Published : 30 Jul 2019 10:52 AM
Last Updated : 30 Jul 2019 10:52 AM

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: வெல்வது எப்படி?

பிறப்பு, இறப்புச் சான்று போன்ற அரசின் சான்றுகளையும் சேவைகளையும் யார் மூலமாக நாம் பெறுகிறோம்?

மக்களின் பிரச்சினைகள் யார் மூலமாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுமுகமாக நடைபெற வேண்டுமென்றால் யாரெல்லாம் தேவை ?

அரசுப் பொறுப்புகளில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளே இந்தப் பணிகளைச் செய்கிறார்கள்.

அரசு அதிகாரிப் பணி என்பது முக்கியமான, பொறுப்புமிக்க பணி. ஆட்சியர், துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பொறுப்புகளும் பதவிகளும் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளன. அரசின் இந்தப் பொறுப்புக்களை வகிப்பவர்களே மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு நாடி நரம்புகளாகச் செயல்படுகிறாரகள்.

தமிழக அரசுத் துறையில் இது போன்று அதிகாரிப் பணியில் அமர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். முறையாக முயன்றால் இரண்டே ஆண்டுகளில் ஓர் அரசு அதிகாரியாகிவிட முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரே வழிதான், படிக்க வேண்டும்.

எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்?

எந்த ஒரு போட்டித்தேர்வுக்கும், முந்தைய கேள்வித்தாள்கள் அளவுக்கு வேறு எவையுமே சரியாக வழிகாட்ட முடியாது. முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், எந்தெந்தப் பாடப் பிரிவுகளிலிருந்து கேட்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்து, இந்த ஆண்டுத் தேர்வுக்கான தயாரிப்பு முறையைத் தீர்மானிக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் எல்லாமே நேரடி கேள்விகள்தாம். அனைத்துக் கேள்விகளுமே பள்ளிப் பருவத்தில் படித்தவையாகவே இருக்கும். அவற்றை மீண்டும் நன்கு படிக்க வேண்டும். குரூப் 1 தேர்வைத் தவிர்த்து மற்ற தேர்வுகளுக்குத் தயார் செய்ய வேண்டுமென்றால் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான தமிழ்/ஆங்கிலப் பாடப்புத்தகங்களை நன்றாகப் படித்திருக்க வேண்டும். 

மேலும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களையும், 11, 12ஆம் வகுப்புகளில் தேர்வுப் பாடத்திட்டங்களுக்கு உரிய பாடங்களையும் படித்தால் போதும்.

அத்துடன், நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள் குறித்து அறிய மாதாந்திர, காலாண்டு, ஆறு மாதத் தொகுப்புக் கையேடுகள் சந்தையில் கிடைக்கின்றன. தமிழக அரசின் செய்தித் துறை மாதந்தோறும் வெளியிடும் ‘தமிழரசு’ (தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும்) இதழையும், மத்திய அரசின் ‘திட்டம்’, ‘Yojana’, ‘Kurukshetra’ போன்ற மாத இதழ்களையும் படித்துக் குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேண்டாம்...தேர்வு பயம்!

பல லட்சம் பேர் எழுதும் தேர்வில் நாம் எப்படி வெற்றிபெற முடியும் என்கிற பயம் பலருக்கும் இருக்கும். எத்தனை லட்சம் பேர் எழுதினாலும், கடினமாக உழைக்கக்கூடியவர்கள் மிகக் குறைவு. ஆகவே, உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி எளிது.

பள்ளி, கல்லூரியில் எடுத்திருக்கும் மதிப்பெண்ணை வைத்துப் போட்டித் தேர்வுகளை மதிப்பிட வேண்டாம். கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றவர்கள்கூடப் போட்டித் தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சியடையாமல் போனது உண்டு.

அதேபோல, குழுவாகப் படிப்பதுதான் போட்டித் தேர்வுக்கான ஆரோக்கியமான படிப்பு முறை. குழுவாக இணைந்து படிக்கும்போது மற்றவர்கள் மூலமாக நிறையத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

என்னென்ன பணிகள் கிடைக்கும்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – I தேர்வில் வெற்றிபெற்றால் துணை ஆட்சியர் (Deputy Collector), துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP), துணை இயக்குநர் - பஞ்சாயத்து (AD-Panchayat) போன்ற உயர்மதிப்பு கொண்ட பணிகளும், குரூப் – II தேர்வின் மூலமாக நகராட்சி ஆணையர் (Municipal Commissioner), வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) போன்ற பணிகளும், குரூப்-IV தேர்வின் மூலமாகக் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணிகளும் கிடைக்கும்.

- மருதூர் செம்மொழிமணி, போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்

இப்போது விற்பனையாகிவரும் ‘இந்து தமிழ் பொது அறிவு 2019’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் சுருக்கமான வடிவம். போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள், திருப்புதல் செய்பவர்களுக்கு உதவும் இதுபோன்ற பல கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x