Published : 02 Aug 2019 11:40 AM
Last Updated : 02 Aug 2019 11:40 AM

முத்தக் காட்சிகளுக்கு முடிவு கட்டினேன்! - ஜெயம் ரவி பேட்டி

கா.இசக்கிமுத்து 

“நடிகர்களின் படங்களுக்கு வசூல்தான் பிரதானம். அதற்காக ஒரே மாதிரியான படங்கள் பண்ணுவதில் உடன்பாடில்லை. வசூலில் வித்தியாசம் வருவது பிரச்சினை இல்லை. வசூலே வரவில்லை என்றால் பெரிய பிரச்சினைதான்” என்று கதாநாயக சினிமாக்கள் பற்றிய கவலையுடன் உரையாடலைத் தொடங்கினார் ‘கோமாளி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜெயம் ரவி.

இப்பொதெல்லாம் ‘சம்திங் சம்திங்', ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' மாதிரியான காதல் கலந்த குடும்பப் படங்களில் உங்களைப் பார்க்க முடியவதில்லையே? 

இந்த எண்ணம் எனக்கும் தோன்றிக்கொண்டேதான் இருந்தது. எனக்கான ரசிகர்களை நான் விட்டுவிடக் கூடாது என நினைக்கிறேன். முடிந்தவரை இதைச் சரிசெய்ய முயற்சிப்பேன். ‘கோமாளி’ இந்தக் குறையைத் தீர்க்கும் என்று என்னால் சொல்ல முடியும்.

‘தனி ஒருவன் 2' பற்றிய தகவல் வெளியானதுடன் அப்படியே இருக்கிறதே?

முக்கியமான படம் ஒன்றுக்காக ‘கெட்டப் சேஞ்ச்’ செய்து நடிக்கவுள்ளேன். அண்ணனோ ‘என் கதையில் நீயொரு காவல்துறை அதிகாரி. இந்தக் கெட்டப் அதுக்குப் பொருந்தாது. அந்தப் படத்தை முடிச்சுட்டு வா, பண்ணலாம்' என்றார். அதனால் கொஞ்சம் தள்ளிவைச்சிருக்கோம். அவ்வளவுதான். 2020-ல் உறுதியாகத் ‘தனி ஒருவன் 2'ஐத் தொடங்குகிறோம்.

தப்பான படத்தில் நடித்துவிட்டோம் என வருத்தப்பட்டதுண்டா?

மூன்று, நான்கு படங்களைச் சொல்லலாம். அதை வருத்தப்பட்டேன் என்று சொல்வதைவிட, பாடமாகத்தான் பார்க்கிறேன். புதிதாகத் தவறு பண்ணலாம், செய்த தவறையே மீண்டும் செய்வதுதான் மிகப் பெரிய தவறு என நினைப்பேன். ஒவ்வொரு தவறிலிருந்தும் கற்றுக் கொண்டேதான் இருக்கிறேன்.

இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகிவிட்டீர்கள். காதல் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்கலாம் என்று முடிவு எடுத்துள்ளீர்களா?

குழந்தை பிறந்தவுடன் சமூக அக்கறை என்றெல்லாம் இல்லை. இந்த உலகத்திலிருக்கும் குழந்தைகளை மனதில் வைத்தே, படம் பண்ணுகிறேன், கதை கேட்கிறேன். என்னைப் பார்த்து என் மகன்கள் கேள்வியெல்லாம் கேட்க மாட்டார்கள். நான் நடித்த படங்களில் சில படங்களை நீ பார்க்காதே’ என்று மூத்தவனிடம் சொல்லியிருக்கிறேன். அதில் ‘மிருதன்' படமும் ஒன்று. ஆனால் ‘டிக்:டிக்:டிக்’ படத்தில் அவனையே நடிக்க வைத்தேன். என்ன படம் நடித்தாலும் தணிக்கைச் சான்றிதழ் என ஒன்று இருக்கிறதே. அதனால் பிரச்சினையில்லை. சமீபகாலமாக ‘லிப் –லாக்’ முத்தக் காட்சிகள் வேண்டாம் என தவிர்த்துவருகிறேன்.

திரையுலகில் நடக்கும் பிரச்சினைகளிலிருந்து ஜெயம் ரவி விலகியே இருப்பதாகத் தெரிகிறதே?

பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்று கிடையாது. யாருக்கும் தெரியாமல்தான் தலையிடுவேன். மைக் பிடித்துப் பேசமாட்டேன்.எப்போதுமே சினிமாவில் ஒற்றுமையில்லை என்று சண்டை போட்டுக்கொண்டிருக்கக் கூடாது. அதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு குடும்பமாக இருக்கும்போது, அது வெளியே தெரியக்கூடாது என நினைக்கிறேன். அதை வெளியே பேசி அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஐடி கம்பெனிகளில் பிரச்சினை வந்தால், அவர்கள் என்ன மேடை போட்டா பேசுகிறார்கள். சினிமாவில் மட்டும் ஏன் என்று தெரியவில்லை.

அண்ணன் வழியில் எப்போது சினிமா இயக்கம்?

‘கோமாளி' படத்தில் என்னோடு யோகி பாபு படம் முழுக்க வருகிறார். அதனால் அவருடன் ரொம்பவே நட்பாகிவிட்டேன். என்னிடம் இருந்த காமெடி கலந்த கதையொன்றை அவரிடம் சொன்னபோது, ரொம்பப் பிடித்துவிட்டது. பண்ணலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.தற்போது நான்கு படங்கள்வரை கமிட்டாகிவிட்டேன். அவரும் நானும் ப்ரீ ஆனதும் பண்ணிடுவோம்.

‘கோமாளி' என்ன மாதிரியான படம், இதில் உங்களுக்கு எத்தனை தோற்றங்கள்?

தண்ணீரை பாட்டிலில் அடைத்து கடைச் சரக்காக மாற்றி விற்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை விற்கப் போகிறோம் என்று யாராவது சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா? ‘எல்லா உயிர்களுக்கும் பொதுவான இயற்கையை ஏன்டா விற்கிறீங்கள் என்று ஒருவன் கேட்டால் அவன் சமூகத்துக்குக் கோமாளியாக தெரிகிறான். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் லீட் கேரக்டர். காமெடி, அரசியல், எமோஷனல் என அனைத்துமே படத்தில் இருக்கிறது.

இன்று தமிழ்நாடு இருக்கும் நிலைமையில் எப்படிப்பட்ட கதையைத் தேர்வு செய்தாலும் சமூகம், அரசியல் என எதுவுமே இல்லாமல் படம் பண்ண முடியாது. இரண்டுமே இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்றால் பேண்டஸி படங்கள்தான் எடுக்க வேண்டும். படத்தில் எனக்கு ஐந்து கெட்-அப். மீதமுள்ள அனைத்துமே பட விளம்பரத்துக்காகப் பண்ணியதுதான். பள்ளித் தோற்றம், மருத்துவமனை தோற்றம், வழக்கமான தோற்றம், கொஞ்சம் ஸ்டைலிஷ்ஷான தோற்றம், வயதான தோற்றம். இவ்வளவுதான் கெட்டப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x