Published : 29 Jul 2019 11:26 AM
Last Updated : 29 Jul 2019 11:26 AM

ஓய்வு கால தேவையை பூர்த்தி செய்யும் திட்டம்

விரைவில் ஓய்வு பெறப் போகிறீர்கள், உங்களது மாதாந்திர தேவைகளை எப்படி ஈடுகட்டப் போகிறீர்கள் என்ற கவலை வாட்டுகிறதா. அப்படியெனில் பிரதம மந்திரி வாயா வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிப்பது சரியான முடிவாக இருக்கும்.

பிஎம்விவிஒய் என்றால் என்ன?

மத்திய அரசு 2017-ம் ஆண்டு பிரதம மந்திரி வாயா வந்தனா யோஜனா (பிஎம்விவிஒய்) எனும் திட்டத்தை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் (எல்ஐசி) இணைந்து அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் மார்ச் 2020 வரை முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ரூ. 15 லட்சமாகும்.

சலுகைகள்

இந்த திட்டத்தில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அத்துடன் மரணத்துக்குப் பிறகு முதிர்வு கால சலுகைகளும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மொத்த காலம் 10 ஆண்டுகளாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தனி நபர்கள் தங்களுக்கு எத்தகைய இடைவெளியில் பணம் தேவை என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். அதன்படி மாதம்தோறும், காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என வரையறுத்துக் கொள்ளலாம்.

ஓய்வூதியம்

இதில் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச முதலீடானது உங்களுக்கு ஓய்வு காலத்தில் தேவைப்படும் நிதியின் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்ளலாம். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப ஓய்வுக் காலத்தில் கிடைக்கும் ஓய்வூதிய தொகையும் மாறுபடும்.

உதாரணத்துக்கு உங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் தேவைப்பட்டால் குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யுங்கள். ஆனாலும் நீங்கள் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக முதலீடு செய்ய முடியாது. மாதாந்திர ஓய்வூதிய தொகையானது ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரையாகும்.

நீங்கள் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்திருந்தீர்களேயானால் உங்களுக்கு மாதம் ரூ.1,000 கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் உங்களுக்கு ஓய்வூதியம் தேவைப்பட்டால் ரூ.1.49 லட்சம் முதலீடு செய்தால் காலாண்டுக்கு ரூ. 3 ஆயிரம் கிடைக்கும். இதில் நீங்கள் அதிகபட்சம் ரூ.14.90 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் ரூ.30 ஆயிரத்தை காலாண்டுக்கு ஒருமுறை பெறலாம்.

அரையாண்டுக்கு ஒரு முறை பணம் வந்தால் போதும் எனில் குறைந்தபட்சம் ரூ.1.47 லட்சத்தை முதலீடு செய்து அரையாண்டுக்கு ஒரு முறை ரூ.6 ஆயிரத்தை பெறலாம். அதிகபட்சமாக ரூ.14.70 லட்சத்தை முதலீடு செய்து அரையாண்டுக்கு ரூ.60 ஆயிரத்தைப் பெறலாம். ஆண்டுக்கு ஒரு முறை எனில் குறைந்தபட்சம் ரூ.1.44 லட்சத்தை முதலீடு செய்து ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்தைப் பெறலாம். இதில் அதிகபட்சமாக ரூ.14.40 லட்சத்தை முதலீடு செய்து ஆண்டுக்கு ஒரு முறை ரூ.1.20 லட்சத்தைப் பெறலாம்.

உங்கள் தேவைக்கேற்ப முழுத் தொகையை செலுத்தி இத்திட்டத்தில் முதலீடு செய்து உங்களுக்கு தேவையான கால இடைவெளியில் வட்டி தொகையை ஓய்வூதியமாக பெறலாம்.

இத்திட்டத்தை தேர்வு செய்த நபர் முதிர்வு காலத்துக்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டால், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டதோ அது அவருடைய வாரிசுக்கு வழங்கப்படும். காப்பீட்டு காலம் வரை உயிருடன் இருந்தால் அவருக்கு காப்பீட்டு தொகை மற்றும் முதலீடு செய்யப்பட்ட தொகை இறுதி தவணையில் வழங்கப்படும்.

தகுதி

இத்திட்டத்தை 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் தேர்வு செய்யலாம். உயர் வயது வரம்பு கிடையாது. அருகில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) அலுவலகத்தையோ அல்லது எல்ஐசி இணையதளத்துக்கோ சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மிகவும் ஏற்றதாகும். இது மற்ற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (எஸ்சிஎஸ்எஸ்) விட சிறந்தது. இதில் ஆண்டுக்கு 8.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 80சி பிரிவின்கீழ் இதற்கு வருமான வரி விலக்கும் உண்டு. உரிய காலத்துக்கு முன்பாக இத்திட்டத்திலிருந்து வெளியேறினாலும் அதிகபட்சமாக 1 சதவீதம் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது.

வட்டி விகிதம்

பிஎம்விவிஒய் திட்டத்துக்கு 8 சதவீதம் (மாதாந்திரம்), 8.3 சதவீதம் (ஆண்டுக்கு) வழங்கப்படும். எல்ஐசியில் முதல் தவணை ஓய்வூதியத்தை நெப்ட் மூலம் அல்லது ஆதார் அடிப்படையிலான பேமென்ட் வழிகளில் வழங்குகிறது. வாடிக்கையாளர் தேர்வு செய்யும் பண வழங்கல் முறை அடிப்படையில் வட்டி தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் அளிக்கப்படும் வட்டிக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். வட்டி தொகைக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் விலக்கு பெற முடியாது. முதிர்வு காலத்தில் வழங்கப்படும் தொகைக்கு வரி பிடித்தம் கிடையாது.

அவசர தேவைக்கு…

இத்திட்டத்தில் சேர்ந்த பிறகு ஏதேனும் அவசர தேவை ஏற்படின் இத்திட்டத்தின் மூலம் கடன் பெறலாம். ஆனாலும் 3 ஆண்டுகள் முடிந்திருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும். அதிகபட்சம் நீங்கள் வாங்கிய தொகையில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.

மிகவும் அசாதாரண சூழலில் அதாவது தீவிர சிகிச்சை தேவைப்படும் நோய்கள் ஏற்படின் திட்டத்திலிருந்து முன்கூட்டியே வெளியேற அனுமதிக்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்த தொகையில் 2 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகு ஒருவேளை உங்களுக்கு பிடிக்காமல் போனால் நேரடியாக பணம் செலுத்தியிருந்தால் 15 நாட்களுக்குள்ளாக இதிலிருந்து வெளியேறலாம். ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்தால் 30 நாட்களுக்குள் வெளியேறலாம். வெளியேறுவதற்கான உரிய காரணத்தை தெரிவித்துவிட்டு வெளியேற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

- நளினகாந்தி.வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x