Published : 01 Aug 2019 10:17 AM
Last Updated : 01 Aug 2019 10:17 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 88: அசைவில் உலகம் அது இது ஆகும்

கரு.ஆறுமுகத்தமிழன் 

காரணம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நிகழ்வதில்லை. எண்ணெய் காரியம் என்றால் எள் அதன் காரணம்; பானை காரியம் என்றால் மண் அதன் காரணம். நல்லது. உலகம் காரியம் என்றால், யார் அதன் காரணம்? சமய நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள் என்று எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இது அவ்வளவு எளிதாக விடை சொல்கிற கேள்வி அல்ல.

காரண காரியம்

காரண காரியக் கொள்கையை ஒரே மாதிரியாக எல்லோரும் ஏற்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. டேவிட் யூம் (David Hume) என்னும் மெய்யியலாளர் மறுக்கிறார். இரண்டு நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்கின்றன என்பதால் நிகழ்வு-1 காரணம் என்றும், நிகழ்வு-2 காரியம் என்றும் எப்படிச் சொல்ல முடியும்? அவை அடுத்தடுத்து நிகழ்கின்றனவே தவிரக் காரண-காரியமாக நிகழவில்லை என்கிறார்.
காரண-காரியத் தொடர்பை ஏற்காதவர்களை விடுவோம்; ஏற்பவர்களிடம் வருவோம். உலகம் காரியம்; கடவுள் காரணம்—ஏற்பார்களா எல்லோரும்? இப்போதும் சிலர் ஏற்கமாட்டார்கள். உலகம் காரியம் என்றால்தானே அதற்குக் காரணமாக ஒரு கடவுள் தேவை? உலகம் காரியமும் அல்ல; கடவுள் காரணமும் அல்ல என்று போய்விடுவார்கள்.

அப்படியென்றால் அது எப்படி வந்தது? உலகம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால்தானே எப்படித் தோன்றியது என்று கேட்பீர்கள்? உலகம் தோன்றவே இல்லை; அழியப்போவதும் இல்லை; என்றென்றும் நிலையாக நிற்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?
ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள்? உலகத்தைப் படைத்தது கடவுள்தான் என்று ஒப்புக்கொள்வதில் இவர்களுக்கு என்ன சிக்கல்? உலகத்தைப் படைத்தது கடவுள்தான் என்றால், உலகம் ஏன் இவ்வளவு துக்கமும் துயரமும் நிரம்பியதாக இருக்கிறது? கடவுள் உலகத்தை ஏன் மகிழ்ச்சிமயமாகப் படைக்கவில்லை என்ற கேள்வி வரும். அதுதான் சிக்கல்.

உலகும் வாழ்வும் மாயமா?

இவர்களை விடுங்கள்; இவர்களாவது உலகம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள். இன்னும் ஒரு குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் உலகம் என்று ஒன்று இருப்பதையே ஒப்புக்கொள்வதில்லை. உலகம் என்று ஒன்று இருப்பதுபோலத் தோன்றுகிறதே ஒழிய, உண்மையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை; இந்த உலகம், உலகத்தில் இருப்பதாகத் தோன்றுகிற ஏற்றத்தாழ்வுகள், நிகழ்வதாகத் தோன்றுகிற சமூக அநீதிகள், கல்வி உரிமை, வாழ்வுரிமை எல்லாமே பொய்; வெறும் கனவு.

உலகே மாயம்; வாழ்வே மாயம்; நிலை ஏது, நாம் காணும் சுகமே மாயம். எல்லாமே மாயம் என்றால் பிறகு என்னதான் இருக்கிறது? பிரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. பிரம்மம் என்பது என்ன? அது நீயே ஆகிறாய் என்று முடிப்பார்கள். இவர்களுக்கு என்ன சிக்கல்? உலகத்தைக் கடவுள் படைத்தார் என்றால் எதிலிருந்து படைத்தார் என்ற கேள்வி வரும். ஏதோ ஒன்றிலிருந்து படைத்தார் என்றால், அந்த ஏதோ ஒன்று கடவுளுக்குச் சமமான உண்மை என்று கொள்ளவேண்டி வரும். அதுதான் சிக்கல்.

இனி உலகைக் காரியம் என்றும் கடவுளைக் காரணம் என்றும் ஒப்புக்கொள்ளும் தரப்புகளுக்கு வருவோம். உலகத்தைக் கடவுள்தான் படைத்தார் என்பதில் ஏதும் மறுப்பில்லை. ஆனால் எதிலிருந்து படைத்தார்? ஒரு தரப்பு சொல்கிறது: தனக்குள்ளிருந்தே படைத்தார். தனக்குள்ளிருந்து எப்படிப் படைக்க முடியும்? வலை பின்னத் தேவையான நூலைச் சிலந்தி தனக்குள்ளிருந்தே உமிழ்வதில்லையா? அதைப்போல, தனக்குள்ளிருக்கும் உலகத்தை உமிழ்ந்து உலகத்தை உருவாக்கினார் கடவுள்.

கடவுள் தன்னிலிருந்தே உலகத்தைப் படைத்தார் என்று கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது: கடவுள் கருத்துப்பொருள். கருத்துப் பொருளிலிருந்து உலகம் என்கிற சடப்பொருள் எவ்வாறு உருவாக முடியும்? பானை மண்ணிலிருந்து வரமுடியும்; மனிதனிலிருந்து வர முடியுமா? மனிதன் மண்ணைக் கொண்டு பானை செய்யலாமே தவிரத் தன்னைக் கொண்டு செய்ய முடியுமா?

காரணங்கள் மூன்று

ஒரு காரியத்துக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும் என்று கொள்வதால்தான் இந்தச் சிக்கல் நேர்கிறது. ஒரு காரியத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்று பங்கிட்டுக் கொடுத்துவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடுகிறது.
ஒரு காரியம் உருவாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன: முதற்காரணம், துணைக்காரணம், செயற்காரணம். எடுத்துக்காட்டாக, பானை என்னும் காரியத்தை உருவாக்குவதில் பங்காற்றிய காரணங்கள் இவை: மண் முதற்காரணம், திரிகையும் திரிகையைச் சுழற்றிவிடப் பயன்படும் குச்சியும் துணைக்காரணங்கள், குயவன் செயற்காரணம். உலக உருவாக்கத்திலும் அவ்வாறு மூன்று காரணங்கள் தொழிற்படுகின்றன என்கிறது சைவ சித்தாந்தம்: மாயை என்னும் மூலமுதற் சடப்பொருள் முதற்காரணம், உயிர்களின் வினைகளும் இறைவனின் அருளும் துணைக்காரணம், இறைவன் செயற்காரணம்.

இந்த விடை எல்லாச் சிக்கல்களையும் தீர்த்துவிடுகிறது. உலகத்தைப் படைத்தவன் இறைவன் என்றால் ஏன் அதை மகிழ்ச்சிமயமானதாகப் படைக்கவில்லை? ஏனென்றால் உலகத்தை இறைவன் தன் விருப்பத்திற்கு ஏற்பப் படைக்கவில்லை; உயிர்களின் வினைகளுக்கு ஏற்பவே படைத்தான். ஆகவே ஏற்றத்தாழ்வு. இறைவன் உலகத்தைத் தன்னிலிருந்து படைக்கவில்லை, மாயை என்னும் சடப்பொருளிலிருந்தே படைத்தான் என்றால், அந்தப் பொருளும் இறைவனுக்குச் சமமான உண்மை ஆகிவிடாதா? ஆகாது.
ஏனென்றால் இறைவன் அறிவுப்பொருள்; மாயை சடப்பொருள்.

குயவனும் மண்ணும் சமமா?
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துஉற்றது எல்லாம் வனைவன்;
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது ஆமே.
(திருமந்திரம் 443)

மண்ணைக் குழைத்துத் திரிகையில் ஏற்றிக் கற்பனை செய்த வடிவங்களை எல்லாம் விற்பனை நோக்கி வடிக்கும் குயவனைப்போல, உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப உலகத்தை வடிக்கிறான் இறைவன் என்று படைப்பின் சிக்கெடுத்துக் கொடுக்கிறார் திருமூலர். இனி இதன் தொடர்பில் மற்றொன்று: உலகத்தைப் படைத்தது யார்? உலகம் எப்படி வந்தது என்று புத்தரிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: ஒரு மனிதன் நஞ்சு தோய்ந்த அம்பினால் தாக்கப்பட்டான்.

அருகில் இருந்தவர்கள் அம்பை நீக்கி மருத்துவம் செய்ய முனைந்தார்கள். அடிபட்ட மனிதன் அவர்களைத் தடுத்து, ‘இந்த அம்பை அடித்தவனின் குலம் கோத்திரம் அறியாமல், அவன் கறுப்பனா வெளுப்பனா என்று அறியாமல், அம்பும் வில்லும் எதனால் செய்யப்பட்டவை என்று அறியாமல் மருத்துவம் செய்துகொள்ள ஒப்ப மாட்டேன்’ என்று சொன்னால் அவனை என்னவென்று சொல்வீர்கள்?
துக்க நீக்கம் அறிவுடைமையா அன்றி விசாரணை அறிவுடைமையா? விசாரணை அறிவுடைமைதான்; ஆனால் துக்க நீக்கத்துக்காகவே விசாரணைகள். விசாரியுங்கள்.

(தெளிந்து விசாரிப்போம்) 
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x