Published : 29 Jul 2019 11:21 AM
Last Updated : 29 Jul 2019 11:21 AM

எண்ணித் துணிக: போட்டி இருந்தால் வாய்ப்பு அதிகம்!

ஒரு விஷயம் தவறிப் போனால் ‘முன்னமே தெரியாம போச்சே’ என்று புலம்புகிறோம். கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனால் ‘எனக்கென்ன ஜோசியமா தெரியும், கிடைக்காதுன்னு’ என்று ஆதங்கப்படுகிறோம். நடப்பதை கவனிக்கலாம், ஆனால் நடக்க இருப்பதை கணிக்க முடியுமா? அதுவும் புதிதாகத் தொடங்கும் ஸ்டார்ட் அப்பில்.

தொழில் தொடங்க பிடித்த ஐடியா சரியே, அறிமுகப்படுத்தும் பொருளுக்கு மார்க்கெட் உண்டு, செய்யப்போகும் தொழில் தழைக்குமா என்று காட்டும் மாயக்கண்ணாடி எங்கும் இல்லை. அதை கணித்துக் கூறும் மகாஜோசியரும் இல்லை. அப்படி எதேனும் யாராவது இருந்தால் சொல்லி அனுப்புகிறேன். அதுவரை அந்த வேலையை நீங்கள்தான் செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது என்பதைப் பற்றிய விவாதம் தான் இன்றைய டாபிக்!

விற்க முடியாமல் மூடப்பட்ட சுமார் நூறு ஸ்டார்ட் அப்களை போஸ்ட் மார்ட்டம் செய்த அமெரிக்க ஆய்வு ஒன்று தோல்விக்கான முதல் காரணம் விற்க முயன்ற பொருளுக்கு வாடிக்கையாளர் டிமாண்ட் இல்லாததே என்கிறது. நாற்பத்தி இரண்டு சதவீத ஸ்டார்ட் அப்ஸ் தோல்வியை தழுவுவது இதனால்தானாம். பணமில்லாமல் பூட்டா கேஸ் ஆனவை முப்பது சதவீதமே. 

தொழில்கள் வீழ்வது போட்டி நெருக்கடியால் இருக்குமோ என்று பார்த்தால் அப்படி ஃபனாலானவை இருபது சதவீதத்துக்கும் குறைவு. நீங்கள் தொடங்க நினைக்கும் ஸ்டார்ட் அப் போஸ்ட் மார்ட்டம் லிஸ்ட்டில் சேராமல் தப்பிக்க, உங்கள் ஐடியா சரியானதா என்று பார்ப்பது அத்தியாவசியமாகிறது.

முதல் காரியமாக போட்டி அதிகமிருக்கும் பொருள் பிரிவில் நுழையக் கூடாது என்று நினைக்காதீர்கள். முதல் ஆளாய் ஒரு பொருள் பிரிவில் நுழைவது முதன்மைதான். ஆனால், எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. அதனால் போட்டி இருக்கிறதே என்று நுழையாமல் இருக்காதீர்கள். 

ஏற்கெனவே பல போட்டியாளர்கள் இருந்தால் அந்த பொருள் பிரிவில் டிமாண்ட் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. அவர்கள் அளிக்க தவறிய பயன் ஏதேனும் உண்டா, அதை உங்கள் புதிய பொருளில் தந்து மக்களை கவரும் வழியை ஆராயுங்கள். ‘கூகுள்’ பிறந்தது இப்படித்தான்.

நீங்கள் நுழைய நினைக்கும் பொருள் பிரிவில் போட்டி அதிகம் இருந்தால் இன்னொரு பயனும் உண்டு. பலர் போட்டி போட்டு கத்துவதால் அப்பொருள் பிரிவு பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். அதன் விற்பனை கூடும். செல்ஃபோன், டிடிஎச் என்று பல பொருள் பிரிவுகள் வளர்ந்தது அதில் போட்டி அதிகரித்த பின்னர்தான்.

நீங்கள் விற்க நினைக்கும் பொருள் பிரிவு பற்றியோ அது தீர்க்க நினைக்கும் தேவை பற்றியோ மக்கள் இணையத்தில் தேடுகிறார்களா என்று ஆராயுங்கள். தங்களுக்கு தெரியாததை, உணர்ந்த தேவைகளை, பல கேள்விக்கான விடையை ‘கூகுள்’ செய்து தேடிப் பெறுவது பெருகி வருகிறது. மாதா பிதா கூகுள் தெய்வம் என்று குரு கூகுளாய் மாறியிருக்கும் காலம் இது.

உங்களுக்கு தேடத் தெரியவில்லை என்றால் தேர்ந்தவர் உதவியோடு இணையத்தில் keyword research செய்யுங்கள். அப்படி ஆராய்வதன் மூலம் மக்களுக்கு எந்த பிரச்சினை பிரதானமாய் இருக்கிறது, எந்த தேவைக்கு தீர்வு தேடுகிறார்கள் என்பது புரியும். உங்கள் ஐடியா ஒர்க்அவுட் ஆகுமா என்பதும் தெரியும்!

இன்னொன்றும் செய்யலாம். விற்க முயலும் பொருள் பற்றி நீங்கள் டார்கெட் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கான்செப்ட் டெஸ்ட்டிங் செய்து பாருங்கள். மக்கள் பொருள் வாங்குவதில்லை. மார்க்கெட்டரின் வாக்குறுதியைத்தான் வாங்குகிறார்கள். சிந்தித்துப் பாருங்கள். புதிய பொருள் பற்றி கேள்விப்படுகிறீர்கள். இன்னின்ன பயன் தரும் என்று அவர்கள் கூறுவதை கேட்டு அது பிடித்திருந்தால் வாங்குகிறீர்கள். 

ஆக வாக்குறுதியை நம்பி வாங்குகிறீர்களே தவிர அப்பொருளை வாங்கி பயன்படுத்திப் பார்க்கும் வரை அப்பொருள் பற்றி உண்மை உங்களுக்கு தெரிவதில்லை. ஆக, உங்கள் ஐடியாவை பொருளாய் தயாரித்து அதன்பின்தான் அதை மக்களிடம் விசாரிக்க வேண்டும் என்றில்லை. விற்க முயலும் பொருள் பற்றிய விவரங்களை வாடிக்கை யாளர்களிடம் எழுத்து மூலமாகவோ அல்லது நேரில் விளக்கியோ அப்பொருள் பற்றி அவர்கள் கருத்துகளை அறிய முயலலாம். 

அதாவது உங்கள் ஐடியாவை ஒரு கான்செப்டாக்கி அதை வாடிக்கையாளர்களிடம் காட்டி ஃபீட்பேக் பெறுவது. இதை நீங்களே செய்யாமல் தேர்ந்த மார்க்கெட் ஆய்வாளர் மூலம் செய்தால் துவங்க நினைக்கும் ஐடியா போனியாகுமா, மக்கள் வாங்குவார்களா என்று தெரிந்துகொள்ள முடியும்.

இதையெல்லாம் செய்தால் ஐடியா சரி என்று முன்கூட்டியே தெரியும், வெற்றி நிச்சயம் என்று எந்த காரண்டியும் கிடையாது. பிசினஸ் பல காரணங்களால் தோற்கலாம். அதில் முக்கியமான ஒன்று உங்கள் ஐடியாவிற்கு டிமாண்ட் இல்லாமல் இருப்பது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆய்வுபடி நாற்பத்தி இரண்டு சதவீத ஸ்டார்ட் அப்ஸ் தோல்வியை தழுவுவது அதன் பொருளுக்கு டிமாண்ட் இல்லாத காரணத்தால்தான். 

ஓரளவேனும் டிமாண்ட் இருக்கிறதா என்று சீர்தூக்கிப் பார்க்க இந்த வழிகள் உங்களுக்கு உதவும். தோல்வியடைந்த அந்த நாற்பத்தி இரண்டு சதவீத ஸ்டார்ட் அப்ஸ் டிமாண்ட் இருக்கிறதா என்று முன்னாலேயே ஆய்வு செய்திருந்தால் ஒரு வேளை தோற்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் அந்த லிஸ்ட்டில் சேராமல் இருக்க உங்கள் ஐடியாவை ஒரு முறைக்கு இரு முறை செக் செய்யுங்கள். செல்லவேண்டிய இடத்திற்கு ஒன்றுக்கு இரு முறை வழி விசாரித்துக்கொண்டு செல்வது தப்பில்லையே!

- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x