Published : 31 Jul 2019 11:19 AM
Last Updated : 31 Jul 2019 11:19 AM

கதை: வானத்தில் மிதக்கும் பந்து

தாய்க் கரடியும் குட்டிக் கரடியும் மாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தன. அன்று பவுர்ணமி தினம் என்பதால் நிலா ஒரு வெள்ளைப் பந்துபோலக் காட்சி அளித்தது. குட்டிக் கரடிக்கு அதைப் பிடித்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 

உடனே தன் தாயிடம், ”அம்மா, அந்தப் பந்து எனக்கு வேணும். அதைக் எடுத்துக் கொடுங்க” என்று கேட்டது. 

குட்டி கேட்டவுடன் தாய்க் கரடிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “இதோ இப்பவே ஒரு பெரிய மரத்து மேலே ஏறி, அந்தப் பந்தை உனக்குப் பிடிச்சித் தர்றேன்” என்றது.

வேகமாக மரத்தில் ஏறியது. உச்சிக் கிளையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் நிலாவைத் தொட முயற்சி செய்தது. எவ்வளவு முயன்றும் நிலாவைத் தொட முடியவில்லை. வருத்தத்துடன் கீழே இறங்கி வந்தது தாய்க் கரடி. 

”என்னம்மா, பந்தை எடுக்க முடியலையா?”

“அது ரொம்ப உயரத்திலே இருக்குடா. நாளைக்கு எப்படியாவது முயற்சி செய்து அதை உனக்குப் பிடிச்சித் தர்றேன், சரியா?”

“சரிம்மா.”

மறுநாள் எல்லோருக்கும் உதவி செய்யும் காகத்திடம் சென்று, உதவி கேட்டது தாய்க் கரடி. 

“என்ன உதவி சொல்லு, முடிந்தால் கட்டாயம் உதவறேன்” என்றது காகம்.

“நேற்று இரவு வானத்திலே ஒரு பெரிய வெள்ளைப் பந்தைப் பார்த்தேன். அது வேண்டும் என்று என் செல்லக் குட்டி கேட்கறான். உன்னால்தான் பறக்க முடியுமே, அதைக் கொண்டுவந்து என் மகனிடம் கொடுக்க முடியுமா?” என்று கேட்டது தாய்க் கரடி. 

“சரி, இப்ப அந்தப் பந்து எங்கே இருக்கு?”

“ராத்திரிதான் பார்த்தேன். இன்னைக்கு ராத்திரி பார்த்தால் பிடிச்சுக் கொடு.”

அன்று மாலை வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே வந்துவிட்டது நிலா. உடனே தன்னால் முடிந்த உயரத்துக்குப் பறந்து சென்று, அந்த நிலாவைப் பிடிக்க முயற்சி செய்தது காகம். ஆனால், நிலாவைப் பிடிக்க முடியுமா! 

“எவ்வளவோ முயற்சி செய்துட்டேன், கரடி. என்னால் அந்தப் பந்தைப் பிடிக்க முடியலை. நாளை கழுகு அண்ணனிடம் பந்தை எடுத்துக் கொடுக்கச் சொல்வோம். அவன்தான் மிகவும் உயரமாகப் பறப்பான்” என்றது காகம்.

மறுநாள் கரடியும் காகமும் கழுகைச் சந்தித்தன. இரவில் தெரியும் அந்தப் பந்தைக் கொண்டு வந்து தரும்படி வேண்டுகோள் விடுத்தன. 

”நானும் நீண்ட காலமாக அந்தப் பந்தைப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருநாளும் அதைப் பிடிக்கணும்னு நினைச்சதில்லை. உன் மகனுக்குத் தோன்றியிருக்கு. சரி, அந்தப் பந்தை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமாக எனக்குத் தெரியலை. முயற்சி செய்றேன்” என்றது கழுகு.

காகமும் கரடியும் நம்பிக்கையோடு காத்திருந்தன. 

நிலாவைப் பிடிக்கும் முயற்சியில், வழக்கமான உயரத்தைத் தாண்டிப் பறக்க ஆரம்பித்தது கழுகு. மேலே செல்லச் செல்ல நிலாவும் உயரமாகச் செல்வதுபோல் இருந்தது. களைப்படைந்த கழுகு, கீழே வந்து சேர்ந்தது. 

“ஐயோ… என்னால் அந்தப் பந்தைப் பிடிக்க முடியலை. என்னை மன்னிச்சிடு. இறக்கை இல்லாமலே பந்து என்னைவிட உயரமாகப் பறக்குது” என்றது கழுகு.

இந்த விஷயம் காடு முழுவதும் பரவியது. எங்கும் பந்து பற்றிய பேச்சாகவே இருந்தது. அமாவாசை வந்தது. நிலா காணாமல் போனது. உடனே அந்த வெள்ளைப் பந்தை எல்லோரும் தேடத் தொடங்கினர். சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வானத்தில் முழு நிலா தோன்றியது. அனைவரும் அதை எப்படிப் பிடிப்பது என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.

அன்று இரவு குரங்கு மரத்தின் மீது உட்கார்ந்துகொண்டிருந்தது. அப்போது நிலாவின் பிம்பம் அங்கிருந்த குளத்தின் மீது தெரிந்தது. பந்து நீரில் மிதப்பதாக எண்ணி மகிழ்ந்தது குரங்கு. காட்டுக்குள் ஓடியது. 

”கண்டுபிடிச்சிட்டேன்… கண்டுபிடிச்சிட்டேன்…” என்று கத்திக்கொண்டே சென்றது. 

“நீ பெரிய விஞ்ஞானி. அப்படி என்ன கண்டுபிடிச்சே?” என்றது யானை. 

“உயரத்தில் இருந்த வெள்ளைப் பந்து, இப்போ குளத்துக்குள் மிதக்குது” என்றது குரங்கு. 

விலங்குகளும் பறவைகளும் குளத்தை நோக்கி ஓடின.

“நானே தண்ணீருக்குள் குதித்து எடுத்துட்டு வரேன்” என்று குளத்தில் இறங்கியது குரங்கு. உடனே நீர் கலங்கி, நிலா கரைந்து போனது. 

 எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்தது.

“என்னடா இந்தப் பந்து நம்மை ரொம்பப் படுத்துதே. இதை எப்படியாவது இன்னைக்குப் பிடிச்சே ஆகணும்” என்று அனைவரும் மீண்டும் யோசித்தனர்.

“ஆமை ரொம்பப் பொறுமையானவன். அவனை மெதுவா தண்ணீருக்குள்ளே இறக்கி விட்டு, அந்தப் பந்தைக் கரைக்குத் தள்ளிக்கொண்டு வரச் சொல்லலாம். கரைக்கு வந்ததும் அதை நாம எடுத்துடலாம்” என்றது காகம்.

அனைவரும் இதை ஒப்புக்கொள்ள, ஆமையிடம் விஷயத்தைச் சொன்னர்கள். அது மெதுவாக தண்ணீருக்குள் இறங்கி உள்ளே சென்றது. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. பிம்பத்தை யாரால் பிடிக்க முடியும்?

உங்களில் யாருக்காவது நிலாவைப் பிடிக்க முடிந்தால், அதைக் கரடிக் குட்டியிடம் கொடுத்துவிடுங்கள். 

- ஆர். வி. பதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x