அந்த நாள் 43: சிக்கல்கள் நிறைந்த சொக்கநாதர் காலம்

அந்த நாள் 43: சிக்கல்கள் நிறைந்த சொக்கநாதர் காலம்
Updated on
2 min read

“திருமலை நாயக்கரைப் போல தனித்து இயங்கிய, புகழ்பெற்ற ஒரு மன்னர் இறந்த பிறகு நாயக்க வம்சத்துல அடுத்து யார் மன்னர் பொறுப்பேற்றாங்க, குழலி?”


“அவரது மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். ஆனா, துரதிருஷ்டவசமா அவரால நீண்ட காலத்துக்கு ஆட்சி புரிய முடியல. நாலே மாசத்துல காலமாகிட்டார், செழியன்.”

“ஓ! அப்புறம்?”

“பொ.ஆ. 1659-லயே இரண்டாம் முத்துவீரப்பனின் மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். நாயக்க மன்னர்களில் திருமலை நாயக்கருக்கு அடுத்தபடியா சொக்கநாத நாயக்கர் புகழ்பெற்றிருந்தார். 23 வருசம் ஆட்சிபுரிஞ்சார்.”

“பரவாயில்லையே, அவரோட ஆட்சில என்னவெல்லாம் நடந்துச்சு?”

“திருமலையைப் போல உறுதியான மன்னரா அவரால செயல்பட முடியல. ஆட்சிப் பொறுப்பை ஏத்தப்போ இளைஞரா இருந்ததால தளவாய், பிரதானி, ராயசம்னு முக்கியமான பதவில இருந்தவங்க, அவரோட ஆட்சி அதிகாரத்துல செல்வாக்கு செலுத்தினாங்க. செஞ்சிப் பகுதியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றிட்டார். தஞ்சைப் பகுதியும் பிஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான ஏகோஜியின் கட்டுப்பாட்டுக்குப் போயிடுச்சு.

ஏகோஜி வேற யாருமில்ல, மராட்டிய மன்னர் சிவாஜியின் தம்பிதான். பிஜப்பூர் சுல்தான் இறந்த பிறகு ஏகோஜியின் வம்சம் தஞ்சையை முழுவுரிமையோட ஆட்சி புரிஞ்சது. அதன் காரணமா மராட்டிய பண்பாட்டு அம்சங்களும் தமிழகத்துல பரவிச்சு. இந்த வம்சத்துல வந்தவர்தான் புகழ்பெற்ற தஞ்சை மன்னர் சரபோஜி.”

“மராட்டிய வம்சம் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். அவங்க காலத்துலதானே சாம்பார் வந்துச்சு, அதனால மறக்க முடியாது. ஆனா, சொக்கநாதர் காலத்துல மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதி சுருங்கிடுச்சு, இல்லையா?”

“அது மட்டுமில்ல. சொக்கநாதர் காலத்துல பெரும் பஞ்சம் ஏற்பட்டுச்சு. தமிழகத்தின் நெற்களஞ்சியம்னு சொல்லப்படுற தஞ்சை, திருச்சி போன்ற காவிரி பாயும் பகுதிகள்ல பஞ்சம் கடுமையா இருந்துச்சு. இதனால ஆயிரக்கணக்கானவங்க இறந்தாங்க. உயிர் பிழைக்க வேறு ஊர்கள்ல குடியேறினாங்க. 

திருச்சில இருந்தவங்க மதுரையிலும், ஒரு பிரிவு மக்கள் சென்னை மயிலாப்பூரிலும் குடியேறினாங்க. இந்தப் பின்னணில வறுமைல வாடின மக்களுக்கு உணவு, உடை கொடுத்த டச்சு வணிகர்கள், அவங்கள்ல பலரை ஐரோப்பிய நாடுகள்ல அடிமையா விக்கிற வழக்கமும் உருவாச்சு.”

“சொக்கநாதர் காலத்துல பிரச்சினைக்கு மேல பிரச்சினையா இருக்கே.”

“பிரச்சினைகளோட, அவரே இழுத்துப்போட்டு பல போர்களையும் புரிஞ்சார்.”

“மராட்டிய மன்னர் ஏகோஜி பத்தி சொன்னேன் இல்லயா. அவருக்கு முன்னாடி தஞ்சையை விஜயராகவ நாயக்கர் ஆண்டுக்கிட்டிருந்தார். அவர் சொக்கநாதருக்குப் பெண் தர மறுத்தார். காரணம், விஜயராகவ நாயக்கர் விஜயநகர அரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணதேவராயரின் ஊழியரோட வம்சத்துல வந்தவர் தானே சொக்கநாதர்னு நினைச்சதால, பெண் தர விஜயராகவ நாயக்கர் மறுத்தார். இதனால் விஜயராகவ நாயக்கர் மீது சொக்கநாதர் போர் தொடுத்தார்.”

“இதுக்கெல்லாம்கூட போர் நடந்திருக்கா?”

“நடந்திருக்கு. பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவின் படைத் தலைவன் வனமியான் மதுரை நாயக்கர்களுக்கு எதிரா போர் தொடுத்தார். அப்போ வனமியானுக்கு விஜயராகவ நாயக்கர் உதவியதால, இன்னொரு தடவையும் தஞ்சை மேல சொக்கநாதர் போர் தொடுத்தார். அதேபோல வனமியானுக்கு எதிரான போர்ல தனக்கு உதவாத திருமலைச் சேதுபதியோடவும் சொக்கநாதர் போரிட்டார். ஆனா, எந்தப் போர்லயும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலை, தோல்விதான் மிஞ்சிச்சு. விஜயராகவ நாயக்கர் மட்டும் இரண்டாம் முறை தோல்வியடைஞ்சார்.”

“தாத்தா திருமலை எல்லா போர்லயும் வென்றார். பேரன் சொக்கநாதரல அப்படி முடியல, இல்லையா?”
“கடைசி காலத்துல, ஆட்சிப் பொறுப்புல இருந்தவங்களாலேயே சொக்கநாதர் சிறைல அடைக்கப்பட்டார். 

பிறகு குதிரைப்படைத் தலைவரால விடுவிக்கப்பட்டு மீண்டும் நாட்டை ஆண்டார். விஜயநகரப் பேரரசோட கட்டுப்பாட்டுல இல்லாம திருமலை நாயக்கருக்கு அடுத்தபடியா சொக்கநாதர் ரொம்ப காலம் ஆட்சி நடத்தியிருந்தாலும் பிடிவாத குணம், பழிவாங்குதல், அவசர முடிவெடுப்பது போன்ற காரணங்களால உறுதியா ஆட்சி நடத்த முடியாமத் திணறினார்.”

“அதுக்கப்புறம் என்னாச்சு, குழலி?”

“கிளைமாக்ஸ் திருப்பம்போல, நாயக்க வம்சத்துலேயே முதல் ராணியா மங்கம்மாள் வந்தாங்க, செழியன்.”

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி,

பள்ளி வரலாற்றுப் பாடம்

- ஆதி வள்ளியப்பன்
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in