Published : 31 Jul 2019 11:19 AM
Last Updated : 31 Jul 2019 11:19 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: இயற்கைக்குத் திரும்புவோம் 

இதோ, தெருமுனை வரை போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்புவார் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். நமக்கெல்லாம் அதிகபட்சம் போனால் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஆனால், அவரோ இருட்டிய பிறகுதான் திரும்பி வருவார். தெருமுனைக்குப் போனீர்களா அல்லது கப்பல் ஏறி பக்கத்து நாட்டுக்குப் போய்விட்டீர்களா என்று கேட்டால், புன்னகையோடு விளக்கம் அளிப்பார். 

நடந்துகொண்டிருந்தேனா? பத்தடி தள்ளி ஒரு மரம். இருப்பதிலேயே இளைத்த கிளை ஒன்று இருக்குமே, கவனித்திருக்கிறீர்களா? முழு மரமும் அமைதியாகத் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கும்போது இந்தக் கிளை மட்டும் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துபோல் தெற்கில் பாயும் ஓடையை நோக்கி நீண்டிருக்கும். ஓடையா, ஓடைக்காற்றா யார் செய்த மாயம் என்று தெரியவில்லை. இன்று அந்தக் கிளைக்கு மட்டும் உயிர் வந்திருப்பதைப் பார்த்தேன். நேற்றுவரை இல்லாத இளம்பச்சை இலைகள் அரும்பத் தொடங்கிவிட்டன. 

இந்தக் கிளையிலிருந்துதான் மரத்துக்கும் காட்டுக்கும் இங்கிலாந்துக்கும் உலகுக்கும் பசுமை படர்ந்து செல்லப் போகிறதா? 

யோசித்தபடியே மலைச்சரிவுக்கு போனேனா? மஞ்சள் நிறத்தில் பேரரளிப் பூக்கள் பூத்துக் கிடந்ததைப் பார்த்தேன்! ‘என் பணி பூத்துக்கிடப்பதே’ என்று ஒரு குழந்தையைப்போல் கபடமின்றி சிரிக்கும் பேரரளியை எப்படி வெறுமனே கடந்து போக முடியும்? அப்படியே புல்வெளியில் அமர்ந்துவிட்டேன். ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டு மாலை வாக்கில் எழுந்திருக்கும் நேரம் பார்த்தா ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம் பறந்துவர வேண்டும்? 

அதெல்லாம் கிடக்கட்டும் கவிஞரே, காலையிலிருந்து சாப்பிடவில்லையே, பசியில்லையா என்று கேட்டால் வோர்ட்ஸ்வொர்த் விழிப்பார். அட, மறந்தேவிட்டேனே! போகட்டும். தெருமுனைக்கு எதற்காகப் போனீர்கள்? அந்த வேலையாவது முடிந்ததா என்றால் இன்னமும் விழிப்பார். அட, ஆமாம். எதற்குப் போனேன்? 

வோர்ட்ஸ்வொர்த்தை நன்கு அறிந்தவர்களுக்கு அவர் இப்படித்தான் என்று தெரியும். ஒரே ஓர் எறும்பு அல்லது செடியைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டால் போதும், சில மணி நேரத்துக்கு அவரை அந்த இடத்தில் கட்டிப்போட்டுவிடலாம். என்னைப் போலவே அந்த மேகமும் தனியாக அலைந்துகொண்டிருக்கிறது பார்த்தீர்களா என்பார். இந்த முள்ளம்பன்றி கடந்த மூன்று மணி நேரமாக என்னவெல்லாம் செய்தது தெரியுமா என்று குதூகலிப்பார்.

அவருடைய ஆர்வத்தைக் கிளறிவிட உதிர்ந்த சருகுகள்கூடப் போதும். விடிகாலையிலிருந்து ஏரிக்கரையில் உட்கார்ந்திருக்கிறீர்களே. இன்னும் பார்த்து முடிக்கவில்லையா என்றால் முறைப்பார். முடிப்பதா? எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் அப்போதிலிருந்து தவித்துக்கொண்டிருக்கிறேன்! 

பள்ளி மாணவராக இருந்தபோதே வோர்ட்ஸ்வொர்த்தின் முதல் கவிதை வெளிவந்துவிட்டது. இறக்கும்வரை எழுதிக்கொண்டிருந்தார். ஏரி, அருவி, மேகம், இலை, கிளை, மரம், செடி, பூ, பூவின் இதழ், இதழின்மீது ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பனித்துளி என்று தான் கண்டு வியக்கும் ஒவ்வொன்றையும் கவிதைக்குள் பாதுகாத்தார். பனித்துளியில் என்ன இருக்கிறது என்பவர்களே, அருகில் வந்து பாருங்கள். இந்தப் பனித்துளிக்குள் முழு உலகும் புலப்படுகிறதா, இல்லையா? 

கனவு மொய்க்கும் கண்களோடு வாழ்நாள் முழுக்க வோர்ட்ஸ்வொர்த் எழுதிக் குவித்ததற்கு அவர் வாழ்ந்த 18, 19-ம் நூற்றாண்டு சூழலும் ஒரு காரணம். மேற்கத்திய உலகைத் தொழில் புரட்சி புரட்டிப் போட்ட காலம் அது. இயந்திரங்கள் மனிதர்களோடு போட்டிப் போட ஆரம்பித்திருந்தன. அறிவியல் பெரும் வளர்ச்சியடைந்தது. தொழில்நுட்பமும். இந்த மாற்றங்கள் மனிதர்களுக்கு அளவுகடந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தன. இயற்கையை வென்றுவிட்டோம், எல்லாவற்றையும் புரிந்துகொண்டுவிட்டோம், உலகை வசப்படுத்திவிட்டோம் என்று அவர்கள் ஆரவாரத்துடன் முழங்க ஆரம்பித்தனர். 

வோர்ட்ஸ்வொர்த் காதுகளை மூடிக்கொண்டார். நண்பர்களே நிலாவுக்குச் செல்லுங்கள், நெப்ட்யூனில் வீடு கட்டிக்கொள்ளுங்கள், உணவு ஊட்டுவதற்குகூட இயந்திரம் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள். ஆனால், தரையில் வாழும்வரை பூமியை மதிக்கக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா? இயற்கையை வெல்வது கிடக்கட்டும்; முதலில் எதற்காக இயற்கையோடு மோத வேண்டும்? 

அதென்ன உங்கள் எதிரியா? உங்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரே ஒரு புல்லின் இதழையாவது உங்களால் உருவாக்கிக் காட்ட முடியுமா? உங்கள் இயந்திரங்களைக்கொண்டு ஒரே ஓர் இலைக்காவது வசந்தத்தைக் கொண்டுவந்து சேர்க்க முடியுமா? 

ஏரிகளையும் மரங்களையும் புல்வெளிகளையும் இவற்றை எல்லாம் நம்பி வாழும் உயிரினங்களையும் விழுங்கிவிட்டு, கறுத்த புகையை வெளியில் விடும் ஆலைகளை உருவாக்கிக்கொண்டே போகிறீர்கள். இதுதான் உங்கள் சாதனையா? இயற்கையை அழித்து, அதனிடத்தில்தான் உங்கள் அறிவியலை நிறுவப் போகிறீர்களா?

அப்படி செய்யச் சொல்லி அறிவியல் உங்களிடம் கேட்டுக்கொண்டது உண்டா? ஒரு மலையை உடைத்துப் பெயர்த்துதான் ஓர் ஆலையை அமைக்க முடியும் என்றால் அந்த ஆலை எனக்கு வேண்டாம். ஒரு காட்டை அழித்துவிட்டு அங்கே இயந்திரங்களை வளர்க்கப் போகிறீர்கள் என்றால் அந்த இயந்திரங்களை நான் வெறுப்பேன். 

ஒவ்வொரு மீனும் சிறிதளவு கடலைச் சுமந்துகொண்டிருக்கிறது. மீனை வெளியில் எடுத்தாலும் அதற்குள்ளிலிருக்கும் கடலை நீங்கள் வெளியில் எடுக்க முடியாது. ஒவ்வொரு விலங்குக்குள்ளும் ஒரு காடு உறங்கிக்கொண்டிருக்கிறது. அது அதன் அடையாளம். உங்கள் அடையாளம் என்ன? எதை நீங்கள் உங்களுக்குள் பத்திரப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்? இயந்திரத்தையா? 

இன்னும், இன்னும் என்று அடங்கா வேட்கையோடு நீங்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க அச்சமாக இருக்கிறது. காடு, அருவி, கடல், மலை என்று முழு பூமியையும் உருட்டித் தின்றாலும் வளர்ந்துகொண்டே போகிறது உங்கள் பசி. 

எனக்குப் புல் போதும். ஒரே ஒரு மரத்தின் ஒரே ஒரு கிளை போதும். ஒரே ஒரு மலரின் ஒரே ஓர் இதழ் போதும். கடலின் ஒரு துளி போதும். பஞ்சுபோல் கொஞ்சும் மேகம். என்னைத் தீண்டும் ஒரு விநாடி தென்றல். ஒரே ஒரு மழைத்துளி. ஒரே ஒரு மலை முகடு. ஓர் எறும்பு. ஒரு முள்ளம்பன்றி. ஒரு முயல். ஒரே ஒரு பூமி. 

ஒரே ஒரு மனிதன். அந்த மனிதனும் இயற்கையின் ஓரங்கமே. எனக்குள் ரத்தமும் சதையும் நரம்பும் மட்டுமல்ல; மழையும் மேகமும் மீனும் பறவையும் மலையும் பேரரளிப்பூவும் நிறைந்திருக்கின்றன. இலையுதிர் காலமும் வசந்தமும் எனக்குள் நிகழும் மாயங்கள். எனக்குள் பெய்கிறது மழை. 

கதிரவன் எனக்குள் ஒளி பாய்ச்சுகிறான். எனக்குள் உறங்குகிறது கடல். என் இதயத்துக்குப் பக்கத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறேன் பூமியை. நம் எல்லோருடைய பசியையும் தீர்க்க இயற்கை போதும். ஆனால், இயந்திரம் உண்ணத் தொடங்கினால் உலகையே கொடுத்தாலும் போதாது. 

- மருதன், எழுத்தாளர் | தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x