Published : 30 Jul 2019 10:52 AM
Last Updated : 30 Jul 2019 10:52 AM

வேலை வேண்டுமா? - உதவி சுற்றுலா அலுவலர் பணி

தமிழக அரசின் சுற்றுலா துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பதவியில் 42 காலியிடங்கள் முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

தகுதி

இப்பணிக்குச் சுற்றுலா, பயணத்தில் இளங்கலை பட்டப் படிப்பு படித்தவர்களும், ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலாவில் டிப்ளமா முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதோடு கூடுதலாகத் தமிழக அரசின் கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate course in Computer on Office Automation) அல்லது அதற்கு இணையாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். 

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.), பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் சுற்றுலா, பயணம் தொடர்பான பாடத்தில் இருந்து 200 கேள்விகளும் (300 மதிப்பெண்), பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும் (200 மதிப்பெண்) அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 500. 

தமிழ்வழிக்கு இட ஒதுக்கீடு

உரிய கல்வித் தகுதி உடைய பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மொத்தக் காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைத் தமிழ்வழியில் படித்திருந்தால் போதும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீட்டு வாரியான காலியிடங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம், சம்பளம் தொடர்பான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

நேரடியாக உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியில் சேருவோர் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1), சுற்றுலா அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம். சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவி சுற்றுலா அலுவலர் பணி அருமையான வாய்ப்பு.

எழுத்துத் தேர்வு: 29 செப்டம்பர் 2019 (காலை, பிற்பகல்)

தேர்வு நடைபெறும் ஊர்கள்: சென்னை, கோவை, மதுரை

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20 ஆகஸ்டு 2019

- ஜெ.கு.லிஸ்பன் குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x