Published : 30 Jul 2019 10:52 AM
Last Updated : 30 Jul 2019 10:52 AM

சேதி தெரியுமா? - அழிவின் விளிம்பில் 7,000 புதிய உயிரினங்கள்

போரிஸ் ஜான்சன்

ஜூலை 19: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் மேலும் 7,000 உயிரினங்கள் சேர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் (IUCN). அத்துடன், ஐ.யு.சி.என். சிவப்புப் பட்டியலில் இருக்கும் 1,05,000 உயிரினங்களில் 27 சதவீதமானவை (28,338 உயிரினங்கள்) அழியும் தறுவாயில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சந்திரயான்-2 விண்கலம் வெற்றி

ஜூலை 22: சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. எம்கே III-எம்1 செயற்கைக்கோளில் ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3,840 கிலோ எடைகொண்ட சந்திரயான்-2 விண்கலத்துடன்  ‘ஆர்பிட்டர்’, ‘லேண்டர்’ (விக்ரம்), ‘ரோவர்’ (பிரக்யான்) ஆகிய மூன்று கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. செப்டம்பர் 7 அன்று சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள ‘ரோவர்’ நிலவில் மென்மையாகத் தரையிறங்கவிருக்கிறது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் மென்மையான தரையிறக்கத்தைச் சாத்தியப்படுத்திய நான்காம் நாடாக இந்தியா திகழும். 

பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஜூலை 24: பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். அக்டோபர்  31-ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டியதை உறுதிப் படுத்தும் பொறுப்புடன் அவர் பதவியேற்றிருக்கிறார். அவர் தலைமையேற்ற பிறகு, பழைய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்ட புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

தகவல் அறியும் சட்டத்திருத்த மசோதா 

ஜூலை 25: தகவல் அறியும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்புக்கும் வெளிநடப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டது. தகவல் அறியும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஜூலை 22 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் சட்டத்தை (2005) முற்றிலும் நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.  

கர்நாடக முதல்வரானார் எடியூரப்பா

ஜூலை 26: கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையில் பதினான்கு மாதங்களாக நடைபெற்றுவந்த காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி ஜூலை 23 அன்று  கவிழ்க்கப்பட்டது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. அதனால், ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் முதல்வராக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா பதவியேற்றார்.  

54% பொறியியல் இடங்கள் காலி

ஜூலை 29: தமிழ்நாட்டின் பதினொரு அரசுக் கல்லூரிகள், இரண்டு தனியார் கல்லூரிகளில் மட்டுமே பொறியியல் படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்காக (TNEA) நடைபெற்ற நான்கு சுற்று ஆன்லைன் கலந்தாய்வில், 479 பொறியியல் கல்லூரிகளின் 54 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. 16 தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூடச் சேரவில்லை. மொத்தம் இருந்த 1,67,101 பொறியியல் இடங்களில் 76,364 (46%) இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. 90,737 (54%) இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

எஸ். ஜெயபால் ரெட்டி மறைவு

ஜூலை 28: முன்னாள் மத்திய அமைச்சரும், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ். ஜெயபால் ரெட்டி உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 77. அவர் மூன்று முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். 

இந்தியாவில் 2,967 புலிகள்

ஜூலை 29: சர்வதேசப் புலிகள் நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ‘புலிகள் கணிப்பு அறிக்கை’யை வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 2,967 புலிகள் இருக்கின்றன. உலகின்  70 சதவீதத்துக்கும் அதிகமான புலிகள் இந்தியாவில் வசிக்கின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் புலிகள் வளர்ச்சி சதவீதம் 8.32 சதவீதமாக இருக்கிறது.

- தொகுப்பு: கனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x