் பேசிப் பழகினத உன்கிட்ட சொன்னா மட்டும் போதாது. பண்ணையாருகிட்டவும் வந்து சொல்லணும். நம்மளயும் வச்சிக்கிட்டு பண்ணையாருகிட்ட சொன்னான்னா அம்புட்டுத்தேன். இத்தன வருசமா இரநூறு, முந்நூறு வேலக்காரகளப் போட்டுகிட்டு கெம்பிதமா வாழ்ந்தவரு ஒரு சொல்லுல அப்படியே கூனிகுறுகிப் போயிருவாரு.

ஊருக்குள்ள மட்டுமில்ல; அவரு குடும்பத்துக்குத் தெரிஞ்சா அவரு மானம்  மரியாத அம்புட்டும் காத்துல இல்ல பறந்துரும். அதனால, உன் பொண்டாட்டி இந்த விசயத்த சொன்ன உடனே அவரு, “அய்யா பிரமா இந்த விஷயத்த வெளிய சொல்லிராதன்னு உன் கால்ல இல்ல சடாருன்னு விழுந்துருவாரு” என்று பிரமனின் கூட்டாளிகள் சொன்னதும், பிரமனுக்கு உடம்பே பூக்காடாகிப்போனது. அவன் கூட்டாளிகள் சொன்னதும் அவன் பூமியிலிருந்து வானத்துக்குப் பறந்து போனதோடு வானத்தை ஒரு சுற்றும் சுற்றிவிட்டு வந்துவிட்டான். அவனுக்கு அப்படியொரு சந்தோசம்.

கூட்டாளிகளின் யோசனை

பண்ணையார் தன் காலில் கிடப்பதாகவே இப்போது அவனுக்கு தோன்றியது. “ஏலேய் சொல்லத விசயத்த கொஞ்சம் வெவரமா சொல்லுங்கடா” என்று தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் கொஞ்சினான். “நீ ஒரு ‘பேமந்தம்’ புடிச்ச பயடா. உன் கால்ல விழுந்த பண்ணையாரு, “ஏ பிரமா உன் பொண்டாட்டிக்கும் எனக்கும் பழக்கந்தேன். இந்த விசயத்த நீ யாருகிட்டயும் சொல்லிராத”ன்னு கெஞ்சுவாரு. உன்னத் தாங்குவாரு, தடுக்குவாரு, ததிங்கின்னதோன் போடுவாரு. நீ அதுக்கெல்லாம் மசியாத. “நீங்க எங்களைக் காப்பாத்துவீங்கன்னுதான தஞ்சமின்னு வந்து வேல செஞ்சோம். நீங்க இப்படி என் பொண்டாட்டிய நாசக்கேடாக்கிட்டீகளே.

இத நானும் சும்மா விடப்போறதில்ல. நாலு பேரக் கூப்பிட்டு நாயம் கேக்கத்தேன் போறேன்”னு சொல்லு. உடனே  அவரு, “எம்மேல ஆணையா நீ இந்த விஷயத்த வெளியே சொல்லிராத. நீ என்ன கேட்டாலும் நானு தாரேன்”னு சொல்லுவாரு. நீயும் “அதெல்லாம் முடியாது. நானு ஊருக்குள்ள சொல்லத்தேன் போறேன்”னு இப்பத்தேன் ஊரெல்லாம் சொல்லப் போறவன் மாதிரி வெறப்பா நில்லு” என்று கூட்டாளிகள் சொன்னதைக் கேட்டதும் பிரமனுக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. “பிறகு என்ன நடக்கும்?” என்றான் ஆவலும் ஆசையுமாக. “பெறகு என்ன நடக்கும்? நீ இந்த விசயத்த வெளிய மட்டும் சொல்லாத. நீ என்ன கேட்டாலும் நானு தாரேன்னு பண்ணையாரு சொல்லுவாரு” என்றார்கள் அவன் கூட்டாளிகள்.

பிரமனின் பேராசை

இதைக் கேட்டதும் பிரமனுக்குத் தலையில் தங்கக் கிரீடம் வைத்தது போலிருந்தது. “அடடா நானு என்னத்தடா கேக்கட்டும்” என்றான் சலிப்போடு. அங்கே இருந்தவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. எரிச்சலோடு “ஏலேய் கிறுக்குப் பயலே. ஐம்பது ஏக்கரு தென்னந்தோப்பு வச்சியிருக்காருல்ல. அதைக் கேளு. இல்லாட்டி நூறு ஏக்கரு வயலு வச்சிருக்காரே தெக்குமடயில. அதை வேண்ணா உன் பொண்டாட்டி பேருல எழுதிவைக்கச் சொல்லு” என்றதும் பிரமனுக்குக் கோபம் குமுறிக்கொண்டு வந்தது. “ஏலேய் என்னக் கிறுக்குப் பயன்னுட்டு, நீங்கதேன் இப்ப கிறுக்கா அலையிதீக”.

“பிரமா நீ என்னடா சொல்லுத?”  “கருக்காணி பேர்ல அந்த அம்பது ஏக்கர் தோப்பவும் எழுதி வச்சா அவ என்னைக் கொஞ்சனாச்சிலும் மதிப்பாளாடா? என்னை இளிச்சவாயனாக்கி ஒதுக்கித் தள்ளிட்டு அந்தப் பண்ணையாரு கூடவில்ல சேர்ந்துக்கிடுவா?” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே “ஆமா ஆமா. அதுவும் நெசந்தேன். உன் பேருக்கே எழுதிக்கோ” என்றார்கள் எல்லாரும்.

பிரமன் வீட்டுக்குப் புறப்பட்டான் எல்லோரும் அவனிடம் “ஏலேய் உன் பொண்டாட்டிக்கிட்ட பதனமா நடந்துக்கோ. அவள ஏச்சிப் பெறக்கித்தேன் கேக்கணும். அவ மனசு வச்சாத்தேன் உனக்குத் தோப்பு வயலுன்னு கெடைக்கும். யோசிச்சுப் பாத்துக்கோ” என்று புத்திமதி சொல்லி அனுப்பினார்கள்.

வீட்டுக்கு வந்த பிரமனுக்கு வேலையே ஓடவில்லை. “நமக்குத் தெரிந்து நம்ம பொண்டாட்டி யாரிடமும் முகம் காட்டி சிரிச்சிப் பேசினதில்லையே. நம்ம இப்ப இப்படி ஒரு பழியைத் தூக்கி அவமேல போட்டா பொறுத்துக்கிடுவாளா? நம்ம மாமியா, மாமன், மச்சினனுக்குத் தெரிஞ்சா நம்மள கைய, கால வெட்டியெறிஞ்சிருவாகளே. இம்புட்டுப் பெரிய பழியத் தூக்கி அவுக மேல போடலாமா? ஆனா, பெறவெப்படி நம்ம பரம்பரையிலேயே இல்லாத ஆறு விரலு நம்ம புள்ளைக்கு வந்துச்சு? நெசத்துக்கே இது நமக்குப் பிறந்த புள்ளையா?” என்று யோசிக்க யோசிக்க அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.


(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x