Published : 03 Aug 2019 10:26 AM
Last Updated : 03 Aug 2019 10:26 AM

சிகிச்சை டைரி 15: ரோஜாக்களும் செல்ஃபியும்!

க.சே.ரமணி பிரபா தேவி 

திருமணத்துக்கு முன்பிருந்தே கர்ப்பவதிகளை மிகவும் ரசிப்பேன். கணவனும் குடும்பத்தினரும் இன்ன பிறரும், ஈருயிராய் இருப்பவள் மீது காட்டும் அக்கறை அலாதியானது. நான் கர்ப்பமாக இருந்தபோதும் இதை எதிர்கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே பிரசவம் குறித்து நிறையப் பேர் சொல்லக் கேட்டிருந்தாலும் சித்த மருத்துவராகிய அக்கா சொல் வதைக் கடைப்பிடித்தேன்.

1.5 கி.மீ. தொலைவு கொண்ட அலுவலகத்துக்குச் சில நேரம் நடந்துசெல்வது, முன்னெச்சரிக்கையாக உணவில் சர்க்கரையின் அளவைக் குறைத்தது, பழங்களைச் சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது, பேரீச்சை, பால் ஆகியவற்றைத் தினந்தோறும் தவறாமல் எடுத்துக்கொள்வது எனச் சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டேன்.

அக்காவின் ஆலோசனையின் பேரில் ஹீமோகுளோபினை அதிகரிக்க சில மருந்து களையும் பிரசவத்தை எளிதாக்க சில வெளிப்புறத் தைலங்களையும் பயன் படுத்தத் தொடங்கினேன். ஈரோட்டில் பிரசவம் என்பதால், ஒன்றரை மாதங்களுக்கு முன்ன தாகவே சென்னையிலிருந்து ஊருக்குப் போனோம். மாதந்தோறும் சென்றுகொண்டிருந்த மருத்துவப் பரிசோதனை வாரமொரு முறை என்றானது.

நீர்க்காய்கறிகளும் நடைப்பயிற்சியும்

கடைசி மாதத்தில் ஸ்கேன் எடுக்கப்போனபோது, குழந்தையின் எடை 3.2 கிலோ என்றார்கள். இரு வாரங்களில் எடை கூடுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறினார்கள். சுகப் பிரசவக் கனவு கண்டுகொண்டிருந்த எனக்கு உதறல் எடுத்தது. வீட்டுக்குத் திரும்பினோம். அப்போதிலிருந்து தோட்டத்தில் காய்த்த பீர்க்கன், சுரைக்காய், புடலங் காய் என நாட்டுக் காய்கறிகளாக, குறிப்பாக நீர்க் காய்கறி களாகவே  உட்கொண்டேன். மேற்குறிப்பிட்ட மூன்றில், ஏதேனும் இரண்டு அம்மாவின் சமையலில் தினமும் கட்டாயம் இருக்கும். வீட்டிலிருந்து 200 மீ. தொலைவில் உள்ள சாலை வரை காலையும் மாலையும் நடந்தேன்.

அக்காவின் வீடு ஈரோட்டுக்கு அருகில் என்பதால், பிரசவத் தேதிக்கு இரு நாட்கள் முன்னதாக அங்கே சென்றுவிடத் திட்டமிட்டிருந்தோம். குழந்தைக்கும் எங்களுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களின் பேக்கிங் படலமும் நடந்தது. சில நாட்கள் கழித்து ஓர் இரவில், சரியாகத் தூக்கம் வர மறுத்தது. தனி அறையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த எனக்கு, அம்மா, அப்பாவுடன் தூங்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர்களுடன் சேர்ந்து படுத்த போதும், ஆழ்ந்த உறக்கம் இல்லை. அதிகாலையிலிருந்து நிறமற்ற திரவம் சுரந்துகொண்டே இருந்தது.

பெண் பிறந்தாள்

மருத்துவரை போனில் அழைத்துக் கேட்டபோது, ‘எதற்கும் ஆஸ்பிடல் வாருங்கள்; பரிசோதித்து விடலாம்’ என்றார். சோதனையை முடித்துவிட்டு அப்படியே அக்கா வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டோம். காலை உணவை முடித்துவிட்டு, எல்லாவற்றையும் எடுத்துவைத்தோம். உடைக்கு ஏற்ற நிறத்தில் ஆரஞ்சு நிற பூச்சை ரசித்தவாறே நகங்களில் வைத்தேன், ஃப்ரிட்ஜில் இருந்த ஆரஞ்சு ரோஜாக்கள் நான்கையும் அம்மா, அத்தை, பெரியம்மாவுக்கு எனப் பிரித்து வைத்தேன். தம்பி, அப்பாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.

மருத்துவமனையை நோக்கிப் பாடல்களுடன் பயணப்பட்டோம். பரிசோதனை முடிவில் தலை கீழே இறங்கத் தொடங்கிவிட்டது; இன்று அல்லது நாளைக்குள் பிரசவம் ஆகிவிடும் என்றார் மருத்துவர். முதல் மாடியில் அறை ஒதுக்கப்பட்டது. நீள வராந்தாவில் நடந்தால் பிரசவ வலி ஏற்படும் என்று அறிவுறுத்தினர். கணவர், உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது; நானும் நடந்துகொண்டே இருந்தேன்.

வலி வந்தபாடில்லை. மாலையில் மாதவிலக்கின்போது ஏற்படும் வலி ஏற்பட்டது. மீண்டும் பரிசோதித்துவிட்டு, இரவுக்குள் பிரசவம் ஆகிவிடும் என்றனர். மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல அடிவயிற்றில் சுரீர் சுரீரென வலிக்க ஆரம்பித்தது. பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்றனர். உள்ளே அழைத்துச்சென்று படுக்க வைத்தனர். சில நிமிடங்கள் யுகமாய் நீண்டன. வலி இருந்தது; ஆனால், பெரும்பாலானோர் சொல்வதுபோல மரண வலியெல்லாம் இல்லை. தாங்கிக்கொண்டேன். அழுகுரல் ஒலித்தது; அதிரா பிறந்தாள்.

வலிமிகு தையல்

சுகப் பிரசவம் என்பதால் தையல் போட வேண்டும் என்றனர். வலி உணர்வை மரத்துப் போகச்செய்ய ஊசி போட்டனர். அதுவே பயங்கரமாக வலித்தது. தைக்க ஆரம்பித்த போதுதான் உயிர் போகிற வலியை உணர்ந்தேன். ‘ஐயோ, வலிக்கிறது’ என்று கத்தினேன். மூன்று முறை ஊசி போட்டும் வலி மரத்துப் போகவில்லை. ஊரில் முருங்கைக் காய்களைச் சாக்குப் பைகளில் நிரப்பி, அதை முரட்டுத்தனமான கோணூசிகளால் தைப்பார்கள். அத்தகைய வலியை உணர்ந்தேன். ‘தையலே வேண்டாம்; விட்டு விடுங்கள்’ என்று கூப்பாடு போட்டேன். 

பிரசவ வலியைவிட, இந்த வலிதான் அதிகமாக இருந்தது. சொல்லிச் சொல்லி ஓய்ந்தேன். கனவுக்கும் நனவுக்கும் மாறி மாறிச் சென்றேன். பிறகு அருகில் பாப்பாவை வைத்து, ஆயாசமாகப் படுத்திருந்த அந்தக் கணம், வாழ்நாளில் மறக்காது. சிறிது நேரத்தில் மளமளவெனத் துடைத்து, என்னைப் பழைய அறைக்கு மாற்றினார்கள். குளிக்க வைக்கப்பட்டு, அதிரா வந்தாள்; ஆனந்தமும் கூடவே வந்து சேர்ந்தது.

க.சே. ரமணி பிரபா தேவி தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x