Published : 29 Jul 2019 11:38 AM
Last Updated : 29 Jul 2019 11:38 AM

ட்ரம்ப்பும் தேர்தலும்

2016 அதிபர் தேர்தலின்போது யாரும் எதிர்பாராத விபத்தாக அது நடந்தது. ஹிலாரிதான் அதிபர் என எதிர்பார்த்த நிலையில் ட்ரம்ப் அதிபரானார். அமெரிக்கர்கள் பலராலேயே இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீதிகளில் இறங்கி இவர் எங்கள் அதிபரல்ல, தேர்தலை மீண்டும் நடத்த வாய்ப்பிருக்கிறதா என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பினார்கள். பெருந்துயரம் நடந்துவிட்டதுபோல மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வலம் வந்தனர்.

அரசியல் அறிவு இல்லாத, வெறுப்பு அரசியலை மட்டுமே அறிந்த ட்ரம்ப் இதோ நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறார். அடுத்த அதிபர் தேர்தலுக்கும் தயாராகிவிட்டார். 2020-ல் நடக்கவிருக்கிற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இனிதே தொடங்கிவிட்டார். இந்த முறை அமெரிக்கர்கள் அவரைத் தேர்ந்தெடுப்பார்களா, நிராகரிப்பார்களா?

இந்தக் கேள்விக்கு விடை தேடும் முன் ட்ரம்ப் போன்ற ஒருவரை அமெரிக்கா ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும், அதில் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே உள்ள உறவு என்ன மாதிரியாக பங்காற்றியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு தனிநபரின் பொருளாதாரத்தோடும் அரசியலுக்குத் தொடர்பிருக்கிறது.

ஒரு நாட்டின் செல்வப் பகிர்வு ‘கினி இண்டெக்ஸ்’ மூலம் அளவிடப்படுகிறது. இது 0-1 என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் ‘கினி இண்டெக்ஸ்’ பூஜ்யமாக இருந்தால் அங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதுவே ‘கினி இண்டெக்ஸ்’ 1-ஆக இருந்தால் அங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கிறது எனலாம். இந்த கினி இண்டெக்ஸின் அளவு நாட்டின் அரசியலில் பிரதிபலிக்கும். ஏற்றத்தாழ்வுகள் குறையும்போது பரம்பரை செல்வந்தர்கள், புது செல்வந்தர்களுக்கு எதிராகத் திரும்புவார்கள். வலதுசாரி மனப்பான்மை அதிகமாக இருக்கும்.

ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்போது இடதுசாரி இயக்கங்களின் எழுச்சி அதிகமாக இருக்கும். அதாவது வறுமையில் வாழும் மக்கள் அதிகமானால் அங்கே புரட்சி, பொதுவுடைமை சித்தாந்தங்கள் வெடிக்கின்றன. அதே மக்களின் வருமானம் அதிகரித்து வாழ்க்கைமுறை மேம்பட்டுவிட்டால் முதலாளித்துவ வலதுசாரி எண்ணம் மேலோங்குகிறது. பெரும்பான்மை மக்களுக்குச் சேர வேண்டியதை சிறுபான்மையினர் எடுத்துக்கொண்டதைப் போன்ற ஒரு பார்வை உருவாகிறது. இப்படி எப்போதெல்லாம் சமநிலை குலைகிறதோ அப்போதெல்லாம் அரசியல் மாற்றங்கள் உண்டாகின்றன.

கினி இண்டெக்ஸ்

இன்றைய சூழலில் அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் இந்த கினி இண்டெக்ஸ் குறைந்துகொண்டே இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் குறைந்ததால் மகிழ்ச்சியாகத்தானே இருக்க வேண்டும், ஆனால் அப்படி இருப்பதில்லை. இங்குப் பிரச்சினை என்னவெனில், உள்ளூர்க்காரர்களைக் காட்டிலும், வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் செல்வ செழிப்புடன் வளர்ந்திருக்கிறார்கள் என்பதுதான்.

அவர்களுடைய உழைப்பு, திறமை அதெல்லாம் யாருக்கும் தேவையில்லை. எங்கிருந்தோ வந்தவர்கள் எனக்குசேர வேண்டிய செல்வத்தைச் சுரண்டி எடுத்துக்கொண்டார்கள் என்ற பார்வையைத் தூண்டி அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர் அரசியல்வாதிகள். ட்ரம்ப் அதைத்தான் செய்தார்.

அமெரிக்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குடியேறிகளும், இஸ்லாமியர்களும்தான் என்று பேசினார். அதற்குக் காரணம், ஒபாமாவின் பலவீனமான பொருளாதாரப் பார்வை என்று அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கர்களைத் தூண்டினார். அவர் திரும்பத் திரும்ப சொன்னதையே சொன்னார். ‘இதற்கு காரணம் அவர்கள்தான்’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். அமெரிக்கர்களுக்கு கண் முன்னே அது உண்மையாகத் தெரிந்தது. ட்ரம்ப் தங்களைக் காக்க வந்த தேவதூதர் என அமெரிக்கர்கள் நம்பினர். அதிபராகத் தேர்ந்தெடுத்தார்கள். பொதுநலப் பார்வையால் பெரும்பான்மை சமூகம் பாதிக்கப்பட்டால் அது விரைவில் சிறுபான்மையினரை நோக்கி சாட்டையைக் கையில் எடுக்கும் என்பது நிரூபணமானது.

ட்ரம்ப்பின் வெற்றி சர்வதேச அளவில் பலம் பெற்றுவரும் வலதுசாரிச் சித்தாந்தத்தின் வெற்றியாகவும், உலகமயமாக்கலின் தோல்வியாகவும் அமைந்தது. அமெரிக்கா மட்டுமல்ல, இன்றைய தேதியில், பல நாடுகளில் தேசியவாத முழக்கங்கள் தீவிரமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இங்கிலாந்து எடுத்த பிரெக்ஸிட் முடிவும் இப்படியானதுதான்.

ட்ரம்ப் மீது நம்பிக்கை

ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில், தான் சொன்னபடி அமெரிக்காவை மேன்மை மிகு நாடாக மாற்றிவிட்டாரா, அமெரிக்கர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுத்துவிட்டாரா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பிவிட்டாரா, இஸ்லாமியர்களை துரத்திவிட்டாரா என்றால், இவை எதுவுமே நடக்கவில்லை. ஆனாலும், அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் மீது இன்னமும் அந்த நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதுதான் அரசியல். அந்த அரசியலை மிக நன்றாகவே செய்துகொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

ஆனால், சமீப காலங்களில் அவருடைய நடவடிக்கைகளில் சமரசங்களும், சகோதரத்துவ வாடையும் அடிப்பதாகப் பலர் குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம், சீனா மீது எடுத்த வர்த்தகப் போர் நடவடிக்கைகளில் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறார். அதைவிட முக்கியமாக ஒரு காலத்தில் கையில் இருக்கும் பொத்தானை அழுத்தி மொத்த நாட்டையும் காலி செய்துவிடுவேன் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த அதே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அணு ஆயுதங்கள் குறித்த விவகாரத்தில் சகோதரத்துவம் பாராட்டுகிறார்.

இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் கால் வைக்காத சர்ச்சை மிகுந்த கொரிய தீபகற்ப எல்லையில் அவருடன் சந்திப்பு நடத்துகிறார். அமெரிக்காவில் யாருக்கும் அனுமதியில்லை என்று விசா நடவடிக்கைகளில் கெடுபிடி காட்டியவர் பின்னாளில் அதிலிருந்து பின்வாங்கினார். அமெரிக்க குடியுரிமை பெறுவதில் பிற நாடுகளுக்கு இருந்த வரம்புகளை உயர்த்தினார்.

உண்மையான முகம்

நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்திய ட்ரம்ப்புக்கும் இந்த நடவடிக்கைகளை எடுத்த ட்ரம்ப்புக்கும் சம்பந்தமே இல்லையே எனும் அளவுக்கு மாற்றங்களைக் காட்டுகிறார். இவையெல்லாம் பார்த்து ட்ரம்ப் திருந்திவிட்டாரா என்று நினைத்தால் அதைவிட நகைச்சுவை ஒன்று இருக்க முடியாது. என்னதான் ட்ரம்ப் அண்டை நாடுகளுடனான உறவில் தன் நிலைப்பாடுகளில் மாற்றங்களை வெளிப்படுத்தினாலும் அவருடைய உண்மையான முகம் என்பது எப்போதும் ஒன்றுதான் என்கிறார்கள் அமெரிக்க அரசியலை உற்றுகவனிப்பவர்கள்.

ஒரு நாட்டின் தலைவனுக்கான அரசியலைப் பொருத்தவரை சொந்த நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றால் மட்டும் போதாது. உலக நாடுகளின் அரங்கிலும் நல்ல பெயர் வாங்க வேண்டியிருக்கிறது. அது உள்நாட்டில் ஆதரவை மேலும் அதிகப்படுத்த வசதியாக இருக்கும். உலக நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புகள், கைகுலுக்கல்கள் அனைத்துமே உள்நாட்டிலுள்ள மக்கள் அனைவரிடத்திலும் முக்கியச் செய்தியாகச் சென்று சேரும். அதுவும் இதுவரை வரலாற்றில் நிகழாத சந்திப்புகளையெல்லாம் நிகழ்த்திவிட்டால் அதைவைத்து பெரிய அளவில் அரசியல் செய்யலாம்.

இந்தக் கணக்கெல்லாம் இல்லாமல் எந்த நாட்டுத் தலைவர்களும் சந்திப்புகளை நிகழ்த்துவதில்லை. அரசியல் என்பதே பிரச்சினைகளை உருவாக்குவதும், அதனை சரி செய்வதும்தானே. ஆனால், நீண்டகால அரசியலுக்கு உதவியாக இருக்கும் எந்தப் பிரச்சினைக்கும் அரசியல்வாதிகள் தீர்வு காண விரும்ப மாட்டார்கள். அதற்கான காரணங்களை அடுக்கி அதன் மூலம் அரசியல் செய்யவே விரும்புவார்கள். அதைத்தான் ட்ரம்ப் செய்துவந்தார். இனியும் அப்படியே செய்வார்.

ஜகஜ்ஜால கில்லாடி

ஆனாலும், அடுத்த முறையும் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவே வதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம், மக்களின் உள்ளுணர்வுகளே அரசியலைத் தீர்மானிக்கின்றன. சமூக வலைதளங்கள் மிக எளிதில் அதைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. அரசியல் விவகாரங்களை மேற்கொள்ளும் ஏஜென்சிகள் சமூக வலைதளங்களைத் தங்களின் முன்னணி ஆயுதமாகப் பயன்படுத்த காரணமே அதுதான். ட்ரம்ப்பும் ட்விட்டரே கதி என்று கிடப்பதும் அதனால்தான். அமெரிக்கர்கள் முற்போக்காகக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் வேறாக இருக்கிறார்கள் என்பதையே ட்ரம்புக்கான ஆதரவு காட்டுகிறது.

சமூக வலைதளங்கள் மூலமாக மக்களின் உள்ளுணர்வு என்ன என்பதை அரசியல் தந்திரிகளால் எளிதில் கணித்துவிட முடிகிறது. தொழில்நுட்ப வசதியும், பணமும் கையில் இருந்தால் அரசியலில் வெற்றி நிச்சயம். ட்ரம்ப் இந்த இரண்டிலும் ஜகஜ்ஜால கில்லாடி.

அரசியலைப் பொருத்தவரை வெற்றி மட்டுமே பிரதானம். வெற்றி சாத்தியமெனில் யாரை வேண்டுமானாலும் தலைவனாக்க அமைப்புகள் தயாராக இருக்கும். ட்ரம்ப் விஷயத்திலும் அதுதான் நடந்தது. 2020-லும் இது நடக்கும். அவருக்கு அரசியல் அறிவு கிடையாது, கொள்கை கிடையாது, முட்டாள்தனமான முதலாளி என எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டாலும், அமெரிக்காவின் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி அதில் வெற்றி காண யாரால் முடியும் என்பதே பிரதான நோக்கம்.

ட்ரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளுடன் இருப்பதால் இந்த முறையும் குடியரசு கட்சியிலிருந்து ட்ரம்ப் முன்மொழியப்படுவார். மேலும் ட்ரம்ப் முன்வைக்கும் அதே தேசியவாத முழக்கங்களை ஆதரிப்பவர்கள்தான் குடியரசு கட்சியில் இருக்கிறார்கள். குடியரசு கட்சி ட்ரம்ப்புக்கு முழு ஆதரவு தரும். ஜனநாயகக் கட்சிதான் இப்போதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஜனநாயகக் கட்சியில் 26 பேர் அதிபர் வேட்பாளர் பரிந்துரைக்கு காத்திருக்கிறார்கள்.

இவர்களில் இருவர் இந்திய வம்சாவளி என்பது கூடுதல் தகவல். ஆனாலும் ட்ரம்ப் அளவுக்கு கீழிறங்கி அரசியல் செய்ய ஜனநாயகக் கட்சியில் யாருமில்லை. இதனால் இவர்கள் யாரும் ட்ரம்புக்கு நிகராகப் போட்டியிட முடியாது. மேலும், ட்ரம்ப் குறித்து விமர்சிக்க இருப்பது மிகக் குறைவுதான். அவருடைய பெண் சகவாசங்கள், முட்டாள்தனமான அறிக்கைகள், ட்விட்டர் பதிவுகள், வெறுப்பு அரசியல், தேர்தல் தகிடுதத்தங்கள் என பட்டியல் இருந்தாலும் இவையெல்லாம் உலகறிந்த விஷயம். அவருடைய பெயரை சீர்குலைக்க இதுவெல்லாம் போதாது.

ஆமாம் நான் மிக மோசமானவன்தான் என்று அம்பலமாகிவிட்ட ஒரு தலைவரை நீங்கள் எத்தனை மோசமாக விமர்சித்தாலும் அது எடுபடாது. எனவே ஜனநாயகக் கட்சி ட்ரம்ப்பை வீழ்த்த வேறு என்ன உத்திகளைக் கையாளப் போகிறது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதுவரையிலும் ட்ரம்ப் மீதான அமெரிக்கர்களின் பார்வையில் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் கண்களால் காணும் எதுவும் நிஜமல்ல. இதையெல்லாம் தாண்டிய ஒரு நிஜம் இருக்கிறது. அதுதான் முடிவுகளைத் தீர்மானிக்கிறது. பார்க்கலாம் 2020-ம் ஆண்டில் அமெரிக்கா என்ன முடிவெடுக்கிறது என்பதை.

- ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x